August 5, 2016

கொக்கிளாயில் நீடிக்கும் சர்ச்சை! நீதிமன்றத்திலாவது தீர்வு கிடைக்குமா?

முல்லைத்தீவு, கொக்கிளாயில் தமிழ் மீனவர்கள் வாடி அமைத்தமைக்கு எதிராகக் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


அதன் மீதான வழக்கு விசாரணை நேற்று ஆரம்பமானது. சிங்கள மீனவர்கள் வசப்படுத்தி வைத்திருந்த பகுதியில் தமிழ் மீனவருக்குப் பாரம்பரியமாக இருந்து வந்த உரிமை பிரதேச செயலகத்தால் மீளப் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து கொழும்பில் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையில் முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வாறு திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்திருப்பது, அது ஓர் இனத்துக்குச் சார்பாக மட்டுமே செயற்படுகின்றதைக் காட்டுகின்றது என தமிழ் மீனவர்கள் தரப்பில் நீதிமன்றில் முற்பட்ட மூத்த சட்டத்தரணிகளால் சுட்டிக் காட்டப்பட்டது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் பேப் பாரைப்பிட்டி தொடக்கம் கொக்கிளாய் வரை சட்டத்தை மீறி பலர் வாடி அமைத்துள்ளபோதும், அவர்களை விட்டு, அனுமதி பெற்று வாடி அமைத்தவர்களுக்கு எதிராக கடற்றொழில் திணைக்களம் முறைகேடாக வழக்குத் தாக்கல் செய்துள்ளது என சட்டத்தரணிகள் நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து, பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி குறித்த பகுதி முறையாக யாருக்கு வழங்கப்பட்டது என்று மன்றுக்குத் தெரிவிக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டார்.

கொக்குளாய் சென். அன்ரனி கடற்றொழிலாளர் சங்கம் அனுமதியற்ற வகையில் வேறு ஒருவரின் கரவலைப்பாடு எல்லைக்குள் வாடி அமைத்துள்ளதாக அந்தச் சங்கத்தின் 11 பேருக்கு எதிராகவே மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தால் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தனர்.

அந்த வழக்கு நேற்று புதன்கிழமை மன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சங்கத்தின் 11 பேர் சார்பில் சட்டத்தரணிகள் சாரங்கி , ராதிகா , கனேஸ்வரன் , சுதர்சன் ஆகியோருடன் மூத்த சட்டத்தரணிகளான பரஞ்சோதி மற்றும் அன்ரன் புனிதநாயகம் ஆகியோர் முன்னிலையாகினர்.

பிறருக்கு வழங்கிய கரைவலைப் பாட்டு எல்லைக்குள் குறித்த சங்கம் வாடி அமைத்து படகுக் கட்டுமானத்தை ஏற்படுத்தவில்லை.

பிரதேச செயலாளரினால் எல்லைகள் குறிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்ட நிலத்திலேயே மேற்படி சங்கத்தினர் வாடி அமைத்துள்ளனர்.

சங்கமானது கரவலைத் தொழிலில் ஈடுபடவில்லை'' என்று சட்டத்தரணிகள் மன்றுக்குச் சுட்டிக்காட்டினர்.

திணைக்களத்தினால் கூறப்படும் கரவலைப்பாடு யாருடையது என்பதனை உறுதி செய்யுமாறு மன்று கோரியவேளையில், திணைக்களம் சார்பில் அதற்கான சான்று முன்வைக்கப்படவில்லை.

பிரதேச செயலாளர் வழங்கிய இடத்தில் மீனவ சங்கம் தனது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு என்ன தடையாகவுள்ளது எனவும் மன்று கோரியது.

அது தொடர்பில் ஆராய்ந்து பதில் அளிப்பதாக திணைக்களத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் பேப்பாரைப்பிட்டி முதல் கொக்குளாய் வரைக்கும் சட்டத்தை மீறிய வகையில் பலர் வாடி அமைத்துத் தொழில் புரிகின்றனர்.

அவர்கள் கட்டடங்களும் கட்டியுள்ளனர். அங்கு சட்டத்தை மீறியவர்களை விட்டு, அனுமதி பெற்ற மீனவர்களுக்கு எதிராகக் கடற்றொழில் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

இது பாரபட்சமாக ஓர் இன மக்களுக்கு மட்டும் சார்பாக திணைக்களத்தினர் நடக்கின்றனர் என மன்றின் கவனத்திற்கு தெரியப்படுத்தினோம்'' என சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தெரிவித்தார்.

திணைக்களத்தால் கூறப்படும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடன் இது தொடர்பில் ஆராய்ந்து, குறித்த பிரதேசம் முறையாக யாருக்கு வழங்கப்பட்டது என்ற விவரத்தை பெறுமாறு திணைக்களத்தினருக்கு மன்று அறிவுறுத்தியது.

அத்துடன், வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment