September 1, 2016

‘காணிகளை இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் வழங்க நாம் இடங்கொடுக்கமாட்டோம்”

வட்டுவாகலில் பொதுமக்களினுடைய காணிகளை கடற்படைக்கு வழங்குவதற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செயற்பாடா நல்லிணக்கம்? இது இன நல்லிணக்கத்தின் அடையாளம் அல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையானது தமிழ் மக்களினதும் உரிமைகளை வலிந்து பறிக்கும் செயற்பாடாகும்.

வட்டுவாகல் பகுதியில் கடற்படையினரின் தேவைகளுக்காக கடந்த மூன்றாம் திகதி காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து தமது காணிகளை விடுவிக்கக் கோரியிருந்த போதிலும் மீளவும் காணி அளவீடு இடம்பெறவுள்ளது.

தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி ஆயிரக்கணக்கான பொதுமக்களின் காணிகள் இராணுவத்தினராலும் கடற்படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில் வட்டுவாகல் பகுதியில் 617 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் முயற்சியில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டுள்ளனர். இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது மக்கள் பல்வேறுபட்ட துன்பங்களின் மத்தியில் வாழ்ந்துவரும் இவ்வேளையில் படையினரின் தேவைகளுக்காக எமது மக்களின் காணிகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றமையால் மக்ககளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

மீள்குடியேற்றப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்துள்ள இந்நிலையில் எமது மக்கள் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர முடியாதவாறும் இயல்பு வாழ்க்கை வாழ முடியாதவாறும் இராணுவம் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது.

எனவே, எமது மக்களின் காணிகளை மீளவும் அளவிட்டு சுவீகரிக்கும் செயற்பாடு கண்டிக்கத்தக்கதாகும்.

எமது மக்கள் தமது வாழ்வாதாரமாக விவசாயத்தையும் மீன்பிடியையும் நம்பி வாழ்பவர்கள். இவர்களுடைய காணிகளைப் பறிப்பதனூடாக ஏற்கனவே யுத்தத்தில் பேரிழப்பைச் சந்தித்து நலிவடைந்துள்ள எமது மக்களின் வாழ்வாதாரம் மீளவும் பாதிக்கப்படும்.

எனவே, எமது மக்களின் காணிகளை மேலும் இராணுவத்தினருக்கும் கடற்படையினருக்கும் வழங்க நாம் இடங்கொடுக்கமாட்டோம்” என்றார்.

No comments:

Post a Comment