July 11, 2015

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய ஏன் முயற்சிக்கவில்லை? : மோடியிடம் வேல்முருகன் கேள்வி!

இந்தியப் பிரதமர் மோடி, நட்பு நாடான இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க அக்கறை செலுத்தவில்லையென தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம் வெளியிட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பாகிஸ்தான் சிறையில் உள்ள குஜராத் மீனவர்களை விடுதலை செய்வதற்காக "எதிரி" நாடான பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, 'நட்பு நாடான' இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுவிக்க அக்கறை செலுத்தாததை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
ரஷ்யாவின் உபா நகரில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் 15 நாட்களில் விடுதலை செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அண்டைநாடாக இருந்தாலும் பாகிஸ்தான் ஒரு எதிரிநாடு. இந்தியாவுடன் யுத்தம் புரிந்த நாடு. இந்தியாவின் பகுதிகளை ஆக்கிரமித்த நாடு.
இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்பி மும்பை தாக்குதல் போன்ற பயங்கரவாத சம்பவங்களை நிகழ்த்திய நாடு என்றே பார்க்கப்படுகிறது.
அப்படிப்பட்ட 'எதிரிநாடு' பாகிஸ்தான் சிறைபிடித்திருக்கும் இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் 15 நாட்களில் விடுதலை செய்யும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்க முடிகிறது.
இதை நாம் வரவேற்கிறோம். ஆனால் இந்தியாவின் நட்பு நாடு. இந்தியாவிடம் ஆண்டுக்கு ரூ5ஆயிரம் கோடி கடன் பெறுகிற சுண்டைக்காய் நாடான இலங்கையோ நித்தம் நித்தம் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.
கைது செய்து சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறது. ஓராண்டுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான மீனவர் படகுகளை பறிமுதல் செய்து வைத்திருக்கிறது.
இந்த அட்டூழியத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இலங்கை அரசுடன் உருப்படியான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி முயற்சிக்கவே இல்லையே ஏன்? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு காண்போம் என்ற உறுதிமொழி என்னாயிற்று?
ஒவ்வொரு முறையும் தமிழக மீனவர்களை இலங்கை அத்துமீறி கைது செய்யப்படுகிற போது தமிழக அரசு, மத்திய அரசுக்கு எழுதுகிற கடிதங்களுக்கு இந்திய பேரரசு கொடுக்கிற மதிப்புதான் என்ன?
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்படுகிற மீனவர்கள் பெரும்பாலானோர் குஜராத்தியர்கள் என்பதால்தானே குஜராத்தைச் சேர்ந்தவரான பிரதமர் மோடி படாதபாடுபட்டு எதிரி நாட்டு பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர் விடுதலைக்கு தீர்வு காண்கிறார்.
அப்படியானால் குஜராத் மீனவர்கள்தான் இந்திய குடிமக்களா? தமிழகத்து மக்கள் என்ன வேறு தேசத்து குடிமக்களா? பிரதமர் நரேந்திர மோடியின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது.
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் குஜராத் மீனவர்களை விடுவிக்க முடிகிற மத்திய அரசால் .....மற்றொரு அண்டைநாடான இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களை விடுதலை செய்ய முடியாதா?
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க முடியாதா? இதற்கு தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? 
தமிழகத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாகவே கருதாத இந்திய மத்திய பேரரசுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் தக்க பாடம் புகட்டுகிற காலம் வெகுதொலைவில் இல்லை என்பதையும் எச்சரிக்கையாக சுட்டிக்காட்டுகிறேன்.
ஆகையால் இந்தியாவுக்கான இலங்கை தூதரை உடனே அழைத்து தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என எச்சரித்து- இலங்கை சிறையில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களை படகுகளுடன் விடுதலை செய்யவு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment