May 11, 2014

முள்ளியவளையில் கடை வெடித்து எரிந்ததன் மர்மம் என்ன?!

காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காகவே முல்லைத்தீவு,
முள்ளியவளையில் கடந்த 5ஆம் திகதி பெரும் கடை தீ வைக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர். இந்தக் குற்றச்சாட்டின் கீழ் கடை உரிமையாளரையும் அங்கு பணி புரிந்தவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.   
அதிகாலையில் பெரும் வெடிச் சத்தத்துடன் கடை வெடித்துச் சிதறி தீப்பிடித்து எரிந்து நாசமானது. குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த போது தவறுதலாக வெடிப்பு நிகழ்ந்ததா என்ற கோணத்தில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸார் முதலில் விசாரணைகளை நடத்தி வந்தனர்.    ஆனால் இது காப்புறுதிப் பணத்தைப் பெறுவதற்காகச் செய்யப்பட்ட நாசவேலை என்று தெரிய வந்துள்ளது என அவர்கள் இப்போது கூறுகின்றனர்.
அதிக கடன் சுமையைச் சமாளிப்பதற்காக இந்த நாச வேலையில் அவர்கள் இறங்கியருக்கலாம் என்றும் பொலிஸார் கூறினர்.   70 லீற்றர் பெற்றோலினை வாங்கி அதைக் கடையின் உள்ளே ஊற்றி தீ வைக்கப்பட்டதாகப் பொலிஸார் கூறுகின்றனர். பெற்றோல் வாங்கப்பட்ட எரிபொருள் நிலையத்தைத் தாம் கண்டறிந்துள்ளனர் என்றும் அவர்கள் கூறினர்.
கடை உரிமையாளரான புதுக்குடியிருப்பு 7ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த கணேசலிங்கம் திலீபன் (வயது 24) இந்தத் திட்டத்தைத் தீட்டியவர் என்றும் கடையில் பணியாற்றிய உடுத்துறையைச் சேர்ந்த நிதர்சன் (வயது 24) அதனை நிறைவேற்றினார் என்றும் பொலிஸார் கூறுகின்றனர்.    கடை முழுவதும் பெற்றோலை ஊற்றி கடைக்குத் தீ வைத்தபோது எதிர்பாராத விதமாக நிதர்சனின் இரு கால்களிலும் பரவி எரிகாயங்கள் ஏற்பட்டுள்ளன என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இதனை அடுத்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிதர்சனும் கடை உரிமையாளர் திலீபனும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நான்காம் மாடிக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.    பயங்கரவாதச் செயல்களுடன் இவர்களுக்கு தொடர்புகள் ஏதும் இருக்கிறதா என்று மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே அவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே எரிந்தழிந்த கடைக் கட்டடத்தினதும் அதன் அருகே இருந்து சேதமடைந்த வீட்டினதும் உரிமையாளரான முள்ளியவளையைச் சேர்ந்த இராசையா உருத்திரமூர்த்தி தனது சொத்துக்களுக்கு நாசம் விளைவித்தார்கள் என்று அவர்கள் இருவருக்கும் எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சம்பவத்தில் அவரது கடை முற்றாக அழிந்துபோனதுடன்  அதனருகில் இருந்த அவரது வீடும் பெருமளவில சேதமானது.

No comments:

Post a Comment