July 5, 2016

நாட்டு படகு மீனவர்கள் கைதுக்கு பாம்பன் மீனவர்கள் அதிருப்தி!

ஸ்ரீலங்கா கடற்படையினரால் தமது மீனவர்கள் கைது  செய்யப்பட்டுள்ளமை குறித்து பாம்பன் நாட்டு படகு மீனவர் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது.


பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடும் நாட்டு படகு மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளமை ஆச்சரியம் அளிப்பதாக பாம்பன் நாட்டு படகு மீனவர் தலைவர் எஸ்.பீ.ரோயப்பன் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா கடற்படையினரால் தமிழகத்தின் பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஆறு நாட்டு படகு மீனவர்கள் நேற்று மாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரத்தை சேர்ந்த ஐந்து மீனவர்கள் கைதுசெய்யப்பட்டு ஒருநாள் கடந்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள பாம்பன் மீனவர்கள் புத்தளம் மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

முன்னர் சர்வதேச கடல் எல்லையை தாண்டும் போது ஸ்ரீலங்கா கடற்படையினர் அறிவுறுத்தல் வழங்கியிருந்தனர் என எஸ்.பீ.ரோயப்பன் கூறியுள்ளார்.

எனினும் தற்போது இந்திய மீனவர்களுக்கு அழுத்தம் விடுக்கும் வகையில் ஸ்ரீலங்கா கடற்படையினர் தந்திரோபாயத்தை மாற்றியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த மே மாதம் 30 ஆம் திகதி புதிய மீன்பிடி பருவகாலம் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 40 தமிழக மீனவர்களை ஸ்ரீலங்கா கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment