September 2, 2016

வவுனியாவைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு தமிழகத்தில் நடக்கும் கொடுமை!!

வவுனியாவைச் சேர்ந்த கணவன் மனைவிக்கு தமிழகத்தில் நடக்கும் கொடுமை!! வவுனியா அருகே உள்ள மகரம்மை குளத்தை சேர்ந்தவர் சுஷ்யந்த் (வயது23). விவசாயி. இவருடைய மனைவி துவாரகா(22). இவர்களது மகள் சகிதா(1). துவாரகா தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.
சுஷ்யந்த், துவாரகா, சகிதா ஆகிய 3 பேரும்கடந்த ஜூன் மாதம் 7-ந்தேதியன்று கச்சத்தீவில் உள்ள ஆலய திருவிழாவுக்கு பொதுமக்களுடன் ஒரு படகில் வந்தனர். அங்கு பிரார்த்தனையை முடித்துக்கொண்டு கச்சத்தீவை சுற்றி பார்த்தனர். பிறகு படகுத்துறைக்கு வந்தனர். அப்போது அவர்கள் வந்த படகை காணவில்லை.

இதைத்தொடர்ந்து படகுத்துறையில் நின்றுகொண்டிருந்த பைபர் படகில் ஏறி தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது கடலில் ஏற்பட்ட ராட்சத அலையால் படகில் கட்டப்பட்டு இருந்த கயிறு அறுந்து படகு கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டது. இந்தநிலையில் தூங்கி எழுந்த சுஷ்யந்த் மற்றும் துவாரகா தாங்கள் நடுக்கடலில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அப்போது கடலில் யாரும் மீன்பிடிக்க வராததாலும், உணவு இல்லாததாலும் அவர்கள் மயங்கி விழுந்தனர்.

இதைத்தொடர்ந்து 4 நாட்களாக நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு அருகே கடலில் தத்தளித்த அவர்களை மீன்பிடிக்க கடலுக்கு சென்ற நாகை மீனவர்கள் மீட்டு நாகைக்கு அழைத்து வந்தனர்.

இதன்பின்பு 3 பேரும் நாகை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்பு சுஷ்யந்த், துவாரகா, சகிதா ஆகிய 3 பேரையும் வேதாரண்யம் கடலோர போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பாஸ்போர்ட் இல்லாமல் வந்ததாக சுஷ்யந்த், துவாரகா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி தீனதயாளன் அவர்களை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து சுஷ்யந்த், துவாரகா, சகிதா ஆகிய 3 பேரும் சென்னை புழல்சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று வேதாரண்யம் கோர்ட்டில் 3 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வருகிற 14-ந்தேதி வரை காவலை நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியும், யாரும் ஜாமீன் தர முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் ஈழ உணர்வாளர்கள் என பல அரசியல் கட்சிகள் இருந்தும் இந்த குடும்பம் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருப்பதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment