September 24, 2015

கல்வியமைச்சில் தமிழ்மொழிக்கு தட்டுப்பாடு - ஜோசப் ஸ்டாலின் !

கல்வியமைச்சில் நடைபெறும் கூட்டங்கள், செயலமர்வுகளின்போது தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கையில் 97 கல்வி வலயங்கள் உள்ளன.
அதில், 24 கல்வி வலயங்கள் முழுமையான தமிழ் கல்வி வலயங்களாகும். எனினும், கல்வியமைச்சில் நடைபெறும் கூட்டங்கள், செயலமர்வுகள் தமிழ்மொழி  மூலம் நடைபெறுவதில்லை. இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். இதுதொடர்பில், அவர் மேலும் கூறியுள்ளதாவது, செவ்வாய்க்கிழமை(22) கல்வியமைச்சில் நடைபெற்ற 1,000 பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடலின் போது தமிழ்மொழி மூலம் எந்த விளக்கமும் வழங்கப்படவில்லை. தமிழ்மொழி மூலம் சுற்றறிக்கைகளும் வழங்கப்படவில்லை. சுற்றறிக்கைகள் தமிழ்மொழி மூலம் வெளியிடப்பட்டாலும் அது காலம் தாழ்த்தியே வெளியிடப்படுகின்றது' என்றார். 'இலங்கையில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளபோதும், கல்விச் செயற்பாடுகளின் போது அவற்றை கடைப்பிடிக்காது தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது கவலைக்குரிய விடயம்' என அவர் மேலும் கூறினார். 'எதிர்காலத்தில் கல்வி சார் நடவடிக்கைகளிலாவது தமிழ்மொழிக்கும் முன்னுரிமை வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்' என அவர் கோரிக்கை விடுத்தார். 

No comments:

Post a Comment