September 24, 2015

மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்ய முடியும் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் டபிள்யூ.ரீ.எம்.பீ.பி.!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை கைது செய்ய முடியும் என முன்னாள் உயர் நீதிமன்ற நீதவான் டபிள்யூ.ரீ.எம்.பீ.பி. வராவௌ தெரிவித்துள்ளார்.
பாரிய நிதி மோசடிகள் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆஜராகாமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுச் சட்டங்களின் அடிப்படையில் நிறுப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் எவரேனும் விசாரணைகளில் பங்கேற்பதனை நிராகரித்தால் அது அந்த ஆணைக்குழுவினை உதாசீனம் செய்வதாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இது சட்டத்தை இழிவுபடுத்தும் செயலாகவும், ஆணைக்குழுவினை உதாசீனம் செய்யும் செயலாகவும் கருதப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விசாரணைக்கு உட்படுத்தப்படும் நபர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டிருந்தால், வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தால் அல்லது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் ஆணைக்குழுவின் அதிகாரிகள் அவரிடம் சென்று விசாரணை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 
அவ்வாறு இல்லாத சந்தர்ப்பத்தில் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராக மறுக்கும் நபர் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவினைப் பெற்றுக் கொண்டு அவரைக் கைது செய்வதனையே ஆணைக்குழு செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பாரிய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொண்டு வரும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தேர்தல் விளம்பரங்களை ஒளிபரப்புவது தொடர்பில் அவர் சுயாதீன தொலைக்காட்சியுடன் ஒப்பந்தமொன்றை செய்து கொண்டிருந்தார்.
இதன் பிரகாரம் அவர் தனது விளம்பரங்கள் தொடர்பில் 62 லட்சம் ரூபாவைச் செலுத்தியுள்ள போதிலும், சுமார் பத்துக்கோடி ரூபா வரை செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேன நான்கு கோடி நாற்பத்தி ஆறு லட்சம் ரூபாவுக்கு விளம்பர ஒப்பந்தத்தை செய்து கொண்டிருந்தபோதும், மஹிந்த தரப்பின் தலையீடு காரணமாக உரியமுறையில் அவரது விளம்பரங்கள் ஒளிபரப்பப்படவில்லை.
இதன் காரணமாக அவருக்கு ஒரு கோடி 80 லட்சம் ரூபா அளவில் திருப்பிச் செலுத்த நேர்ந்துள்ளது. இதன் மூலமாகவும் மஹிந்த ராஜபக்ஷ சுயாதீன தொலைக்காட்சிக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் மைத்திரிபால சிறிசேனவின் விளம்பரக் கட்டணங்களை விட பாதிக் கட்டணமே மஹிந்த ராஜபக்சவிடம் அறவிடப்பட்டுள்ளது.
இவ்வாறாக பாரிய தொகைப் பணம் முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான விசாரணைக்காகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கப்பட்டிருந்தார். இருப்பினும் மகிந்த ராஜபக்ஸ ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment