August 5, 2016

இரண்டு உரைகள்! ஒன்று பேரினவாதத்தின் அறைகூவல், இன்னொன்று விடுதலைக்கான உறுதி மொழி!

வரலாற்றின் அத்தனை திடீர் திருப்பங்களையும், அத்தனை எழுச்சிகளையும், வீழ்ச்சிகைளையும் தீர்மானிப்பவைகளாக உரைகளே விளங்கி இருக்கின்றன. இன்னும் விளங்கி வந்து கொண்டிருக்கின்றன.


தமிழீழதேசியமும் எழுச்சி பெறவும் அது தொடர்ந்து அத்தனை நெருக்கடிக்குள்ளாகவும் நின்று போராட தேவையான தெளிவை தருபவையாகவும் இரண்டு உரைகளை வரலாற்றில் குறித்து கொள்ளலாம்.

இலங்கை ஒரு ஒற்றைநாடு என்ற கனவு தமிழர்களுக்கு முழுமையாக கலைந்த அந்த ஜூலை நாட்களில் சிங்கள தேச அதிபர் ஆற்றிய அந்த உரை ஒரு முக்கியமானது.

அதனை போலவே உலகின் நான்காவது பெரும் படையை கொண்ட இந்தியா அமைதி படை என்ற பெயரில் வந்து இறங்கி எமது தேசிய விடுதலை போராட்டத்தை நசுக்கி எறிய முனைந்த நாட்களில் எமது மக்களுக்கு, எமது தேசிய தலைவர் ஆற்றிய உரையும் சரித்திரத்தின் மிக முக்கியமான ஒன்றாகும்.

எத்தனை பெரிய படை வந்தாலும் எத்தனை மிகப்பாரிய அழுத்தம் எதிரே நின்றாலும் அதனை எதிர்கொள்ளும் வலுவை தந்தது தேசிய தலைவரின் இந்த உரையாகும்.

மிக தெளிவாக, மிக உறுதியாக மிகமிக ஆணித்தரமாக அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் இன்றும், இனிவரும் அத்தனை காலங்களிலும் எமக்கு பல பாடங்களை தந்தபடியே பல தெளிவுகளை கொடுத்தபடியே இருக்கும்.

1983ஆம் ஆண்டு யூலை 24ஆம் திகதி ஆரம்பித்த இனப்படுகொலை தமிழர்களை அடையாளம் கண்டு அடித்தும், எரித்தும், வெட்டியும், சுட்டும் கொலைசெய்து வெறியாட்டம் ஆடிக்கொண்டிருந்த வேளையிலும் தமிழர்கள் இதுவும் முந்தைய காலங்களில் நடாத்தப்பட்ட கலவரங்களைப் போன்ற ஒன்று என எண்ணியபடி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

1983ஆம் ஆண்டு ஜூலை படுகொலைகள் ஆரம்பித்து ஐந்து நாட்களுக்கு எதுவும் பேசாமல் மௌனமாக எல்லாவற்றையும் அவதானித்துக்கொண்டிருந்த சிங்கள தேச ஜனாதிபதி 1983ஆம் ஆண்டு ஜூலை 28ஆம் திகதி மாலை நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரைதான் முழுத்தமிழினத்தின் கண்களைமுழுதாக திறக்கவைக்க பேச்சாகும்.

1983 ஜூலை படுகொலைகள் ஏற்கனவே தாம் எதிர்பார்த்திருந்த ஒன்று எனவும் சிங்கள மக்களின் எழுச்சி இது என்றும் அவர் பேசிய பேச்சின் எந்த இடத்திலும் தமிழர்களுக்கு எதிராக தென்னிலைங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த இனக்கொலைகளை கண்டிக்கவோ, அதனை செய்தவர்களை தண்டிக்கப்போவதாகவோ தெரிவிக்கவேயில்லை.

நடைபெற்றுக்கொண்டிருந்த படுகொலைகளும், கொள்ளைகளும் நகர்ப்புற காடையர்களின் நடவடிக்கை என்பதிலும் பார்க்க அது சிங்கள வெகுஜன எழுச்சி என்றுதான் சிங்கள தேச தலைவர் நாட்டுமக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்திருந்ததார்.

அத்துடன் நாடு பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு எதிராக சிங்கள மக்கள் மேலும் எழுச்சியடைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இலங்கைத்தீவு என்ற ஒரு தேசத்துக்குள் ஒருமித்து வாழலாம் என்ற கனவில் இருந்த எஞ்சிய தமிழர்களின் ஐக்கிய தேசியக் கனவுக்குள் கொள்ளி சொருகியது அந்த உரை.

42 நிமிடங்களில் அந்த உரை முடிந்துவிட்டது. ஆனால் அது ஏற்படுத்திய வடுவும், ஏமாற்றமும் இன்று வரை அழியாமல் தொடர்கிறது.

அவர் இதற்கு முன்னரும் 1957ஆம் ஆண்டு 2500 ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் சிங்கள மொழியினதும், இனத்தினதும் இருப்புக்காக தான் தலைமையேற்க தயாராக இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக அவர் இருந்தபோதே பேசியவர்தான்.



அதைவிட 1977ஆம் ஆண்டு தென்னிலங்கையில் தமிழர்களுக்கெதிரான கொலைவெறியாட்டத்தின் போது “போர் என்றால் போர்” என்ற பிரகடனத்தை தமிழர்களை நோக்கி ஏவியவர்தான்.

ஆனால் அவை ஏற்படுத்திய தாக்கங்களைவிட 1983ஆம் ஆண்டின் ஜூலை 28ஆம் திகதி சிங்கள தேசத்தின் நிறைவேற்று அதிகாரங்கள் நிரம்பிய அதி உத்தம ஜனாதிபதியாக அவர் ஆற்றிய உரை ஏறத்தாழ முழுத்தமிழினத்தின் கண்களையும் திறக்கவைத்தது ஆகும்.

சிங்கள தேசத்தின் அரச இயந்திரத்தின் எந்த ஒரு சிறு அமைப்பு கூட தமிழர்களை காப்பாற்ற ஒருபோதும் முன்வராது என்றும் தமிழர்களுக்கான பாதுகாப்பும், நிரந்தர அமைதியும் தமிழர்களின் பாரம்பரிய நிலத்திலேயே கிடைக்கும் என்ற பாடத்தை ஜூலை 28ஆம் திகதி ஜெயவர்த்தனாவின் உரை ஆழமாகப் புகட்டியது.

ஒருதேசத்து ஜனாதிபதியே அந்த தேசத்தின் மக்களாக கருதப்பட்ட ஒரு பகுதி மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு இன்னொரு பகுதி மக்களை தூண்டிவிட்ட உரைபற்றி அந்த நேரத்தில் வெளியான சர்வதேச ‘எக்னமிஸ்ட்’ ஊடகத்தில் வெளிவந்த கட்டுரை மிகத்தெளிவாகவே அந்த உரையின் கொலைவெறியை சுட்டிக்காட்டியது.

"ஜூலை 28ஆம் திகதி ஜனாதிபதி ஜெயவர்த்தனா தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவரது பேச்சில் இரக்கத்துக்குரியதான அறிகுறியோ அல்லது பழிவாங்கலை நிறுத்துவதற்கான மனோநிலையோ இருந்திருக்கவில்லை.

அடுத்தநாள் கொழும்பு போர்க்களமானது.100க்கும் மேற்பட்டோர் அந்த வெள்ளிக்கிழமையில் மாத்திரம் கொல்லப்பட்டனர்.

30ஆயிரம் தமிழர்கள் அகதி முகாமிற்கு சென்றனர். ( எக்னாமிஸ்ற், ஆகஸ்ட் 6ஆம் திகதி 1983) “on july 28, president Jeyawardene spoke on TV .........Not a syllable of sympathy For the tamil people or any explicit rejection of the sprit of vengeance....

Next day colombo was a battlefield. More than 100 people are estimated to have been killed. On that Friday alone,and 30,000 tamils fled to refugee camps”.. (Economist,6 August 1983)

கண்களை முற்றாக திறக்க வைத்த இன்னொரு உரை. சிங்கள பேரினவாத அரசுகளால் காலகாலமாக அடக்கு முறைக்குள்ளும், உரிமை பறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு வந்த தமிழ் மக்களுக்கு ஏதோ இந்திய தேசத்தின் மீதான நம்பிக்கைகள் ஆழமாக வேரோடி இருந்தன.

துட்டகைமுனு காலத்திற்கு முன்பிருந்தே இந்தியா மீது அவர்களுக்கு இருந்த வெறுப்புகளும், காழ்ப்பும் இயல்பாகவே தமிழர்களுக்கு இந்தியாவை நேசிக்க வைத்தது.

தங்கள் மீது நடாத்தப்படும் எந்தவொரு பாரிய சிங்கள கொலைவெறியாட்டத்தையும் இந்தியா ஒருபோதும் சகித்துக்கொண்டு இருக்காது என்றே ஈழத் தமிழர்கள் நம்பி வந்தனர்.

அத்தகைய இந்தியா 1987ஆம் ஆண்டில் சிங்கள தேசத்துடன் ஒரு ஒப்பந்தத்தை செய்துகொண்டது. எப்படியான சந்தர்ப்பத்தில் அந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது என்று பாருங்கள்.

ஒப்பிரேசன் லிபரேசன் படை நடவடிக்கை மூலம் வடமராட்சியின் நடுப்பகுதி வரை உள்நுழைந்து நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீது மில்லர் தற்கொடைத் தாக்குதல் நடாத்தி நெல்லியடியில் சிதறடித்து, எஞ்சிய சிங்களப்படை அனைத்தினதும் இருப்பு கேள்விக்குறியாக்கப்பட்ட போதுதான் ஒப்பந்தம் உருவானது.

ஒப்பந்தத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சிங்கள தேசத் தலைவர் ஜெயவர்த்தனா சொன்னதைப்போல” பிரபாகரன் ஜெயவர்த்தனபுர பாராளுமன்றத்து நடுமண்டபத்துக்கும் வந்திருப்பார் இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படாவிட்டால்” என்று.

எங்களுக்கு அருகில் இருக்கும் பிரமாண்ட நிலப்பரப்பு கொண்ட தேசம், எங்களுடன் தொப்புள்கொடி உறவுகளையும், கலாச்சார தொடுப்புகளையும் கொண்டிருந்த தேசம் எமது எதிரியுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் எங்களை காப்பாற்றுவதற்காகவே என்று எமது மக்கள் ஆழமாக நம்பினார்கள்.

கனரக ஆயுதங்களுடனும், டாங்கிகளுடனும் எமது செம்மண் தோட்டங்களை உழுதுகொண்டு வந்த பாரததேச படையை எமது மக்கள் காக்கும் தேவர்களாகவே நினைத்து வரவேற்பு அளித்தனர்.

மாலை அணிவித்தனர். பதினைந்து வருடத்து விடுதலைப் போராட்டம் மோசமான முறையில் கருவறுக்கப்படும் அபாயம் புரியாமலேயே மக்கள் பாரதபடையை நோக்கினர்.

இலங்கைத் தீவு என்ற ஒற்றை ஆட்சிக்குள் தமிழரின் உரிமைகளை பேரம்பேசவே இந்தியப்படைகள் வந்து இறங்கி இருக்கின்றன என்று முழுதாக புரியாமல் எமது மக்கள் இருந்தவேளையிலேயே அந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரை மக்களுக்கு முன்பாக வருகின்றது.

சுதுமலை அம்மன் கோவில் முன்னால் உள்ள பரந்தவெளி.1987ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் திகதி இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் திரண்ட மாபெரும் நிகழ்வு அது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் பற்றிய தங்களது நிலைப்பாட்டை தமிழீழ விடுதலைப்புலிகள் அறிவிக்கும் நிகழ்வுஅது.

தங்கள் தேசியத் தலைவர் அங்கு தோன்றுவார் என்பதை அறிந்த மக்கள் அவரின் கருத்தைக் கேட்பதற்காக திரண்டு நின்றனர்.

பிராந்திய தளபதிகள் பக்கத்தில் சூழ்ந்துநிற்க எமது தேசியத்தலைவர் ஆற்றிய உரையானது மிகவும் அவதானத்துடனும், எளிமையான வார்த்தைகளாலும் உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த உரையானது அதுவரை இந்திய ஒப்பந்தத்தை ஏதோ தமிழர்களை காப்பாற்றப்போகும் ஒரே மார்க்கம் என்று நம்பிக்கொணடிருந்தவர்களின் கண்களை திறக்கவைத்து பாரதப்படைகள் வந்து இறங்கி நிற்பது சிங்கள தேசத்தைக் காப்பாற்றவே என்ற எண்ணத்தை முதன் முதலில் புரியவைத்தது.

எனது அன்புக்குரிய தமிழீழ மக்களே! என்று ஆரம்பித்த அந்த உரை மிகத்தெளிவாகவே மக்களுக்குள் உள்நுழைந்து எமது விடுதலையை வேறு எவரும் எடுத்துத்தர போவது இல்லை என்ற உண்மையை உறைக்கச்சொன்னது.

அந்த உரை முழுவதும் எமது மக்களின் பாதுகாப்பு, அதற்கான உத்தரவாதம, நிரந்ததீர்வு என்பது பற்றியே திரும்பத்திரும்ப வலியுறுத்தியது.

இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் விதமாகவோ தமிழ்மக்களின் போராட்ட சக்தியின் ஒப்புதலுடனோ செய்யப்படவே இல்லை என்பதை மிகத்தெளிவாக தலைவர் கூறியது ஒப்பந்தத்தின் உண்மை முகத்தை தோல் உரித்துக் காட்டியது.

உரையின் இறுதியில் அவர் தெளிவான தனது குரலில் எந்தவித தடுமாற்றமும் இன்றி அறிவித்தார். “இந்த ஒப்பந்தம் தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வு எதையும் தந்துவிடப் போவதில்லை. சிங்கள பேரினவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்றார் தேசியத்தலைவர்.

அவர் தொடர்ந்து “ஈழத்தமிழர்களுக்கு நிரந்தரமான ஒரே தீர்வாக சுதந்திர தமிழீழமே என்பதில் நான் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கிறேன். சுதந்திர தமிழீழ தேசத்தை அடையும் போராட்டத்தில் நான் தொடர்ந்தும் ஈடுபடுவேன் என்று மிகத்தெளிவாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன் என ஆழமான உறுதியுடன் கூறிவிட்டு “போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் ஒருபோதும் மாறாது” என்ற வரலாற்று வீரியம் நிறைந்த வசனத்தையும் கூறினார்.

உரையின் மிகமிக இறுதி வசனமாக “நான் இந்த தேர்தல்களில் போட்டியிடப் போவதோ முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக்கொள்ளவோ போவதில்லை” என்று கூறியதன் மூலம் தமிழீழத்துக்கான தனது போராட்டம் ஒருபோதும் ஓயாது என்று சுட்டிக்காட்டினார்.

இந்த உரை நிகழ்த்தப்படாமல் விடப்பட்டிருந்தால் எமது மக்களுக்கு இந்தியாவின் கபடநோக்கம் தெரியவர நீண்டகாலம் ஆகிவிட்டிருக்கும்.

அதற்கிடையில் தமிழர்களின் விடுதலை இலட்சியம் கருவறுக்கப்பட்டிருக்கும். இந்தஉரை மக்களை சிந்திக்கத் தூண்டியது.

ஏதோவொரு பிழையான நோக்கத்துடன்தான் பாரதப் படைகள் வந்து இறங்கி நிற்கிறார்கள் என்ற முதற்பொறியை இது ஏற்படுத்தியது.

தேசியத்தலைவரின் சுதுமலைப் பேச்சு என்பது பல விடயங்களில் மக்களுக்கு தெளிவை ஏற்படுத்திய உரை. ராஜூவ்காந்தியுடன் ஜெயவர்த்தனா செய்துகொண்ட ஒப்பந்தம் சிங்கள நலனுக்கானதுதான்.

அது தமிழர்களுக்கு எதுவும் தரப்போவதில்லை என்று கண்களை திறந்த உரை அது. மிகவும் தெளிவான குரலில் எந்தவித பிசிறும், ஐயமும் இன்றி ஆற்றப்பட்ட உறுதி நிறைந்த அந்த உரையின்,“போராட்ட வடிவங்கள் மாறலாம். ஆனால் போராட்ட இலட்சியம் மாறாது” என்ற குரல் என்றும் என்றும் எமக்கான பாதையை அடையாளம் காட்டியபடிக்கே நீளும்.

No comments:

Post a Comment