August 13, 2016

காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கு நட்ட ஈடு!

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உயர்கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம், சட்டவிரோதமானது என்றால் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கலாம்.

எனினும் எவரும் நீதிமன்றிற்கு செல்லவில்லை. கடந்த மே மாதம் 22ஆம் திகதி இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

நீதிமன்றின் உதவியை நாடக்கூடிய கால அவகாசம் காணப்பட்டது. நேற்று (11-08-2016) நடந்த கதை நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. நிகழ்காலத்தில் வாழ வேண்டும் என்றே கௌதம புத்தர் போதனை செய்துள்ளார்.

இன்று புதிய நாளாகும். மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையின் நடுவில் காணப்படும் குழி போன்ற பிரதேசத்தில் நின்று கொண்டு கூச்சல் இட்டதில் பயனில்லை.

சிரேஸ்ட உறுப்பினர்கள் ஆசனங்களில் அமர்ந்து கொள்ளுமாறு சபாநாயகர் கோரியிருந்தார். சிலர் செங்கோலை பறித்துச் செல்ல முயற்சித்தனர். காணாமல் போனோர் தொடர்பில் நல்ல விவாதம் ஒன்றை நடத்த சந்தர்ப்பம் இருந்தது.

இவ்வாறான ஓர் சட்ட மூலம் முதல் தடவையாகவே நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இரண்டு மணித்தியாலங்கள் மேலதிக காலத்தை வழங்கவும் இணங்கப்பட்டிருந்தது.

87, 89 மற்றும் 71ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற சம்பவங்கள் பற்றியும் பேச அவகாசமிருந்தது. தமது பிள்ளைகள் வீடு திரும்புவார்கள் என இன்னமும் தாய்மார் காத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு நட்ட ஈடு வழங்க வேண்டியது எமது கடமையாகும், இவை பற்றி விவாதத்தில் பேசியிருக்கலாம். எனினும் கூட்டு எதிர்க்கட்சி அதனை குழப்பி விட்டது என லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment