April 11, 2015

ஈழத்திலுள்ள எங்களது உறவுகளே, இங்கு கொல்லப்பட்டதும் உங்கள் உறவுகள்தான் – தமிழக மாணவர்கள்!

ஈழத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற ஒவ்வொரு அடக்கு முறைக்கு எதிராகவும் தமிழகத் தலைவர்களும் – தமிழக மக்களும் குரல் கொடுக்கும் நிலையில்,

ஆந்திரப் பொலிஸாரால் தமிழகத்தைச் சேர்ந்த 20 தமிழ் தொழிலாளிகள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், ஈழத்து அரசியல்வாதிகளும்  ஈழத்து மக்களும் குரல் எழுப்பாமை கவலையளிக்கின்றது என்று தமிழக மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறைக் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப் பொலிஸாரால் கடந்த செவ்வாய்க் கிழமை, தமிழகத்தைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். இது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர – தமிழகம் இடையே பதற்றமான சூழ்நிலையும் உருவாகியுள்ளது.
தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, தமிழக அரசியல் கட்சிகள் பலவும் வன்மையாகக் கண்டித்துள்ளன. இருப்பினும், இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்களோ, தமிழ் மக்களோ எதுவித கண்டனங்களையோ – கவலைகளையோ வெளியிடவில்லை.
இது தொடர்பில், தமிழக, முற்போக்கு மாணவர் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாறன் கருத்துத் தெரிவிக்கையில், “ஈழத்திலுள்ள எமது இரத்த உறவுகள் அடக்குமுறைக்குள்ளாகும் ஒவ்வொரு சந்தர்பத்திலும், தமிழகத் தலைவர்கள், மாணவர்கள், மக்கள் எனப் பலரும் குரல் கொடுத்துள்ளனர். அத்துடன் பலர் வீரச்சாவடைந்தும் உள்ளனர்.
இப்படியான நிலையில், தமிழக கூலித் தொழிலாளர்கள் ஆந்திரப் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை, ஈழத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் கண்டிக்காமை எமக்கு கவலையை ஏற்படுத்துகின்றது.
ஈழத்திலுள்ள எங்களது உறவுகளே, இங்கு கொல்லப்பட்டதும் உங்கள் உறவுகள்தான்.” என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment