June 28, 2016

திருகோணமலை கிளிவெட்டி படுகொலை விசாரணை இன்று ஆரம்பம்!

திருகோணமலை கிளிவெட்டிப் பிரதேசத்தில், 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியன்று இரவு, பொதுமக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள், இன்று செவ்வாய்க்கிழமையும் (28)
இரண்டாவது நாளாக இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்;.
அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில், ஏழுவர் கொண்ட ஜூரிகள் முன்நிலையில் இவ்விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகத் தெரிவித்த பொலிஸார், நேற்றய தினம்,  நடராஜா  தவமணி என்பவர் தனது கணவன்  வடிவேல் நடராஜாவின் கொலை தொடர்பாக  சாட்சியமளித்ததுடன்,  தனது கணவரைச் சுட்டுக்கொலை செய்தவரையும் அடையாளங்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், 20 பேருக்கு அழைப்பாணை வழங்கப்பட்ட போதும் அதில், நால்வர் இயற்கை மரணமானதால் அவர்களது உறவினர்கள் பிரசன்னமாகியிருந்தாகவும் தெரிவித்தனர்.
ஆயினும், தொடரும் விசாரணைகளில் இறந்தவர்கள் சார்பான உறவினர்கள் சமூகமளிக்கத் தேவையில்லை என நீதிமன்றம் நேற்றையதினம் அறிவித்தது. இதற்கிணங்க ஏனையவர்கள் இன்றைய விசாரணைகளுக்கு சமுகமளித்துள்ளனர். 20 வருடங்களின் பின்னர் இவ்விசாரணைகள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியன்று, கிளிவெட்டிக்கு அருகில் இருக்கும் தெகிவத்தை முகாமில் கடமையில் இருந்த இராணுவத்தினர், மதுபோதையில்
திருகோணமலை- மட்டக்களப்பு நெடுஞ்சாலைக்கருகில் அமைந்துள்ள குமாரபுரம் கிராமத்துக்குள் புகுந்து, துப்பாக்கியால் சரமாரியாகச்சுட்டு, 26பேரைப் படுகொலை செய்திருந்தனர்.
அதிலோர் இளம்பெண் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாக, சம்பவத்தை நேரில் கண்டவர்கள், மூதூர் நீதிமன்றத்தில் இடம்பெற்ற அடையாள அணிவகுப்பின்போது சாட்சியமளித்திருந்தனர்.
குறித்த படுகொலை தொடர்பாக, அப்போது, மூதூர் நீதிமன்றில் நீதவானாக இருந்த சுவர்ணராஜா முன்நிலையில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இதன்போது குறித்த முகமைச்சார்ந்த 9 படைவீரர்கள்  பொது மக்களால் அடையாளம் காணப்பட்டனர். யுத்த சூழல் நிலவியதால், எதிராளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, இவ்வழக்கு அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில்,  20 வருடங்களின் பின்னர், நேற்றுத் திங்கட்கிழமை(27) சாட்சியம் வழங்க, 20பேருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. அவர்களில், நடராஜா  தவமணி என்பவர், தனது கணவன்  வடிவேல் நடராஜாவின் கொலை தொடர்பாக வாக்குமூலங்களை வழங்கியதுடன், எதிராளிகளாகப் ஆஜர்படுத்தப்பட்டவர்களில் அறுவரில் ஒருவரை இனம் காட்டினார்.

No comments:

Post a Comment