August 5, 2016

உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நடைபெற்ற “ஆடி” மாத வணக்க நிகழ்வு!

ஒவ்வொரு மாதமும் அந்த மாதத்தில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களினதும், போரில் கொல்லப்பட்ட எமது மக்களினதும் நினைவாக உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.


அந்தவகையில், கடந்த 31ஆம் திகதி உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் மண்டபத்தில் இம் மாத நிகழ்வு நடைபெற்றது.

கரும்புலி மறவர்களை பூசிக்கும் இம்மாத நிகழ்வில் சிறப்பு ஏற்பாடாக நூற்றுக்கும் மேற்பட்ட கரும்புலி மறவர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தமையோடு, இந்த நிகழ்வில் பல நூற்றுக் கணக்காண மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கஸ்தூரி சிவயோகநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், சவுத்கோல் அருணோதயம் தமிழாலய அதிபர் சித்திரா ஜெயக்குமார் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைக்க, பிரித்தானியத் தேசியக் கொடியை கவிஞர் சிவசுப்பிரமணியமும், தமிழீழ தேசியக் கொடியை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மூத்த போராளி ஜனகன் அவர்களும் ஏற்றிவைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

தொடர்ந்து இம்மாதத்தில் வீரச்சாவைத் தழுவிய மாவீரர்களுக்கான பொது ஈகைச்சுடரினை 22.07.1990 அன்று ஆனையிறவிலிருந்து முன்னேறிய ராணுவத்துடனான மோதலின்போது வீரச்சாவடைந்த மாவீரர் லெப். அன்பன் மாஸ்ரர் எனும் முருகராசா ஸ்ரீதர் அவர்களின் தாயார் முருகராசா குமுதா அவர்களும், இம் மாதத்தில் போரில் கொல்லப்பட்ட மக்களுக்கான பொது ஈகைச் சுடரினை மாவீரர் லெப். செந்தில் அவர்களின் சகோதரன் திரு யசோதரன் அவர்களும் ஏற்றி வைக்க, மலர் மாலைகளை முறையே மாவீரர் 2ம் லெப் தவச்செல்வன் அவர்களின் சகோதரன் சண்முகதாசன் அவர்களும், உலகத் தமிழர் வரலாற்று மைய உறுப்பினர் மயில்வாகனம் அவர்களும் அணிவித்தனர்.

அதைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதன் பின் மலர் வணக்கத்தை ஆர்த்தி ரவீந்திரநாதன் அவர்கள் ஆரம்பித்துவைக்க மக்கள் வரிசைக் கிரமமாக சென்று சுடரேற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.

இந்த நிகழ்வின் கலை நிகழ்வுகளாக கவிதை, நடனம், மாவீரர் நினைவுரை என்பன நடைபெற்றது.

நடனங்களை, சாரங்கி நுண்கலை கலையகத்தின் மாணவர்கள், குணசிறி ராஜாராம் அவர்களின் மாணவிகள், மற்றும் சிவபாத நாட்டியாலாய மாணவர்கள் வழங்க, மாவீரர் நினைவுப் பாடல்களை, சுவிஸ் நாட்டைச் சேர்ந்த வைத்தியர் கரோலின் குமார், மகேந்திரன், செல்வன் திபிஷன் விக்னேஸ்வரன், மைக்கல், வித்தகி - சுரேஷ்குமார், அட்சயன் - குறிஞ்சிக்குமரன், சங்கீத ஆசிரியை வரதராணி.மயூரன், கனிஜன் ஆகியோர் வழங்கினர்.

தொடர்ந்து, கவிதையினை கவிஞர் சிவசுப்ரமணியம் அவர்களும், ரமணி அவர்களும் வழங்கினர்.

தமிழீழ விடுதலைப் போராடடத்தின் முன்னைநாள் போராளி புரட்சி, காபிசன் சண்முகதாசன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர் திருக்குமரன் ஆகியோரின் உரைகளைத் தொடர்ந்து உறுதியேற்போடு நிகழ்வுகள் நிறைவு பெற்றது.

குறிப்பிட்ட கால இடைவெளியின் பின் மீண்டும் நினைவுவணக்க நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டமையை காணக்கூடியதாக இருந்தது.

இதே போன்று எதிர்வரும் மாதமான ஆவணி மாதத்திற்குரிய நிகழ்வு 28-08-2016 ஞாயிறு மாலை உலகத் தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் நடைபெறும் என்பதை மக்களுக்கு அறியத்தருகிறோம்.





No comments:

Post a Comment