August 5, 2016

கணவருக்கு புலிகளுடன் தொடர்பு” என கூறுமாறு இராணுவம் மிரட்டியது: மனைவி சாட்சியம்!

‘கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மாத்திரமே சடலத்தினை தருவோம் என இராணுவம் தெரிவித்தது’ என்று இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்ற நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வில் பெண்ணொருவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.


நல்லிணக்க பொறிமுறைக்கான மக்கள் கருத்துக்களை கேட்டறியும் அமர்வு இன்று கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. குறித்த அமர்வில் பங்கேற்று தமது கருத்துக்களை பதிவு செய்த பெண்ணொருவரே மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

‘2014ம் ஆண்டு வவுனியாவில் வைத்து எனது கணவர் சுட்டு கொல்லப்பட்டார். மறவங்குளம் செல்லும் போது புதுக்குளம் பகுதியில் வைத்தது கணவர் கொலை செய்யப்பட்டார். கணவரின் சடலத்தினை கையளிப்பதானால் விடுதலை புலிகளுடன் தொடர்புபட்டவர் என தெரிவித்தால் மாத்திரமே சடலத்தினை தருவோம் என இராணுவம் தெரிவித்தது.

பல்வேறு சிரமத்தில் கணவரின் இறுதி கிரியைகளை கூட முறையாக செய்ய முடியாது போனது. கணவரை கொன்றவர்கள் இராணுவத்தினரே என கண்ணால் கண்டவர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட எனது கணவருக்கு நீதிவேண்டும்.

கிளிநொச்சியில் வசிக்கும் எனது குடும்பம் பல்வேறு நெருக்கடியில் வாழ்ந்து வருகின்றது. கணவரை இழந்த நிலையில் கடும் கஸ்டத்தில் வாழ்கின்றோம். 3 பிள்ளைகளுடன் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்கின்றோம்.

சமுர்த்தி கூட எமக்கு வழங்கப்படவில்லை. நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமானால் என்னை போன்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இதேவேளை, குறித்த அமர்வில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத் தலைமையை கொண்ட பெண்கள், இறுதி யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் போன்றோரை இலக்கு குழுவாக அழைத்து அவர்களது கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கதாகும்.

No comments:

Post a Comment