July 12, 2016

தடுத்து வைத்திருந்தவர்கள் பட்டியலை இராணுவம் வெளியிடவேண்டும்!

இறுதிப்போரின் போது படையினரிடம் சரணடைந்தவர்களின் பட்டியலை இராணுவத்தரப்பு விரைவில் வெளியிடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதன் மூலம் காணாமல் போனோர் பிரச்சினைக்கு தீர்வை எட்டமுடியும் என்று இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்காக இயக்கம் தெரிவித்துள்ளது.

போர் முடிவடைந்து 7 வருடங்களாகியும் படையினரிடம் சரணடைந்து காணாமல் போனதாக கூறப்பட்டவர்கள் தொடர்பில் உரிய தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

எனினும் தம்மிடம் சரணடைந்தவர்களை புனர்வாழ்வளித்து மீண்டும் சமூகத்தில் இணைத்துள்ளதாக படைத்தரப்பும் தெரிவித்து வந்தது.

இந்நிலையில் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த தமது கணவர் எழிலனை தேடும் ஆட்கொணர்வு மனுவின் மீதான விசாரணை, கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றபோது படையினர் வசம் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் பட்டியல் இருப்பதாக 58வது கட்டளைப்பிரிவின் மேஜர் ஜெனரல் சானயக்க குணரட்ன நீதிமன்றில் தெரிவித்திருந்தார்

எனினும் அதனை சமர்ப்பிக்க காலம் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் இதுவே தமது வசம் இருந்தவர்களின் பட்டியல் தொடர்பான இராணுவம் வெளியிட்ட முதல் தகவலாகவும் இருந்தது.

எனினும் நீதிமன்றத்தில் அவ்வாறு சொல்லப்பட்டு இரண்டு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டபோதும் இன்னும் அந்த பட்டியல் சமர்ப்பிக்கப்படவில்லை.

எனவே இந்த பட்டியலை சமர்ப்பிக்குமாறு சர்வதேச ரீதியில் அழுத்தம் கொடுக்கப்படவேண்டும் என்றும் இலங்கையின் சமாதானம் மற்றும் நீதிக்காக இயக்கம் கோரியுள்ளது.

No comments:

Post a Comment