August 12, 2016

இலங்கை விரையும் யுனேஸ்கோ பணிப்பாளர்!

யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஐரீனா போகோவா, முதல்முறையாக ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.


நாளை மறுதினம் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ள யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அங்கு தங்கியிருப்பார் என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது சமாதானம் மற்றும் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் மற்றும் 2030 ஆம் ஆண்டு வரை நீடித்த அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் மேம்பாடு ஆகியவற்றுக்கான யூனேஸ்கோவின் ஒத்துழைப்பை அவர் உறுதிப்படுத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிகழ்வுகள், உலக பாரம்பரிய மக்கள் பகுதிகளுக்கான விஜயம் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புக்கள் ஊடாக நாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ள மாற்றங்களை அவர் அறிந்துகொள்வார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சமாதானத்தை கட்டியெழுப்புதல் மற்றும் அனைவருக்குமான நிலைத்த எதிர்காலம் ஆகியவற்றுக்கான ஒத்துழைப்புக்களை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதி கதிர்காமர் நிலையத்தில், சமாதானம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான பொதுவிரிவுரை ஒன்றையும் போகோவா நடத்தவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட அரசாங்க உயர்மட்ட உறுப்பினர்களையும் யூனேஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment