September 28, 2015

முதலமைச்சர் விக்கினேஸ்வரனுக்கு புளியங்குளம் வடக்கு பரசங்குளம் மக்கள் எழுதிய கடிதம்!

வவுனியா, புளியங்குளம் வடக்கு, பரசங்குளம் வயற்காணிகளை ஏழை மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி கிராம மக்கள் முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புளியங்குளம் வடக்கு, பரசங்குளம் புனரமைப்பிற்கான கூட்டம் ஐஓஎம் நிறுவனத்தின் அனுசரனையுடன் நடை பெற்றது. அக்கூட்டத்தில் வட மாகாண காணி ஆணையாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர், காணி உத்தியோகத்தர்கள் வருகை தந்திருந்தனர்.
அதில் வட மாகாண காணி ஆணையாளரால், பரசங்குள கிராம மக்களுக்கு அப்பகுதி குளத்தினை புனரமைத்து அதன் கீழுள்ள வயல் காணிகளை வழங்குவது என கூறினார். அதனடிப்படையில் கிராம மக்களின் ஆதரவுடன் குளம் புனரமைக்கப்பட்டது. ஆனால், தற்போது குளக்காணி பரசங்குள மக்களுக்கு வழங்கப்படவில்லை.
மாறாக அயல் கிராமத்தில் வயல் காணி சொந்தமாக உள்ளவர்களுக்கு இக்குளத்தின் கீழ் வயல் காணிகள் வழங்கப்பட்டுள்ளது. அதை எமது கிராம மக்கள் பிரதேச செயலாளரிடம் சென்று கேட்ட போது 23 பேருக்கு 1974 ம் ஆண்டு படித்த வாலிப திட்டத்தின் கீழ் இக்காணி வழங்கப்பட்டது எனவும், அதன் மிகுதி காணியை எங்களுக்கு பகிர்ந்தளிப்பதாக கூறி எங்களை காணி துப்பரவு செய்ய வேண்டாம் என கூறினார்.
பிரதேச செயலாளர் இதன்போது வயல் காணியை துப்பரவு செய்ய அனுமதி வழங்க வேண்டாம் என கிராமசேவையாளரிடம் கூறினார். அதன் பின் ஐந்து மாதங்களாகியும் காணியும் தரவில்லை. எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை.
அக்காணியை அயல் கிராமத்தில் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை 17.07 அன்று கமநலசேவை கால போக நெற்செய்கை கூட்டத்திற்கு சென்ற போதே தெரிய வந்தது.
அக்கூட்டத்தில் கமக்கார அமைப்பின் தலைவரிடம் வினவிய போது, எல்லோரும் காணி வெட்டும் போது எங்கே போனீர்கள் என கேட்டார். ஆனால் நாங்கள் பிரதேச செயலாளர் கூறிய படி காணிக்குள் இறங்கவில்லை.
ஆகவே ஐந்து மாதமாகியும் முடிவு கிடைக்காத பட்சத்தில் தங்களிடம் உதவி கோரி இக்கால போகம் விதைப்பதற்கு முன் எங்களுக்கு வயல் காணி தந்து எங்களின் பசி பிணியை போக்குமாறு மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம்.
மேலும் இக்காணிகள் அனைத்தும் 2015ம் ஆண்டு ஆறாம் மாதம் வன பாதுகாப்பு திணைகளத்தின் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிட தக்கது.
நாம் பிரதேச செயலகத்தில் பழைய ஆவணங்களை பார்க்க சென்ற போது செயலகத்தில் உள்ள பணியாளர்கள் ஆவணங்கள் எதுவும் தம்மிடம் இல்லை என்று மறைத்து விட்டார்கள். ஆவணங்கள் (வரைபடங்கள் ) இல்லாமல் எவ்வாறு காணிகள் இனங்காணப்பட்டது.
முன்பு வழங்கப்பட்ட காணி அத்தாட்சிப்பத்திரத்தில் எல்லைகள் போடப்படவில்லை இவ்வாறிருக்கையில், காணிகள் துப்பரவு செய்ய எவ்வாறு அரச அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டது என்பது எமக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என கிராம மக்கள் கையெழுத்திட்டு முதலமைச்சருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் பிரதிகள், காணி ஆணையாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment