August 13, 2016

இராணுவத்தினர் தண்டிக்கப்படமாட்டார்கள்! - அமைச்சர் மகிந்த சமரசிங்க !

காணாமல்போனவர்கள் செயலகம் சம்பந்தமான சட்டமூலத்தினால் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் கௌரவம் பாதுகாக்கப்படுமே அன்றி அவர்கள் தண்டிக்கப்படமாட்டார்கள் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

 
பாதுகாப்பு படையினருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமாயின் முன்னாள் ஜனாதிபதி நேற்று நாடாளுமன்றத்திற்கு வந்திருக்கலாம். குறித்த சட்டமூலம் நேற்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் சந்தர்ப்பத்தில் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொண்ட விதம் கண்டிக்கத்தக்கது. சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர், விவாதிக்க கூட்டு எதிர்க்கட்சியினருக்கு போதுமான நேரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை பிரயோசனப்படுத்திக்கொள்ளவில்லை.

சட்டமூலத்திற்கு எதிராக நாடாளுமன்றத்திலும் வெளியிலும் சத்தமிடும் கூட்டு எதிர்க்கட்சியினர் குறைந்தது சட்டமூலத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்து, சட்டமூலம் நிறைவேற்றப்படுவதை தாமதப்படுத்த சந்தர்ப்பம் இருந்தது. சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. அதிகளவான திருத்தங்களை ஜனாதிபதியே முன்வைத்திருந்தார். மேலும் சில பந்திகளை நீக்கவும் சில பந்திகளை திருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

படையினர் எந்த வகையிலும் வேட்டையாடப்படமாட்டார்கள். செயலகத்தில் உள்ளவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என முன்னாள் ஜனாதிபதி கூறியிருப்பது உண்மைக்கு புறம்பானது. அத்துடன் செயலகம் குறித்து பொய்யான பரப்புரைகளை தவிர்க்கவும். அடுத்து நடைபெறும் மனித உரிமை பேவையின் கூட்டத்திற்கு தயாராக அரசாங்கம் என்ற வகையில் எடுக்கப்பட்ட பொருத்தமான நடவடிக்கையாகும். இது சம்பந்தமான இறுதி அறிக்கை மூன்று மாதங்களுக்குள் தயாரிக்கப்படவுள்ளது எனவும் அமைச்சர் மகிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment