அம்பாறை மாவட்டத்திலிருந்து செவ்வாய்க்கிழமை (14) இரவு புறப்பட்ட இரண்டு பஸ் வண்டிகள் மீது இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நான்கு பேர்; காயமடைந்துள்ளனர். கல்முனைப் பிரதேசத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட பஸ் வண்டி மீது
மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கண்ணாடித் துகள்கள் குத்திக் காயமடைந்த சாரதியும் பயணிகள் மூவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
கல்முனை -பருத்தித்துறை சேவையில் ஈடுபடும் வாழைச்சேனை இ.போ.ச. சாலைக்குச்; சொந்தமான இந்தப் பஸ் வண்டி மட்டக்களப்பு, கோயில்குளம் பகுதியால் சென்றுகொண்டிருந்தபோதே, தாக்குதலுக்கு உள்ளானது. இந்தப் பஸ் வண்டி மீது சோடாப் போத்தல்களால் வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த பயணிகள்; மூவர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர்; சிகிச்சை பெற்றுக்கொண்டு திரும்பியுள்ள அதேவேளை, ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களான ரி.யோகராஜா (வயது 55), முகம்மட் தௌபீக் (வயது 42), பி.தனேஷ்ராஜ் (வயது 24) ஆகிய பயணிகளே காயமடைந்துள்ளனர். இதேவேளை, பஸ் சாரதியான மன்னாரைச் சேர்ந்த பி.சிவராஜா (வயது 39) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாக்குதலின்போது குறித்த பஸ் வண்டியின் கண்ணாடிகள்; சேதமாகியதாக வாழைச்சேனை இ.போ.ச. சாலை முகாமையாளர் எம்.ஐ.அப்துல் அஸீஸ் தெரிவித்தார்.
இது இவ்வாறிருக்க, பொத்துவிலிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்த இ.போ.ச. பஸ் வண்டி மீது தனமன்வில பிரதேசத்தில் கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பொத்துவில் இ.போ.ச. சாலைக்குச் சொந்தமான இந்தப் பஸ் வண்டி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, பஸ் வண்டியின் பின்புறக் கண்ணாடி சேதமடைந்துள்ளதாக பொத்துவில் சாலை முகாமையாளர் எம்.எம்.அஜ்வத் தெரிவித்தார். இந்த தாக்குதல்ச் சம்பவங்கள் தொடர்பில் ஸ்ரீ பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment