தொழிலுக்கு சென்ற எனது கணவரை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர் என வாகரை பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறியுள்ளார்.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறைக்கு மக்களிடம் கருத்தறியும் அமர்வு வாகரை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொழில் நிமிர்த்தம் மீன் பிடிக்க சென்ற எனது கவரை இராணுவத்தினர் பிடித்துச் சென்றனர்.
எனினும், இது குறித்து நாங்கள் சென்று கேட்ட போது தாம் பிடிக்கவில்லை என இராணுவத்தினர் கூறுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த அமர்வின் போது கருத்து தெரிவித்த த.குமாரசாமி, விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்ட எனது மகளை யுத்தம் காரணமாக இழந்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக எனது ஒரு மகளை இழந்ததுடன், இரண்டு பிள்ளைகளும் அங்கங்களை இழந்துள்ளனர். நான் மீன்பிடித் தொழிலை நம்பி வாழ்கின்றேன்.
எனவே, நல்லிணக்கப் பொறிமுறைக்கு குழுவிடம் எனது மகளின் பெயரால் எனக்கு ஒரு வீடும், ஏதும் உதவிகளையும் பெற்றுத் தருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, தனது கணவரை 14 நாட்களுக்குப் பின்னர் மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுத்தோம் என வாகரை, பால்ச்சேனை கிராமத்தை சேர்ந்த நாகரெத்தினம் மகேஸ்வரி என்பவர் கூறியுள்ளார்.1993ஆம் ஆண்டு எனது கணவர் தேன் எடுக்க சென்றார். அவர் சென்ற நேரம் வெடிச்சத்தம் கேட்டது. நாங்கள் பல இடங்களில் கணவரை தேடிப் பார்த்தோம் அவரை காணவில்லை.
எனினும், 14 நாட்களுக்கு பின்னர் மண்ணுக்குள் இருந்து எனது கணவரை உடலை தோண்டி எடுத்தோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வீட்டுக்கு வந்து எனது மகனை இராணுவ வீரர்கள் அழைத்துச் சென்றனர் என வாகரைப் பிரதேசத்தின் பெரியதட்முனை கிராமத்தை சேர்ந்த செல்லையா வெள்ளக்குட்டி தெரிவித்தார்.
இந்த அமர்வில் கலந்துகொண்ட கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் எனது மகனை இரவு நேரத்தில் இராணுவ உடையுடன் வந்தவர்கள் அழைத்து சென்றனர்.
எனது மகனை அழைத்துச் செல்லும் போது அவருக்கு 17 வயது என அவர் மேலும் கூறியுள்ளார். இதேவேளை, தொழில் நிமிர்த்தம் சென்ற எனது கணவரை விடுதலைப் புலிகள் என முத்திரை குத்தி இராணுவத்தினர் சுட்டு கொலை செய்துள்ளதாக வாகரை பிரதேசத்தை சேர்ந்த ஜெயக்குமார் கிருஸ்ணவேணி தெரிவித்தார்.
2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் பொருட்களை ஏற்றுவதற்காக எனது கணவரை தொழில் நிமிர்த்தம் அழைத்து சென்றனர்.
ஆனால் தொழிலுக்கான சென்ற எனது கணவரை இராணுவ வீரர்கள் இயக்கம் என கூறி சுட்டு கொலை செய்து ஆற்றோரத்தில் போட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment