May 29, 2016

யாழ்.கந்தரோடையில் வீசப்பட்டது “புலிகளின் தமிழன்” குண்டு!

விடுதலைப்புலிகளின் உள்ளூர் தயாரிப்பான கைக்குண்டு வீசி யாழ்.கந்தரோடை பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.


யாழ்,கந்தரோடை மடத்தடி பகுதியில் உள்ள தேவராஜா முருகதாசன் என்வரின் வீட்டின் மீதே நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி அளவில் குறித்த கைக்குண்டு வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

வீசப்பட்ட குண்டானது வெடிக்காததால் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
குண்டு வீசப்பட்டதனை அடுத்து வீட்டு உரிமையாளரால் உடனடியாக சுன்னாக பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் இராணுவத்தினரின் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினருக்கு அறிவித்ததை அடுத்து அவர்கள் வந்து குண்டினை மீட்டு சென்றுள்ளனர்.

நேற்றிரவு வீட்டில் இருந்த வேளை வீட்டின் முன்பாக ஏதோ விழுந்தது போன்ற சத்தம் கேட்டு சென்று பார்த்த போது “சொப்பின்பை” யில் சுற்றப்பட்ட நிலையில் இக் குண்டு காணப்பட்டது அதனை அடுத்து பொலிசாருக்கு தகவல் வழங்கினேன்.

சில மாதங்களுக்கு முன்பாக எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி உள்நுழைந்த சிலர் எங்கள் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டார்கள். அது தொடர்பில் சுன்னாக பொலிஸ் நிலையத்தில் செய்யபப்ட்ட முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் மூவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி இருந்தனர். நீதிமன்றினால் அவர்களுக்கு இரண்டு வருட சிறை த்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

அது தவிர வேறு எதுவும் தற்போது என்னால் கூற முடியாது உள்ளது என வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.

குறித்த குண்டானது விடுதலைப்புலிகளினால் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குன்டாகும். இக் கைக்குண்டு விடுதலைப் புலிகள் “தமிழன் ” குண்டு என பெயர் சூட்டி இருந்தனர். இக் குண்டை இறுதி யுத்தம் இடம்பெற்ற கால பகுதியில் விடுதலைப்புலிகள் இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொள்ள பயன்படுத்தினர்.

குறித்த குண்டினை ஏனைய கைக்குண்டுகள் போன்று குண்டின் மீது உள்ள கிளிப்பை அகற்றி வீசினால் வெடிக்காது. இக் குண்டின் கிளிப்பை அகற்றிய பின்னர் அதன் மேல் பகுதியை கைகளினால் அல்லது வேறு வகையில் குத்திய பின்னர் வீசினால் தான் குண்டு வெடிக்கும்.

இக் குண்டினை வீசியவர்களுக்கு அதனை வீசுவதற்கான பொறிமுறை தெரியாததாலையே அக் குண்டு வெடிக்கவில்லை. உரிய முறையில் வீசி இருந்தால் அக் குண்டு வெடித்து சேதத்தை உருவாக்கி இருக்கும்.

இக் கைக்குண்டு தற்போது யாழ்ப்பணத்திற்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டது ? . அது யாழில் உள்ள இளைஞர் குழுக்களின் கைகளில் எவ்வாறு கிடைத்தது ? இதனை வீசியவர்கள் யார் ? என்பது தொடர்பில் இதுவரை எதுவும் தெரிய வரவில்லை.

இதேவேளை கடந்த மாதம் யாழில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டுக்குழு ஒன்றிடம் இருந்து இரு கைக்குண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்து இருந்தனர்.

அதேவேளை கடந்த வருடம் யாழில் கைது செய்யப்பட்ட “ஆவா” குழு எனும் குழுவிடம் இருந்தும் புதிய ரக கைக்குண்டுகள் இரண்டும் பொலிசாரினால் மீட்கப்பட்டு இருந்தன. என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment