July 4, 2016

டாக்காவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில்!

பங்காளாதேஷில் ஐ.எஸ் தாக்குதலுக்கு இலக்கான டாக்கா உணவகத்தி்ல் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் இருவரும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.


உடல்ரீதியாக பாதிப்பு ஏற்படாத போதிலும், தாக்குதல் குறித்து அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டிற்கான இலங்கையின் பதில் உயர்ஸ்தானிகர் சேசத் தாம்புகல குறிப்பிட்டார்.

பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு இலங்கையர்களும் பங்களாதேஷில் நீண்டகாலமாக வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பாதுகாப்பு காரணங்களுக்காகவும், பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை்கு அமையவும் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட முடியாதெனவும் பங்களாதேஷுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் 8 முதல் 9 வரையான கிளர்ச்சியாளர் குழுவினர், டாக்காவிலுள்ள உணவகமொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன், அங்கிருந்த சிலரை பணயக் கைதிகளாக தடுத்து வைத்திருந்தனர்.

இந்த பணயக் கைதிகளில் நால்வர் வெளிநாட்டவர்கள் என்பதுடன், அவர்களில் இரண்டு இலங்கையர்களும், ஜப்பான் பிரஜையொருவரும் அடங்கியுள்ளதாக பங்களாதேஷ் இராணுவம் தெரிவித்தது.

No comments:

Post a Comment