சுன்னாகம் பகுதியில் அமைந்துள்ள நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்வயர்களை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு சந்தேகநபர்களை, வியாழக்கிழமை(09) காலை கைது செய்ததாக சுன்னாகம் பொலிஸார் கூறினர்.
சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள
கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டமைக்கு நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கியில் இருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய் காரணம் எனக்கூறி, பாதிக்கப்பட்ட பொதுமக்களின் 11 பேர் மல்லாகம் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குக்கமைய நொர்தன் பவர் நிறுவனத்தை தற்காலிகமாக மூட நீதிமன்றம் கடந்த ஜனவரி 27ஆம் திகதி உத்தரவிட்டது.
நிறுவனத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டபோதும், அதன் பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் நிறுவன ஊழியர்கள் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை(06) நிறுவனத்திலிருந்த 1½ இலட்சம் ரூபாய் பெறுமதியான வயர்கள் திருடப்பட்டன. இது தொடர்பில் நிறுவன பொறியியலாளர், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.
No comments:
Post a Comment