May 30, 2015

யாழ்.மல்லாகம் நீதிமன்றத்தின் தடையையும் மீறி யாழில் மாணவர்கள் முன்னெடுத்துள்ள விழிப்புணர்வு நடை பவனி !

யாழ்.வயாவிளான் மத்திய கல்லூரிச் சமூகம் ஒன்றிணைந்து அண்மைக்காலமாகப் பெண்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு நடை பவனியொன்றை இன்று வெள்ளிக்கிழமை (29.5.2015) முன்னெடுத்துள்ளனர்.

இன்று காலை 08 மணிக்கு புன்னாலைக்கட்டுவன் தெற்குச் சந்தியில் ஆரம்பித்த நடைபவனி பாடசாலையில் சென்று நிறைவடைந்தது.
இந்த நடைபவனியில் கல்லூரியின் அதிபர் வி.ரி.ஜெயந்தன், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கெடுத்துள்ளனர்.
சுமார் 3 கிலோ மீற்றர் தூரத்துக்கப்பாலுள்ள பாடசாலை நோக்கி சென்று நிறைவடைந்த இந்த நடை பவனிக்கு பொலிஸார் பூரண பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

இந்த நடைபவனியைத் தொடர்ந்து கல்லூரி மண்டபத்தில் விழிப்புணர்வுக் கருத்துரைகள் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதி கேட்டும் பெண்களுக்கெதிரான வன்முறைகளைக் கண்டித்தும் இந்த விழிப்புணர்வு நடை பவனி இடம்பெறுகிறது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொடூரமான படுகொலையைக் கண்டித்து பாடசாலைச் சமூகத்தால் அண்மையில் பாடசாலை முன்பாக அமைதி வழி கண்டனப் பேரணியொன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை அண்மையில் மல்லாகம் நீதிமன்றம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஆர்ப்பாட்டம், மற்றும் பேரணிகளுக்குத் தடை விதித்து உத்தவிட்டிருந்த நிலையில் மாணவர்கள் இணைந்து இந்த விழிப்புணர்வு நடை பவனியை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment