May 28, 2016

மஹிந்த அரசாங்கம் கொள்வனவு செய்த ராடார் கருவிக்கு நடந்தது என்ன??

முன்னைய அரசாங்கத்தினால் 2600 இலட்சம் ரூபா செலவில் கடந்த 2011ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட ராடார் கட்டமைப்பிற்கு என்ன நடந்தது
என்பதை பொது எதிரணியினர் குழாம் விக்கமளிக்க வேண்டும் என்று சமுர்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாஸ சவால் விடுத்தார்.

சமுர்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஊழியர்கள் இணைந்து தங்களது தினச் சம்பளத்தை சேர்த்து வெள்ள நிவாரணங்களுக்கான பொருட்களை கொள்வனவு செய்து சம்பந்தப்பட்ட அமைச்சிடம் இன்று வெள்ளிக்கிழமை கையளித்தனர்.

இதற்கான நிகழ்வு சமுர்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அமைச்சர் சஜித் பிரேமதாஸ இந்த சவாலை விடுத்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிடுகையில்,

இயற்கைப் பேரழிவு ஏற்பட்டிருக்கும் நிலையில் இதனைப் பயன்படுத்திக்கொண்டு சிலர் அரசாங்கம் மீது சேறுபூசும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை அறிந்து கவலையடைகிறேன்.

அனர்த்தங்களை எதிர்கொள்ள அரசாங்கத்திடம் முன்னேற்பாட்டுத் திட்டம் இல்லை என்று ஒன்றிணைந்த எதிர்கட்சியின் தலைவரும், அதன் உறுப்பினர்களும் அண்மையில் கூறியிருப்பதாக அறிகிறேன்.

அவர்களிடம் ஒரு கேள்விளை கேட்கின்றேன். இந்த முன்னேற்பாட்டுத் திட்டத்திற்காக நாட்டு மக்களின் 2600 இலட்சம் ரூபா பணத்தை விரயம் செய்து கடந்த 2011ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட டொப்லர் ராடார் கட்டமைப்பிற்கு நடந்தது என்ன?

கொங்கலகந்த என்னும் இடத்தில் அதனை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டபோதிலும், கடந்த அரசாங்கம் அதனை அமைப்பதற்கு முறையான பாதையைக்கூட தயார்செய்திருக்கவில்லை. அத்துடன் அந்த ராடார் கட்டமைப்பை தாங்கிச்சென்ற பாரந்தூக்கியும் உடைந்து வீழ்ந்ததை அறிவோம்.

அதனூடாக நமது நாட்டு மக்களின் 2600 இலட்சம் ரூபா பணம் வீணடிக்கப்பட்டது. 3 வருடங்களாகியும் அந்த ராடார் கட்டமைப்பை ஸ்தாபிப்பதற்கு முடியாதுபோயிருக்கிறது.

எனினும் இன்று ஜப்பான் அரசாங்கம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு இரண்டு டொப்லர் ராடார் கட்டமைப்பு கருவிகளை இலவசமாகவே வழங்கியிருக்கின்றது. ஆச்சரியத்திற்கும், நல்லாட்சிக்கும் இடையிலான வித்தியாசம் இதுவே.

எனவே 2011ஆம் ஆண்டு கொள்வனவு செய்யப்பட்ட டொப்லர் ராடார் கருவிக்கு என்ன நடந்தது என்பதை விளக்குமாறு பொது எதிரணியினருக்கு சவால் விடுக்கின்றேன் – என்றார்.

No comments:

Post a Comment