May 28, 2015

ரவிராஜின் படுகொலையுடன் கோத்தபாயவிற்கு தொடர்பு?

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலையுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கும் தொடர்புள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


ரவி ராஜின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இதுவரையில் ஐந்து கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் குறித்த படுகொலையை மேற்கொள்ளுமாறு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் பணிப்புரை வழங்கியதாகவும், நேரடியாக இந்த கொலையை வழிநடத்தியவர் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எனவும் சாட்சியங்களுடன் நிரூபணமாகியுள்ளது.

இதன் அடிப்படையிலேயே குறித்த இருவரையும் கைது செய்ய அனுமதியளிக்குமாறு சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் சட்ட மா அதிபர் மொஹான் பீரிஸிற்கு நெருக்கமானவர்கள் தொடர்ந்தும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் கடமையாற்றி வருவதாகவும் அவர்களின் நடவடிக்கைகளினால் இவ்வாறு கோத்தபாயவையும், கரன்னாகொடவையும் கைது செய்ய முடியவில்லை எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பிலான விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment