May 30, 2015

புங்குடுதீவினில் காவல்நிலையம் அமைக்க எதிர்ப்பு!

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் சட்டத்தை பேண தவறிய காவல்துறை தனக்கான அலுவலகமொன்றை திறக்க மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். எனினும் அவர்கள் சட்டத்தை மதிக்காத சிறு குழுவென வடமாகாண சிரேஸ்ட பிரதி காவல்துறை அதிபர் லலித் ஏ ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.


யாழ். தலைமை காவல்நிலையத்தனில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த 19ஆம் திகதி மக்களுடன் ஒரு கலந்துரையாடலை காவல்துறையினர்; அங்கு நடத்தினர். அங்கு பொலிஸ் நிலையம் அமைப்பதற்கு ஒரு ஏக்கர் காணி தருவதாக சிலர்; கூறியிருந்தனர்.

இது தொடர்பான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படுவதற்கு, அங்கு சட்டத்தை மதிக்காத சிறு குழுவினரால் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்தப்பட்டது. காவல் நிலையம் அமைப்பதற்கான பேச்சு தொடர்ந்து அங்கு முன்னெடுக்கப்படவில்லை.

குழப்பம் விளைவிக்கும் குழு தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான நடவடிக்கைகளை அவர்கள் செய்வார்கள்.

மக்களின் தேவை கருதி மக்கள் இடம்தரும் பட்சத்தில் அப்பகுதியில் காவல்; நிலையம் அமைக்க முடியும் என்றார்.
நீதிமன்று மற்றும் காவல்துறை மீதான தாக்குதல்கள் மக்கள் அவற்றின் மீதான நம்பிக்கையிழந்ததன் வெளிப்பாடேயென பிரபல சமூக மருத்துவர் தயா சோமசுந்தரம் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment