July 10, 2016

பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் வரை நாம் ஓயப்போவதில்லை :சிவஞான் சிறீதரன்!

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களிடம் கையளிக்கப்படும் வரை நாம் ஓயப்போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞான் சிறீதரன் பரவிப்பாஞ்சான் மக்களிடம் தெரிவித்தார்.


கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் தமது காணிகளில் முகாம் அமைத்திருக்கும் இராணுவத்தினர் அப்பகுதியிலிருந்து வெளியேறி தமது காணிகளைத் தம்மிடம் வழங்கி

தம்மை அங்கு வாழ்வதற்கு நல்லாட்சிக்கான மைத்திரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பரவிப்பாஞ்சான் வீதியின் முன்றலில் இன்று முதல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இம்மக்களது போராட்டம் காணிகள் கையளிக்கப்படும் வரை இரவு பகலாகத் தொடரவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்களால் கூறப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.00 மணியளவில் பரவிப்பாஞ்சான் பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வரும் பகுதிக்குச் சென்று மக்களைச் சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிடம் மக்கள் தமது நிலையை எடுத்துக் கூறினார்கள்.

மக்களது கருத்துக்களைக் கேட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன்,
பரவிப்பாஞ்சான் பகுதி மக்களது காணிகள் மக்களிடமே கையளிக்கப்படவேண்டும் என்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் கடந்த 2010 இல் இருந்து தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றோம். ஆட்சி மாற்றத்தின் பின்னர் பரவிப்பாஞ்சான் பகுதியின் சில காணிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும் பல மக்களது காணிகள் இன்னமும் மக்களிடம் கையளிக்கப்படாத நிலையில் அங்கு இராணுவம் நிலைகொண்டுள்ளது. இந்த நிலை மாற வேண்டும். இதற்காக நாம் தொடர்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

அண்மையில் கிளிநொச்சிக்கு வருகை தந்த எமது கட்சியின் தலைவர் சம்பந்தன் ஐயா அவர்கள் பரவிப்பாஞ்சானில் விடுவிக்கப்படாத பகுதிகளுக்கு மக்களை அழைத்துச்

சென்று சர்ச்சைக்குள்ளாகியிருந்தமையும் அப்பகுதி எமது மக்களின் சொந்தக் காணிகள் அப்பகுதிக்கு நாம் செல்வதற்கு நாம் யாரிடமும் அனுமதி பெறத் தேவையில்லை என அவர் உரியவர்களிடம் கூறியிருந்தார்.

நாம் பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் மக்களுக்குக் கிடைப்பதற்கான சகல முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளோம். அதற்காக நாம் உங்களது காணிகள் நாளை கிடைக்கும் நாளை மறுநாள் கிடைக்கும் என்று பொய் சொல்லி உங்களை ஏமாற்றி விட்டுப் போக மாட்டோம்.

உங்களது போராட்டம் நியாயமானது. நீங்கள் இந்தக் குழந்தைகளுடன் இவ்விடத்தில் தனியே நின்று போராட்டம் நடத்த உங்களைத் தனியே விட்டு விடமாட்டோம். உங்களால் தெரிவுசெய்யப் பட்ட உங்கள் பிரதிநிதிகளாகிய நாம் உங்களுக்காகச் செயற்படுவோம்.

உங்களது காணிகள் கிடைக்கும் வரை என்றென்றும் உங்களுக்காகக் குரல்கொடுத்து உரிய நடவடிக்கையை மேற்கொள்வோம் என மேலும் தெரிவித்தார்.

பரவிப்பாஞ்சான் மக்களது காணிவிடுவிப்புக்காண போராட்டத்திற்கு ஆதரவாக வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி மாவட்ட இளைஞர் அணியின் தலைவர் எஸ்.சுரேன் உட்பட்டவர்கள் பலர் அப்பகுதியில் தொடர்ச்சியாக

மக்களுடன் நின்று பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தம்மாலான உதவிகளைச் செய்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.





No comments:

Post a Comment