July 29, 2015

காணாமற்போனோருக்கான விசேட செயலகம்!

காணாமற்போனவர்கள் தொடர்பான விடயங்களை கையாள்வதற்காக தனது கண்காணிப்பின் கீழ் இயங்கும் விசேட செயலகம் ஒன்றை நிறுவவுள்ளதாகவும் பொதுத் தேர்தலின் பின்னர் இந்தச் செயலகத்தின்
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்க்கிழமை (28), யாழ்ப்பாணத்துக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்ட ஜனாதிபதி, கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இல்லத்தில் இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த காணாமற்போனோர் தொடர்பான அமைப்புக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடும் போதே மேற்கண்டவாறு கூறினார்.
‘எங்கள் உறவுகள் காணாமற்போய் பல வருடங்கள் ஆகியும் அவர்கள் குறித்த தகவல் இல்லை. அவர்கள் தொடர்பில் ஆக்கபூர்வமான பதிலும் அரசாங்கங்களால் வழங்கப்படவில்லை’ என்று காணாமற்போனவர்களின் உறவினர்கள், ஜனாதிபதியிடம் இதன்போது முறையிட்டனர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி, ‘உங்களுடைய வலிகள், வேதனைகளை என்னால் உணர முடிகின்றது. பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதால், இது தொடர்பான நடவடிக்கையை முன்னெடுத்தால் வேறுமாதிரியான பிரச்சினைகள் உருவாகும்.
ஆகையால் ஓகஸ்ட் 18ஆம் திகதி பொதுத் தேர்தல் நிறைவடைந்த பின்பு இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ என்றார்.
அத்துடன், ‘காணாமற்போனோர் தொடர்பில் அதிகபட்ச நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய வகையில் ஒரு விசேட செயலகம் ஒன்றை எனது நேரடிக் கண்காணிப்பின் கீழ் உருவாக்கவுள்ளேன். இந்த பிரச்சினைக்கு அதிகபட்சமான நடவடிக்கைகள், தீர்வுகள் என்னவோ அவற்றை முன்னெடுப்பதற்காக நான் முன்னின்று செயற்படுவேன்’ என்று ஜனாதிபதி மேலும் கூறினார்.
mahintha-angajan

No comments:

Post a Comment