August 15, 2016

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மடு திருத்தலத்தின் ஆவணித்திருவிழா!

மன்னார் மறைமாவட்டத்தில் அமைந்திருக்கும் மருதமடு திருத்தலத்தின் வருடாந்த ஆவணி மாத திருவிழா இன்று காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.


கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை ,கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் அன்றாடி ஆண்டகை ஆகியோர் இணைந்து திரு நாள் திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனி இடம் பெற்று திருச்சொரூப ஆசீர் வாதத்துடன் நிறைவடையவுள்ளது.

இதன் போது நாட்டின் பல பாகங்களில் இருந்தும் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டு மடு அன்னையின் ஆசி பெற்றனர்.இதன் போது மடு திருத்தளத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ்.எமிலியானுஸ் பிள்ளை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அமைச்சர்களான ரவி கருனாநாயக்க, ஜோன் அமரதூங்க, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு அமைச்சர், வடமாகாண சபை உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

திருவிழா இறுதியில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மடு திருத்தலத்திற்கு அன்பளிப்பு தொகையினை வழங்கி வைத்தார்.
மேலும் சர்ச்சையாக காணப்பட்ட மன்னார் மாந்தை ஆலயத்திற்குச் சொந்தமான காணிக்கான உறுதிப்பத்திரத்தை அமைச்சர் ஜோன் அமரதூங்க மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை அவர்களிடம் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment