May 29, 2016

புலத்திலிருக்கும் புலிகளே விழித்து எழுங்கள்…! புலம்பெயர் தமிழர் ஊடக மையம்!

அன்பார்ந்த முன்னாள் போராளிகளே….

எமது தாய்த்தமிழீழத்தில் உங்கள் அருகிருந்து வீழ்ந்தவர்களை ஒருகணம் நினைத்தும், உங்கள் தலைவனின் பாதையை மறுகணம் நினைத்தும் புலத்தினில் உள்ள

அனைவரும் இணைந்து புதியதோர் அரசியல் புலிகளை வளர்த்து புலம்பெயர் அனைத்து அமைப்புக்களையும் உங்கள் பலத்திற்கு ஆதரவாக செயற்படுவதற்கு ஒரு இறுக்கமான அரசியல் முடிவினை எடுத்து புலம்பெயர் மக்களை புதிய திசைநோக்கி நகர்த்துவதற்கு நீங்கள் அனைவரும் ஓரணியில் ஒன்றுசேருங்கள்.

ஈழத்தில் எமது இனத்திற்கான தேசிய விடுதலைப் போராட்டத்தினை எந்தவித நடுநிலைத் தன்மையும் இல்லாமல் ஓரவஞ்சகமாக ‘இந்த உலகநாடுகள்’ இலங்கை சிங்களவர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டு எம்மை வெறுமனே பயங்கரவாதி என்ற முத்திரையை குத்தி எமது இனத்திற்கான உண்மையான தேசிய விடுதலைப் போராட்டத்தினை தமது இரும்புக்கரம்கொண்டு திட்டமிட்டு நசுக்கியுள்ளார்கள்.

உலகத்தின் இந்த ஒருதலைப்பட்சமான நயவஞ்சக செயற்பாடுகளுக்கு எதிராக அரசியல் ரீதியாக நாமொரு பலமான அழுத்தங்களை இந்த உலகநாடுகளைநோக்கி நாம் தொடர்ந்து கொடுக்காவிட்டால் வெறுமனே நாம் பயங்கரவாதியென்ற பட்டத்தோடு இந்த உலகம் அழியும்வரை இருக்கப்போவதை யாராலும் தடுத்துவிட முடியாது’ மேலும் எமது இனவிடுதலைக்கான ஆயுதப்போராட்டத்தில் எமது எதிரியாகிய சிங்கள ஆட்சியாளர்களை எமது இனத்தின் விடுதலைக்காக நாம் அவர்களின் இலக்குகளைத்தேடி அழித்தொழித்தபொழுது அந்த நிகழ்வுகளை வெறுமனே பயங்கரவாதமென்று கூறும் இந்த உலகநாடுகளிடம் அதே எதிரிகளால் நாம் எதிரிகளாகக் கருதப்பட்டு பதிலுக்கு மிகக்கொடுமையாக அழிக்கப்பட்டதை நீங்கள் ஜனநாயகம் என்று கருதுகிறீர்களா?என்ற கேள்விகளை எழுப்பி புலத்தினில் ஒரு புதிய அரசியல் புரட்சியை செய்யவேண்டிய கடப்பாட்டினில் முன்னாள் போராளிகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் இருந்துவருகிறீர்கள்.

மேலும் போரியல் ரீதியாக எமது இனத்துக்கான விடுதலையை முன்நிறுத்தி உங்கள் உயிரிலும் மேலாக நேசித்த தமிழீழத் தாயகத்தை எதிரியிடம் இருந்து மீட்பதற்காக நீங்கள் அன்று உங்களை முழுமையாக அற்பணித்து போராடியபொழுது உங்களிடம் இருந்த தியாக மனப்பான்மையை ஒருகணம் நீங்கள் மீட்டெடுத்துப்பார்கவேண்டியகட்டாய சூழலொன்று தற்போது உங்களுக்கு ஏற்பட்டிருப்பதை நீங்கள் அனைவரும் முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.

தியாகம் என்பது ஒருவர் தம்மை ஒரு சந்தர்ப்பத்திலேனும் நிரூபிக்காதவரை அவரை எவராலும் தியாகியென்று என்றுமே கூறிவிட முடியாது’ ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து தம்மை தமது தாய்நாட்டிற்காக அர்பணிக்கத்துணிந்த எந்தவொரு முன்னாள் போராளிகளையும் எவரும் இவர்கள் தியாகிகள் அல்ல என்று கூறிவிடவும் முடியாது’ ஏனென்றால் அவர்கள் தம்மை அர்ப்பணித்து எதிரியாகிய சிங்கள அசூரர்களுடன் போரிட்டு தமது தியாகங்களை ஒன்றிற்கு பலமுறை நிரூபித்தும் காட்டியுள்ளார்கள்’ ஆகவே உங்கள் தியாகங்களுக்கு ஈடாக இனியொரு தியாகியையோ,அல்லது தியாகிகளையோ உங்களால்மட்டும்தான் உருவாக்கமுடியுமே அன்றி உங்களைப்போன்று தியாகத்தைப் புரியாதவர்களால் எப்படி ஒரு தியாகத்தை இந்த ஜென்மத்தில் இனிப் புரியமுடியும்?

எனவே இப்படியான ஜதார்த்தமான கேள்விகளுக்கு முன்னாள் தியாகிகளாகிய நீங்கள்தான் தற்காலத்தில் பதில்கூறவேண்டிய கடப்பாட்டில் இருப்பதை உணர்ந்து, உங்களால் மட்டுமே ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை புலம்பெயர் தேசங்களில் பலப்படுத்தமுடியும் என்ற வரலாற்று கடமையினையும் உணர்ந்து, இந்த புலம்பெயர் தேசங்களில் உங்களால் உருவாக்கப்பட்ட உங்கள் கொள்கைகளை முன்நிறுத்திய அமைப்புக்கள் அனைத்தையும் ஓரணியில் உங்களின்பின்னே அணிவகுக்க நீங்கள் அனைவரும் எழுந்து முன்னே வாருங்கள்.

அத்துடன் உங்களின் இந்த அவசர தேவைக்கான காரணங்களாக புலம்பெயர் தேசங்களில் ஒன்றான ‘பிருத்தானியாவில்’ கடந்த சில நாட்களுக்குமுன்பு ஒரு அருவருக்கத்தக்க செயல் ஒன்று நடந்தேறியுள்ளதை நீங்களும் நன்கு அறிந்திருப்பீர்கள்’ அந்த செயல்கள் என்ன? என்பதை இங்கே குறிப்பிடுவது அவசியம் என்று நாம் கருதுகின்றோம்.

அதாவது பிருத்தானியாவிலுள்ள இரு அமைப்புக்களான தமிழர் ஒருங்கிணைப்பு குழுவிற்கும் (TCC),பிருத்தானிய தமிழர்பேரவை என்று அழைக்கப்படும் (BTF)ற்கும் இடையில் நிகழ்ந்த,நிகழ்ந்துவருகின்ற கசப்பான சம்பவங்கள் தொடர்பான சில பொதுவான விமர்சனங்களை இங்கே குறிப்பிடுவது மிகவும் அவசியம் என நாம் கருதுகின்றோம். அந்த விமர்சனங்கள் என்னவெனில். ‘பிருத்தானிய தமிழர்பேரவை’ கடந்தகாலங்களில் தங்களை விடுதலைப் புலிகளின் புலம்பெயர் அரசியல் சக்த்திகளில் ஒன்றாக தம்மை அடையாளப்படுத்தியும், விடுதலைப் புலிகளின் அரசியல் கொள்கைகைளை ஏற்றுக்கொண்ட ஒரு சக்தியாக காண்பித்தும் பிருத்தானிய ஈழத்தமிழர்களின் ஒன்றுபட்ட ஆதரவினைப்பெற்றும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான புலம்பெயர் அரசியல் சக்த்தியாக தம்மை இந்த உலகநாடுகளுக்கு காண்பித்து வந்ததையும் நாம் நன்கறிவோம்.

ஆனால் BTF அமைப்பானது கடந்த 2009ற்கு பின்னரான சர்வதேச களநிலவரங்களை காரணம்காட்டி அது தம்மை சிறிலங்கா அரசாங்கத்தின் அழுத்தங்களுக்குள் உள்வாங்கி, புலம்பெயர் ஈழத்தமிழர்களின் ஒன்றுபட்ட விருப்பங்களுக்கு முரணாக சிங்களத்தின் நிகழ்ச்சிநிரல்களுக்கேற்ப தம்மை மாற்றியமைத்தும், விடுதலைப் புலிகளின் புலம்பெயர் ஆதரவுத் தளத்தினை சிங்கள அரசாங்கத்திற்கு ஆதரவாகவும் மாற்றி விடுதலைப்புலிகளின் அரசியல் பலத்தினை ஆட்டங்காணச்செய்வதற்காக அவ் அமைப்பின் தலைவர் ‘ரூட்ரவி’ உள்ளடங்கலான சில முக்கிய உறுப்பினர்களும் அறுதியான முடிவிற்கு வந்துவிட்டதை உறுதிப்படுத்தி கடந்தசில நாட்களுக்குமுன்பு IBCயின் தொலைக்காட்சி நேர்காணலில் தமது அமைப்பின் கடைசி முடிவினை தெரிவித்தும் விட்டார்கள்.

தாம் எடுத்துள்ள மேற்குறிப்பிட்ட முடிவிற்கான காரணங்களாக தடைசெய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் பழியினைச்சுமந்து தம்மால் அரசியல்ரீதியாக புலம்பெயர் தேசங்களில் தொடர்ந்து போராடமுடியாதெனவும், தமக்குவரும் அரசியல்ரீதியான தடைகளை இனியும் தம்மால் எதிர்கொள்ள முடியாதெனவும், இனிமேல் தம்மால் நிகழ்த்தப்படும் எந்தவொரு நிகழ்வுகளிலும் விடுதலைப் புலிகளின் தேசிய சின்னமான ‘புலிக்கொடியினை’ தம்மால் ஏற்றமுடியாதெனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்கள்.

இதைவிட தமது இந்த முடிவினை ஆமோதிக்கும்விதமாக தம்முடன் விரும்பியோ,அன்றி எதையேனும் எதிர்பார்த்தோ அவ்வமைப்பில் தன்னை இணைத்துக்கொண்ட ‘சந்திரிக்கா எனும் முன்னாள் பெண்போராளி’ ஒருவரையும் மேற்குறிப்பிட்ட வாக்குவாத மேடையில் BTF அமைப்பானது முன்நிறுத்தி விடுதலைப் புலிகளும் தமது துரோகத்தனமான முடிவிற்கு ஆதரவாக நிற்பதாக அப்பெண்போராளியை பயன்படுத்தியதும் பெரும் துரோகத்தனமான செயல் என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் மேற்குறிப்பிட்ட அப்பெண்போராளி தனது துரோகத்தனத்தை அறியாதவர்போல் BTFன் செயலினை ஆதரித்து தேசியக் கொடியை ஏற்றவேண்டிய தேவை இல்லை என்றும், அக்கொடியை தமது உள்ளத்தில் சுமந்தால் போதுமென்றும் தனது கருத்தினைக்கூறியது மட்டுமல்லாமல், களமுனைக்குச்செல்லும் போராளிகள்கூட தேசியக்கொடியினை கொண்டுசெல்வதில்லையெனவும் வியாக்கியானம்கூறி தனது துரோகத்திற்கு அர்த்தம்வேறு கூறியும் இருந்தார்.

உண்மையில் இப்பெண்போராளியை BTFஇன் தலைவர்தான் இப்படி கூறும்படி நிர்ப்பந்தித்து அனுப்பியதாக நம்பகமாக எம்மால் அறியமுடிகின்றது’ ஏனென்றால் களமுனைக்குக்கூட புலிகள் புலிக்கொடியை கொண்டுசெல்வதில்லை என்ற கருத்தினை நிச்சயம் அப்பெண்போராளியால் தனித்து கூறிவிட முடியாது’ அத்துடன் களமுனையை சந்திக்கும் ஒவ்வொரு போராளியும் அங்கு புலியாக எதிரிமீது பாயும்பொழுது எதற்காக புலிக்கொடியினை கொண்டுசெல்லவேண்டும்?அதைவிடகணைகளை காவிச்சென்று எதிரிகள்மீது தாக்கும் ஒவ்வொரு புலியையும் அங்கு எதிரிகள் இலகுவாக இனங்காணும்பொழுது எதற்காக போராளிகள் மேலதிக அடையாளங்களை களமுனைக்கு கொண்டுசெல்லவேண்டும்?இவை அனைத்தையும்விட வரிப்புலியாகவும், தாமே புலியாகவும் ஒரு போராளி களமுனைக்கு நேரே போகும்போது எதற்காக அவர்கள் மேலதிக அடையாளங்களை கொண்டுசெல்லவேண்டும்?

ஆகவே இப்படியான கேள்விகளுக்கு BTFஇடமோ,அன்றி அவர்களால் நிர்ப்பந்திக்கப்பட்ட அப்பெண்போராளியிடமோ உருப்படியான பதில்களேதும் இருக்கமுடியாது. ஆகவே மேற்குறிப்பிட்ட இரு அமைப்புக்களும் தமக்குச்சாதகமாக ஒருசில போராளிகளை தம்முடன் இணைத்து ஒட்டுமொத்த போராளிகளினதும் முடிவுகளாக தமது முடிவுகளுக்கு மக்கள்மத்தியில் இப்போராளிகளைவைத்து அர்த்தம்கற்பிப்பதை போராளிகளாகிய நீங்கள் இவற்றை கண்டித்து கட்டுப்படுத்தாதவிடத்து இந்த அமைப்புக்களின் முடிவுகளுக்குப்பின்னால் நீங்களும் பங்குகொண்டிருப்பதாகவே பலரையும் எண்ணத்தோன்றும்.

எனவே மேற்குறிப்பிட்ட அமைப்புக்களின் பலவீனமான போக்கினை எமது மக்கள்மத்தியில் செயற்படுவதற்கு நீங்கள் அனுமதித்தால் இவ்வமைப்புக்கள் ஊடாக நிச்சயமாக புலம்பெயர் மக்களின் ஒற்றுமைகள் சீர்குலைக்கப்பட்டு இதுவரைக்கும் உயிர்புடன் இருக்கும் எமது விடுதலைப் போராட்டத்தின் தியாகங்கள் அனைத்தும் நிச்சயமாக சிதைவடைந்து சின்னாபின்னமாகும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

இந்த உடனடி அவசர தேவையினை உணர்ந்து இனியும் காலம்தாழ்த்தாது நீங்கள் அனைவரும் இணைந்து ஒரு உறுதியான முடிவினை எடுத்து புலத்திலுள்ள உங்கள்சார்ந்த அமைப்புக்கள் அனைத்தையும் ஒருநிலைப்படுத்தி எமது அரசியல் விடுதலைக்கான போராட்டத்தினை புலம்பெயர் மக்களினூடாக உங்கள் தலைமையில் கொண்டுசெல்வீர்களென நாம் நம்புகின்றோம்.

"நன்றி"
தமிழரின்தாகம் தமிழீழத்தாயகம்.

No comments:

Post a Comment