June 15, 2016

16 பேருக்கு மரண தண்டனை – இந்தோனிசியா !

ஜகார்த்தா – ரமடான் விடுமுறைக்குப் பிறகு 16 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது இந்தோனிசிய அரசாங்கம்.
இதற்கு முன்பு கடந்த 2015-ம் ஆண்டு 12 வெளிநாட்டினருக்கு போதை மருந்து
கடத்தல் தொடர்பான குற்றத்தின் படி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
“புனித ரமடான் மாதத்திற்குப் பிறகு, ‘உடனடியாக’ மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்குத் தண்டனை நிறைவேற்றப்படும்” என இந்தோனிசிய தலைமை வழக்கறிஞர் அலுவலகத்தைச் சேர்ந்த பேச்சாளர் மொகமட் ரம் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், “கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு, அரசாங்கம் யாருக்கும் மரண தண்டனை நிறைவேற்றவில்லை. காரணம், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் அரசாங்கம் முயற்சி செய்து வந்தது. ஆனால் இப்போது ரமடானுக்குப் பிறகு சில நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்” என்றும் ரம் தெரிவித்துள்ளார்.
வழக்கமாக மரண தண்டனைகள் நிறைவேற்றப்படும் நூசாகம்பாங்கன் தீவில் தான் இம்முறையும், துப்பாக்கியால் சுடப்பட்டு கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ள அந்த 16 பேரும் என்ன குற்றங்களில் ஈடுபட்டவர்கள் என்பதை இந்தோனிசிய அரசு இன்னும் வெளியிடவில்லை.
எனினும், போதை மருந்துக் கடத்தல் தொடர்பான குற்றங்களில் இந்தோனிசிய அரசு பாரபட்சமின்றி கடும் தண்டனைகளை வழங்கி வருகின்றது.
கடந்த 2014-ம் ஆண்டு இந்தோனிசிய அதிபராக ஜோகா விடோடோ பதவி ஏற்றதில் இருந்து போதை மருந்துக் கடத்தலுக்கு எதிராக இந்தோனிசிய அரசு கடுமையாகப் போரிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment