August 20, 2015

ரணிலின் நாடகம் தொடருமா! இலங்கைத் தேர்தல் முடிவுகள்! புகழேந்தி தங்கராஜ்!

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஏறக்குறைய வெளியாகியுள்ள நிலையில், இதை எழுதுகிறேன். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கூட்டணிக்கு 93 இடங்களும், மகிந்த ராஜபக்சேவின் கூட்டணிக்கு 83 இடங்களும் கிடைத்திருப்பதாகத் தகவல். ரணில் அணி, மகிந்தனை
மயிரிழையில் முந்திக்கொண்டிருக்கிறது. ஆட்சி அமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையை (113 இடங்கள்) பெறமுடியாவிட்டால்கூட, சிறிய கட்சிகளின் ஆதரவுடன் ரணில் ஆட்சியமைப்பது சிரமமான ஒன்றாக இருக்காது.
மகிந்த மிருகம் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டதாக, AFP செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி, செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே செய்தி வெளியிட்டிருந்தது பி.பி.சி. செய்தி வெளியான ஓரிரு மணி நேரத்திலேயே, மகிந்த தரப்பு அந்தச் செய்தியை மறுத்தது.
‘ஒரு நல்ல போட்டியில் நாங்கள் தோற்றிருக்கிறோம். பிரதமராவதற்கான எனது கனவு மங்கிவிட்டது. நான் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்’ என்று மகிந்த சொன்னதாக பி.பி.சி. தெரிவித்திருந்தது. முதலில் மறுத்தாலும், பி.பி.சி.செய்தியில் குறிப்பிட்டுள்ளபடி, இப்போதாவது தோல்வியை ஒப்புக்கொண்டாக வேண்டும் மகிந்தன். வேறு என்ன வழியிருக்கிறது அந்த மிருகத்துக்கு!
யதார்த்தத்தில், இந்தத் தேர்தலில் சம்பந்தப்பட்ட முக்கியமான தரப்புகள் நான்கு.
1. மகிந்த ராஜபக்சே தரப்பு.
2. ரணில் தரப்பு.
3. மைத்திரிபாலா தரப்பு.
4. தமிழர் தரப்பு.
இந்த நான்கு தரப்புகளுக்குமே, 2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை தான், மிக முக்கியத் தேர்தல் பிரச்சினையாக இருந்தது. (இனியும் அதுதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கும்.) அவர்களில் எவராலும் அதைத் தவிர்க்க முடியவில்லை.
2009 சம்பவங்களின் அடிப்படையில் தன்னைக் கொலைக் குற்றவாளியாகக் காட்டவும், மின்சார நாற்காலியில் ஏற்றவும் முயற்சி நடக்கிறது என்பதுதான் மகிந்த ராஜபக்சேவின் பிரதான பிரச்சாரமாக இருந்தது. நான்தான் 2009ல் பிரிவினைவாதிகளை வீழ்த்தினேன், நான்தான் நாட்டைக் காப்பாற்றினேன், நாட்டைப் பிரிக்க முயல்பவர்களுக்கு ரணில் கும்பல் துணைபோகிறது – என்று ஊர் ஊராகப் போய் ஒப்பாரி வைத்தது மகிந்த மிருகம்.
பௌத்த சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டாவது பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்கிற ராஜபக்சேவின் எண்ண ஓட்டத்தைப் புரிந்துகொள்வது அவ்வளவு சிரமமானதில்லை. அது புரிந்தும் புரியாதவர்போல், நாடகமாடிக் கொண்டிருந்தார் ரணில். பெரும்பான்மையின மக்களைக் கவர தம் பங்குக்கு, உண்மையின் வேரில் வெந்நீர் ஊற்றக்கூடத் தயங்கவில்லை அவர்.
நாட்டை உடைக்க அனுமதிக்கவே மாட்டோம் – என்று சொன்னதுடன் நிறுத்திக் கொண்டிருக்கலாம் ரணில். ‘சர்வதேச விசாரணை என்கிற பேச்சுக்கே இடமில்லை… ராணுவத்தின் மீதான குற்றச்சாட்டுகளைக் குறித்து நாமே விசாரித்து அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம்’ என்றெல்லாம் அவர் சொல்லியிருக்க வேண்டிய அவசியமேயில்லை. வெளிவுலகுக்கு தன்னை பரம யோக்கியர் மாதிரி காட்டிக் கொள்ள முயல்கிற ஒருவர், கொன்று குவித்தவர்கள் மீது ஒரு துரும்புகூட பட விடமாட்டேன் – என்றெல்லாம் வீராவேசம் பேசியது என்ன நியாயத்தில் சேர்த்தி?
கொல்லப்பட்டவனுக்கு நீதி கிடைத்தால், கொலைகாரனுக்குத் தண்டனை கிடைத்துவிடுமாம்…. அதைத் தடுக்க வேண்டுமென்றால், நீதியை மறுக்க வேண்டுமாம்…! இலங்கை ராணுவத்துக்கு சர்வதேச அரங்கில் அவமானம் ஏற்பட்டு விடக்கூடாதாம்… அதற்காக, 2009ல் நடந்ததை மூடிமறைத்தே ஆகவேண்டுமாம்! இது ரணில் தரப்பினரின் உண்மையான முகமா, தேர்தல் நேர ஒப்பனையா என்பது இனிமேல்தான் தெரியும்.
மைத்திரி தரப்பின் முகம், இதைக்காட்டிலும் கொடுமையான முகம். மின்சார நாற்காலியிலிருந்து மகிந்தனை நாங்கள்தான் காப்பாற்றினோம் – என்று வெளிப்படையாகவே பேசினார் மைத்திரியின் நிழலான மங்கள சமரவீர. உலகின் வேறெந்த நாட்டிலும், ‘குற்றவாளியை நாங்கள்தான் காப்பாற்றினோம்’ என்று யாரும் தேர்தல் பிரகடனம் செய்ததாக வரலாறில்லை. கூச்சநாச்சமின்றி வெளிப்படையாகவே இப்படியொரு பிரச்சாரத்தில் இறங்கியது மைத்திரி தரப்பு.
மூன்றாம் தரப்பான தமிழர் தரப்பு, நடந்தது இனப்படுகொலை என்பதைச் சொல்லலாமா வேண்டாமா என்கிற தடுமாற்றத்திலேயே கடைசி வரை இருந்தது. சொல்லாவிட்டால் நல்ல வாய்ப்பு நழுவிப் போய்விடும் – என்கிற இக்கட்டான நிலையில் கூட அடித்துச் சொல்லாமல் அரசல் புரசலாகத்தான் அதைச் சொன்னார்கள். இது உண்மையிலேயே கொடுமை. இனப்படுகொலை தொடர்பான சர்வதேச விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதற்காகவே, ஜெனிவா போய்வர சீசன் டிக்கெட் வாங்கிவைத்திருந்த சுமந்திரன்கள் குறித்து கடைசி நொடியில் திட்டமிட்டு பரப்பப்பட்ட செய்திகள் அதைக் காட்டிலும் கொடுமை.
சுமந்திரன்கள் தான் இனப்படுகொலை என்று துணிந்து முழங்கினார்கள், சர்வதேச விசாரணையை அவர்கள்தான் வலியுறுத்தினார்கள் – என்றெல்லாம் கடைசி நிமிடத்தில் எனக்கு வந்து குவிந்த மின்னஞ்சல்களைப் பார்த்து நான் ஆச்சரியப்படவில்லை. இப்போதெல்லாம், பொய்யும் புரட்டும்தானே காலில் சக்கரம் கட்டிக் கொன்டு பறக்கின்றன! ஜெனிவாவில் நின்றுகொண்டு சர்வதேசத்தையே குழப்பியடிக்கப் பார்த்தவர்களுக்கு, சொந்த மண்ணில் நின்றுகொண்டு தமிழ் மக்களைக் குழப்பியடிப்பது சிரமமான காரியமா என்ன!
தேர்தல் முடிந்த அடுத்த நொடியே தேர்தல் களத்தில் பேசியதை மறந்துவிடுவது அரசியல்வாதிகளின் அடிப்படைக் குணங்களில் ஒன்றாக மாறிவிட்டிருக்கிறது. அதை மனத்தில் கொண்டு, எனக்கு அந்த மின்னஞ்சல்களை அனுப்பி வைத்திருக்கும் என் பெருமரியாதைக்குரிய நண்பர்கள், செப்டம்பரில் அந்த மின்னஞ்சல்களை சுமந்திரன்களுக்கு அனுப்பி வைப்பார்களாக!
இந்தத் தேர்தல் களத்தில் கூட, 2009ல் நடந்தது இனப்படுகொலைதான் என்கிற உண்மையை மூடிமறைப்பதில், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மைத்திரிபாலா சிறீசேனா ஆகிய மூன்று சிங்களத் தலைவர்களும் தங்களுக்குள்ளிருக்கும் விருப்பு வெறுப்புகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுக் கைகோத்துக் கொண்டனர். அவர்களுக்குள் இருக்கிற அந்த எழுதப்படாத ஒப்பந்தம், பௌத்த மதத் தலைவர்களை அந்த மூவரும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றபோதெல்லாம் புதுப்பிக்கப் பட்டிருக்க வேண்டும்.
ஒன்றரை லட்சம் தமிழரைக் கொன்றாவது நாட்டை ஒன்றாக வைத்திருப்போம் – என்பது, சிங்கள மக்களை உற்சாகப்படுத்துவதற்காக அந்த மும்மூர்த்திகள் விடுக்கிற செய்தி. நாட்டை ஒன்றாக வைத்திருக்க ஒன்றரை லட்சம் தமிழரைக் கொல்லக் கூட தயங்க மாட்டோம் – என்பது தமிழ் மக்களை அச்சத்திலேயே வைத்திருக்க அவர்கள் விடுக்கிற செய்தி. இதிலிருந்து எதைப் புரிந்துகொள்ள வேண்டுமோ அதைப் புரிந்துகொள்ளத் தமிழினம் தவறிவிடுவதுதான் கவலையளிக்கிறது எனக்கு!
‘கொல்லப்பட்ட எங்கள் ஒன்றரை லட்சம் உறவுகளுக்கும் நீதி வழங்கப்படாவிட்டால், இலங்கை என்கிற இந்த நாடு ஒன்றாக இருக்கவே முடியாது’ என்பதை எச்சரிக்கையாகக் கூட அல்ல, யதார்த்தத்தை உணர்த்துகிற ஒரு தகவலாகத் தெரிவிக்கக் கூட தமிழர் தரப்புகளால் முடியவில்லை. தமிழர்களை நசுக்கியவர்களும், அப்படி நசுக்கியவர்களைக் காப்பாற்ற முயல்பவர்களும் எதிரெதிர் அணியிலிருந்தாலும், பௌத்த பீடத்துக்குள் போய் ஒரே குரலில் பேசுகிறார்கள். கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் பேரின் நேரடி உறவுகள், ரத்த உறவுகள், ஒரே குரலில் பேச வேண்டாமா?
ரணில் பிரதமராவாரா, ராஜபக்சே பிரதமராவாரா – என்பதல்ல நமது கவலை. யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழினத்தை அழிக்கத்தான் திட்டமிடுகிறார்கள் – என்பதை வடமாகாண சபை தீர்மானம் தெள்ளத் தெளிவாக உணர்த்துகிற நிலையில், எவர் ஆட்சிக்கு வந்தால் நமக்கென்ன! ஆறு ஆண்டுகளுக்கு முன் சிங்கள இனவெறி அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு நியாயம் கிடைக்குமா கிடைக்காதா என்பதைப் பற்றி மட்டும்தான் நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது.
மேற்குலகத்தின் ஆதரவாளர் – என்று குறிப்பிடப்படுகிற ரணில், அந்த அடிப்படையிலாவது மனித உரிமை மீறல்கள் விஷயத்தில் உண்மையிலேயே அக்கறை செலுத்துவாரா – என்பது தான் நமக்கு இருக்கிற ஒரே எதிர்பார்ப்பு. அதற்கான அழுத்தத்தைத் தமிழர் தரப்பு தரவேண்டும் – தரும் – என்றும் எதிர்பார்க்கிறோம்.
கொன்று குவிக்கப்பட்டவர்கள் ஒருவரல்ல, இருவரல்ல, ஒன்றரை லட்சம் பேர். அந்த ஒன்றரை லட்சம் உறவுகளுக்கு நம்மால் நீதி பெற முடியாவிட்டால், உலகிலுள்ள எந்த இனமும் இந்த இனத்தை மதிக்காது. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே – என்றெல்லாம் நீட்டி முழக்கிப் பேச, நம்மில் எவராலாவது அதற்குப் பிறகு இயலும் என்று நினைக்கிறீர்களா? அந்தக் காலத்திலிருந்தே இப்படித்தானா – என்று ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் பார்த்து இந்த உலகம் கேட்குமா, கேட்காதா? அப்படியொரு கேள்வி எழுந்தால், நம்மில் எவராவது அதற்கு பதில் சொல்லிவிட முடியுமா?
சர்வதேசம் தலையிட்டுவிடும், இனப்படுகொலையைத் தடுத்துவிடும் – என்கிற நம்பிக்கையில் உயிரைக் கையில் பிடித்தபடி வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நகர்ந்து நகர்ந்து சென்ற அந்த ஜனசமுத்திரத்தின் மரணக் குரலை நம்மில் எவரும் மறந்துவிடக் கூடாது. சகதிகளுக்குள் பதுங்குகுழிகளை அமைத்து, அதற்குள் தங்கள் குழந்தைகளுடன் நாட்கணக்கில் நம்ப்பிக்கையுடன் இருந்தவர்கள் அவர்கள். அவர்களுக்கு இழைக்கிற துரோகம், அவர்களது உயிர்களை மறக்கிற துரோகம், இந்த மண்ணில் நமக்குக் கிடைத்திருக்கிற ‘மனிதர்கள்’ என்கிற அங்கீகாரத்தையே பறித்துவிடக் கூடும்.
ரணில் நாடகமாடுகிறார் – என்று முதலில் நான் குறிப்பிட்டதன் பின்னணியில் ஒரு முக்கியமான செய்தி இருக்கிறது. லசந்த விக்கிரமதுங்க போன்ற ஒரு உண்மையான பத்திரிகையாளன் தொடர்பான அந்தச் செய்தி, தேர்தல் விழாக் கோலத்தில் தொலைந்து போய்விடக் கூடும் என்பதால் அதை இங்கே பதிவு செய்ய வேண்டியிருக்கிறது. அந்தச் செய்தியைத் தெரிந்து கொண்டபிறகு, ரணில் ஆடுவது நாடகமா இல்லையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
அந்தப் பத்திரிகையாளனின் பெயர் – பிரகீத் ஏக்னலிகோட. பிரபல கேலிச் சித்திரக் காரன் (கார்டூனிஸ்ட்). அரசுக்கு எதிராக துணிவுடன் கார்ட்டூன் போட்ட பிரகீத், திடீரென்று காணாமல் போனான். அவன் காணாமல் போய் சில ஆண்டுகள் ஆகிவிட்டன. நேர்மையான சிங்களப் பத்திரிகையாளர்கள் மட்டுமில்லாமல், உலகெங்கிலுமுள்ள பத்திரிகையாளர்கள் பிரகீத் விவகாரத்தில் நியாயம் கேட்டனர், தமிழ்ப் பத்திரிகையாளர்கள் உட்பட! அவன் என்ன ஆனான் என்பதே தெரியாமலிருந்தது இவ்வளவு காலமாக!
பிரகீத் விவகாரத்துக்கும் ராணுவத்துக்கும் தொடர்பிருக்கலாம் – என்று தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தன. ஒவ்வொரு முறையும் ராணுவம் அதை மறுத்துவந்தது. ‘எங்களை ஏன் இந்தப் பிரச்சினையில் தேவையில்லாமல் இழுக்கிறீர்கள்… பிரகீத் பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது’ என்று ராணுவம் தொடர்ந்து கூறிவந்தது.
சமீபத்தில் பிரகீத்தை விசாரித்த ஒரு ராணுவ அதிகாரி கைது செய்யப் பட்டான். அவன், ‘பிரகீத்தை நானும் விசாரித்தேன்’ என்று ஒப்புக்கொண்டான். உண்மை அம்பலமானதைத் தொடர்ந்து, இதில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் விசாரிக்க வேண்டும் – என்று கோரிக்கை வைத்தார், பல ஆண்டுகளாக தனது கணவனைத் தேடிக் கொண்டிருக்கும் பிரகீத்தின் மனைவி. விசாரணையில் பல உண்மைகள் அம்பலமாகும் என்று எதிர்பார்த்தனர் பத்திரிகையாளர்கள்.
இந்த நிலையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அண்மையில், ராணுவ உயர் அதிகாரிகள் குழு ஒன்று சந்தித்திருக்கிறது. ‘இந்த விசாரணை தொடர்ந்தால், ராணுவத்துக்குள் கிளர்ச்சி ஏற்படக் கூடும். அதனால், தேர்தல் முடியும் வரை இந்த விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று ரணிலிடம் அவர்கள் வேண்டுகோள் வைக்க, அடுத்த நொடியே அந்த விசாரணை நிறுத்தப்பட்டிருக்கிறது.
உயர் ராணுவ அதிகாரிகள் ரணிலைச் சந்தித்தபோது, அவரிடம் தெரிவித்த அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றும் கசிந்திருக்கிறது.
யாரை வேண்டுமானாலும் கடத்தவும் அவர்களை விசாரிக்கவும் இலங்கை ராணுவத்தில் தனிப் பிரிவே இருக்கிறதாம். அந்தப் பிரிவில் பல உயர் அதிகாரிகள் உட்பட 650 பேர் இருக்கிறார்களாம். சரத் பொன்சேகா ஏற்படுத்திய இந்தப் பிரிவு, 2009க்குப் பிறகு கோதபாய ராஜபக்சேவின் கட்டுப்பாட்டில்தான் செயல்பட்டதாம். இப்போது ராணுவத்தின் மிக உயர்வான பதவியில் அமர்த்தப்பட்ட ஜகத் ஜெயசூரியாவும் அந்தப் பிரிவில் இருந்தவராம்….
இதெல்லாம், ரணிலிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிற தகவல். இவ்வளவுக்குப் பிறகும், ராணுவத்துக்குள் இப்படியொரு சட்டவிரோதப் பிரிவு இருக்கிறது என்பது தெரிய வந்த பிறகும், அதிகாரிகளின் மிரட்டலை அடுத்து விசாரணையையே நிறுத்திவைக்கச் சொல்கிற ரணில் தான் இப்போது பிரதமராகிறார். அதுதான் நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
ரணில் நல்லவன் மாதிரி நடிப்பதில் மட்டுமே அக்கறை காட்டுவாரா? அல்லது, ஓரளவுக்கேனும் நல்லவராக இருக்க முயற்சிப்பாரா? ரணிலை நல்லவராகவே மாற்றுகிற அளவுக்கு அழுத்தம் கொடுக்க தமிழர் தரப்பால் முடியும் என்கிற நிலை தேர்தலில் உருவாகியிருக்கிற இந்தத் தருணத்தில், அவர்களாவது அப்படி அவரை மாற்ற முயற்சிப்பார்களா? இந்தக் கேள்விகளுக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

No comments:

Post a Comment