August 13, 2016

யுத்தக்குற்ற விசாரணை விடயத்தில் யார்? பெரும்பான்மை இன மக்கள்!

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களை உள்வாங்கியே சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நல்லிணக்க பொறிமுறைகள் குறித்த செயலணியின் அமர்வு இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த மட்டக்களப்பு சிவில் பிரதிநிதிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர், காணாமல் போனவர்கள் அனைவருக்கும் உயிரிழந்து விட்டதாக அறிவித்திருந்தார்.

எனினும், குறித்த விடயம் தொடர்பில் எமது அரசியல் தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் எதுவித எதிர்ப்புக்களும் தெரிவிக்காமல் இருந்தனர்.

இதன் காரணமாக, காணாமல் போனவர்களுக்கு மரணச்சான்றிதழ் வழங்கவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கடந்த மார்ச் மாதம் தெரிவித்திருந்தார்.

இன்னும், சிறிது காலத்தில் காணாமல் போனவர்களுக்குரிய மரணச்சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. ஆனாலும் எமது அரசியல் தலைவர்களோ, சிவில் அமைப்புக்களோ இவ்விடயம் தொடர்பில் எதுவித எதிர்ப்புக்களையும் காட்டுவதாக தெரியவில்லை.

எனவே, காணாமால் ஆக்கப்பட்டவர்களுக்கான, நீதியான தீர்வு கிடைப்பதற்கு சிவில் அமைப்புக்களும் எமது அரசியல் தலைவர்களும் குரல் கொடுக்க வேண்டும்.

பெரும்பான்மையின மக்கள் எதனைச் சொல்கின்றார்களோ அதனை வைத்துக் கொண்டுதான் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அண்மையில் அறிவித்திருந்தார்.

நாட்டில் யார்? பெரும்பான்மையின மக்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. எனவே யுத்ததில் பாதிக்கப்பட்ட மக்களின் பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களை உள்வாங்கி, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment