May 29, 2015

எனது மகன் எங்கு இருக்கிறான்? ஏன் இன்னமும் இந்த அரசாங்கம் அவரை விடாமல் வைத்திருக்கிறது!

தன்னைப்போல எத்தனையோ தாய்மார்கள் தமது பிள்ளைகளை தேடி அலைகிறார்கள் என்றும் தமது பிள்ளைகளை பார்ப்பதற்கு அரசாங்கம் ஒரு இடத்தை தெரிவு செய்து தாம் அங்கு சென்று அவர்களை பார்ப்பதற்கேனும்கேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித
உரிமைகள் செயற்பாட்டாளர் பாலேந்திரன் ஜெயகுமாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் போருக்குப் பின்னர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் தொடர்பில் கலிபோர்னியாவின் ஓக்லான்ட் ஆய்வு நிறுவகம் இலக்கைக்கு வியஜம் செய்து நடத்திய ஆய்வின் அறிக்கை ( யுத்தத்தின் நீண்ட நிழல்) நேற்று கலிபோர்னியாவில் வெளியிட்டு வைக்கப்பட்ட நிகழ்வின் போது அவர் வழங்கிய குறிப்பொன்றிலேயே இந்த வேண்டுகோளை அவர் விடுத்தார்.


தான் சிறையில் இருந்தபோது தனது கிளிநொச்சியில் உள்ள தனது வீட்டில் வீட்டு ஓடுகள் முதல் தண்ணீர் கொதிக்க வைக்கும் கேத்தில் வரை எல்லாமே களவாடப்பட்டு விட்டதாகவும் இன்று இருக்க வீடின்றி உரிய பாதுகாப்பு இல்லாமையினாலேயே தனது மகள் விபூஷிகாவை மீண்டும் ஆச்சிரமத்தில் சேர்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பக்கத்தில் இருந்தும் தனது மகளை பிரிந்து வாழும் துர்பாக்கிய நிலைமையில் வாழ்வதாக குறிப்பிட்ட அவர் தனது மகளை படிப்பிக்க வேண்டும் என்பதே தனது முழு விருப்பம் என்றும் ஆனால் இன்று உள்ள நிலையில் எப்படி இது சாத்தியம் என்று தெரியவில்லை என்றும் தனது நிலைமை பற்றி விளக்கமளித்தார்.

அவர் தனது குறிப்பில் மேலும் தெரிவித்ததாவது:

திருமணம் முடித்த பின்னர் எனது கணவர் பிள்ளைகளுடன் திருகோணமலையில் வாழ்ந்துவந்தேன்

எனது மகன் 2006 ஒக்டோபர் 26 ஆம் ஆண்டு திருகோணமலை மூன்றாம் கட்டை சந்தியில் வேலையில் இருந்தபோது இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன்பின்னர், அங்கு இருக்க முடியாது என்று கருதி இடம்பெயர்ந்து எனது ஏனைய மூன்று பிள்ளைகளுடன் கிளிநொச்சி வந்தேன். ஆனால் எனது கணவர் திருகோணமலையிலேயே தொடர்ந்து இருந்தார். பாதுகாப்பு கருதியே எனது பிள்ளைகளை கூட்டிக்கொண்டு நான் கிளிநொச்சி வந்தேன்.

எனது இரண்டாவது மகன் கிளிநொச்சி ஆஸ்பத்திரியின் நோயாளர் நலன்புரி சங்கத்தில் வேலை செய்து வந்தார். பின்னர் புதுக்குடியிருப்பு மருத்துவ மனையில் வேலை செய்தார். அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி என்னுடன் இடம்பெயர்ந்து வரும்போது எறிகணை வீச்சில் பலியானார். எனது இரு மகன்களும் இறக்கும்போது 19 வயது. மூன்றாவது மகன் காணாமல் போயுள்ளார். அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. எனது கணவரும் 2012 ஆம் ஆண்டு புற்றுநோய் காரணமாக திருகோணமலையில் இறந்து விட்டார்.

எனது மூன்றாவது மகனை தேடி போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, 2014 மார்ச் 12 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பூசா சிறையில் அடைக்கப்பட்டேன். பின்னர் 2015 மார்ச் 10 ஆம் திகதி சிறையில் இருந்து வெளியே வந்தேன். வந்தவுடன் எனது மகள் விபூசிகாவை நீதிமன்ற அனுமதி பெற்று என்னுடன் வைத்திருந்து படிப்பிப்பதற்காக மகாதேவா ஆச்சிரமத்தில் இருந்து கூட்டி வந்தேன்.



ஆனால் , நான் சிறையில் இருந்து வந்து எனது வீட்டை வந்து பார்த்தபோது அங்கு இருந்த எல்லா பொருட்களுமே களவாடப்பட்டிருந்தன. வீட்டு ஓடுகள் முதல் வீட்டில் இருந்த எல்லா பொருட்களையுமே களவாடி இருந்தார்கள். தேநீர் வைக்கும் கேத்தில் கூட இருக்கவில்லை. என்னை கைது செய்த பின்னர், அதிகாரிகள் எனது வீட்டை பாதுகாக்க தவறிவிட்டனர். யார் பொருட்களை களவாடியது என்று என்னை காட்டுமாறு இப்போது கேட்கிறார்கள்.

இதன் காரணமாக, கிளிநொச்சியில் வாடகைக்கு வீடு பார்க்கலாம் என்று முயற்சித்தேன். ஆனால் , எனக்கு வீடு தர பயத்தில் எல்லோரும் மறுத்தார்கள். இதனால் தான் எனது மகளை என்னுடன் சில நாட்கள் வைத்திருந்து விட்டு பாதுகாப்பான இருப்பிடம் இல்லாத காரணத்தால் கிளிநொச்சி நீதிமன்றத்தில் கதைத்து மீண்டும் அந்த ஆச்சிரமத்தில் சேர்த்துள்ளேன். அங்கு அவருக்கு பாதுகாப்பு இருப்பதுடன் படிக்கவும் முடியும்.

பாதுகாப்பு எதுவும் இல்லாமல் எனது அம்மாவின் குடிசை வீட்டில் இப்போது இருக்கிறேன். இங்கு எந்த வசதிகளும் இல்லை. எந்த வித மன ஆறுதலும் இன்றியே நான் இங்கு வசிக்கிறேன். என்னைப் பிரிந்துள்ள எனது மகள் விபூஷிகா தனது மூன்று அண்ணன்மார்களும் இன்றி மிகவும் கவலைப்படுகிறாள். அத்துடன் அவளுக்கு இழுவை நோயும் இருக்கிறது. பக்கத்தில் இருந்தும் எனது மகளை பிரிந்து வாழும் நிலைமையில் இருக்கிறேன். சில தினங்களுக்கு முன்னர் அங்கு சென்று எனது மகளை பார்த்தபோது தனக்கு அங்கு இருக்க விருப்பம் இல்லை என்றும் என்னுடன் கூட்டிச்செல்லுமாறும் வேண்டினாள்.

எனது மகளை படிப்பிக்க வேண்டும் என்பதே எனது முழு விருப்பம். ஆனால் , நான் இன்று உள்ள நிலையில் எப்படி இது சாத்தியம் என்று தெரியவில்லை. எனது மகளும் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டுளாள்.

காணாமல் போன எனது மகனை தேடுவதற்கு முயன்றதாலேயே எனக்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. எனது மகன் எங்கு இருக்கிறான், என்ன செய்கிறான், ஏன் இன்னமும் இந்த அரசாங்கம் அவரை விடாமல் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை. சிறையிலே பல கேள்விகளுக்கு முகம் கொடுத்தேன். செய்யாத குற்றத்தை செய்ததாக சுமக்க வேண்டி இருக்கிறது. எனக்கு எனது வாழ்வே வெறுத்துவிட்டது.

புதிய அரசாங்கமாவது எனது மகனை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப்போல எத்தனையோ தாய்மார்கள் தமது பிள்ளைகளை தேடி அலைகிறார்கள். எமது பிள்ளைகளை பார்ப்பதற்கு அரசாங்கம் ஒரு இடத்தை தெரிவு செய்து நாம் அங்கு சென்று அவர்களை பார்ப்பதற்கேனும்கேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு எனது பிள்ளை வேண்டும். புதிய அரசாங்கம் எனது நிலைமைகளை கவனத்தில் எடுத்து எனது கவலைகள் கஷ்டங்களை போக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment