August 13, 2016

கைவிடப்பட்டவர்களா முன்னாள் போராளிகள்-விஜயகலா !

இயங்காமலிருக்கும் நிறுவனங்களை மீள இயக்குவதன் மூலமாக கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் 12 ஆயிரம்
முன்னாள் போராளிகள் வேலைவாய்ப்பினைப் பெறுவார்கள் என சிறுவர் பாதுகாப்பு மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். தெல்லிப்பழை அம்பனைப் பகுதியில் அலுமினியத் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 12 ஆயிரம் முன்னாள் போராளிகள் அரசாங்கத்தினாலும், பெற்றோரினாலும் கைவிடப்பட்ட நிலையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக இவர்கள் இன்று மனமுடைந்த நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு தெல்லிப்பழையில் இன்று அலுமினியத் தொழிற்சாலையைத் திறந்து வைத்தது போன்று இயக்கமின்றி இருக்கும் சீமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் போன்ற நிறுவனங்களை மீள உருவாக்குவதன் மூலம் வேலை வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இவ்வாறான முயற்சிக்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பக்கபலமாக இருக்க வேண்டும். கடந்த கால அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் முதலீட்டாளர்களை வடக்கு, கிழக்கில் முதலீடு செய்ய அனுமதிக்கவில்லை. அவர்கள் அதற்கான அனுமதியைப் பெறுவதற்கு பெரும் சிரமப்பட்டார்கள். பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தில் இதற்கான அனுமதியைப் பெற வேண்டியிருந்தது. ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திற்குச் செல்லக் கூடிய சூழல் அப்போதிருக்கவில்லை. இந்த மண்ணில் பிறந்து வளர்ந்து போர் காரணமாகப் புலம்பெயர்ந்து வெளிநாட்டுக்குச் சென்ற எமது உறவுகள் மீண்டும் எமது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டுமெனில் பாதுகாப்பு அமைச்சின் செயலகத்தின் அனுமதியைப் பெற வேண்டும். அவ்வாறான காலகட்டங்களை எமது மக்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் சந்திக்க வேண்டிய துரதிஷ்டமான நிலை காணப்பட்டது. ஆனால் தற்போதைய நல்லாட்சிக் காலத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் அங்கம் வகித்திருந்தாலும் கூட வெளிநாட்டிலிருந்து தமது சொந்தமண்ணிற்கு வருகை தருவதற்கான சாதகமான சூழல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வடக்கு, கிழக்கு மாகாணத்திலே முதலீடு செய்வதற்கான வாய்ப்பினை தற்போது உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கும், இந்தியாவுக்குமான உறவுப் பாலத்தைக் கட்டியெழுப்பும் வகையில் இன்றைய தினம் இந்த அலுமினியத் தொழிற்சாலை திறந்து வைக்கப்படுகின்றது. தங்களுடைய முதலீடுகளை எமது மாவட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் எமது மாவட்ட இளைஞர், யுவதிகள் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஏது நிலைகள் உருவாகியுள்ளன. இவ்வாறான அலுமினியத் தொழிற்சாலைகள் கடந்த காலங்களில் எமது மண்ணைச் சேர்ந்தவர்களால் ஆரம்பித்து நடாத்தப்பட்டிருந்தன. எங்களுடைய முதலீட்டாளர்கள் போரால் பாதிக்கப்பட்ட காரணத்தால் இவ்வாறான தொழிற்சாலைகளை அமைக்க முடியாத இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்

No comments:

Post a Comment