July 20, 2016

பழியும் பாவமும் பாதிப்பும் தமிழ் மாணவர் தலையிலேயா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை மீண்டும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்ற முயற்சிகள் நடந்த வண்ணமுள்ளன.


உண்மையில் ஒரு பல்கலைக்கழகத்தை மூடி வைப்பது என்பது நல்லதல்ல. எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை உடனடியாக ஆரம்பிப்பது அவசியம் என்பதில் மாற்றுக் கருத்துக்கிடமில்லை.

அதேநேரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை ஆரம்பிக்க முன்னதாக தமிழ் - சிங்கள மாணவர்களிடையேயான ஒற்றுமைப்பாடுகளில் சில இணக்கப்பாடுகளுக்கு நாம் வந்தாக வேண்டும்.

இல்லையேல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அடிக்கடி தமிழ் - சிங்கள மாணவர்களிடையே சர்ச்சைகளும் முரண்பாடுகளும் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும்.

அவ்வாறான சர்ச்சைகள், முரண்பாடுகள் ஏற்பட்டால் அது பல்கலைக்கழக எல்லை தாண்டி தென்பகுதியில் இனக்கலவரமாக உருவெடுக்கும் என்பது நிறுதிட்டமான உண்மை.

பல்கலைக்கழக மாணவர்களிடையே பல்வேறு காரணங்களால் மோதல்கள் ஏற்படுவது வழமை. அப்போதெல்லாம் குறித்த பல்கலைக்கழகத்தை மூடி ஒரு ஆறுதலை ஏற்படுத்திய பின் மீண்டும் அந்தப் பல்கலைக்கழகம் வழமைபோல் இயங்கும்.

ஆக, இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல்கள் ஒருபோதும் பல்கலைக்கழக எல்லை தாண்டி அந்தப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள பிரதேசத்தில் கூட கலவரத்தை, மோதலை ஏற்படுத்தவில்லை, இதுவே வழமை.

ஆனால் இந்த வழமையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த தமிழ் - சிங்கள மாணவர்களின் மோதல் சம்பவத்தோடு யாரேனும் பொருத்திப் பார்ப்பார்களாயின் அது மகா தவறாகவே இருக்கும்.

ஏனெனில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ் - சிங்கள மாணவர்களிடையே மோதல் நடை பெற்றால் அந்தச் சம்பவமானது, தமிழ் மாணவர்களால் ஏற்படுத்தப்பட்டது என்றொரு பழியை நம் அப்பாவி மாணவர்கள் மீது சுமத்தும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதலால் இலங்கையில் வேறு பாகங்களில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ் மாணவர்கள் தாக்கப்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்.

மோதல் சம்பவம் நடைபெறும் போது நிச்சயம் பொலிஸார் உள்நுழைந்து மோதலைத் தடுக்கவென துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வர். இலங்கை நாட்டின் துப்பாக்கி என்பதால் அவை தமிழ் மாண வர்களையே பதம் பார்க்கும்.

மோதல் சம்பவம் நடைபெற்றதும் படைத் தர ப்பு யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் சிங்கள மாணவர்களை கூவியழைத்து பஸ்களில் ஏற்றி தென்பகுதிக்கு கொண்டு செல்வர்.

கூடவே சிங்கள மாணவர்களில் ஒரு சிலர் காயப்பட்டால் இராணுவ அம்புலன்ஸ் வண்டிகள் அந்த மாணவர்களை ஏற்றிக்கொண்டு ஒலி எழுப்பியவாறு தென்பகுதியை நோக்கிப் பறக்கும்.

அங்கு வதந்திகள் வேகமாய்ப் பரவும்.இதனிடையே ஆளுநர்(கள்), அமைச்சர்கள் அவசர அவசரமாக காயப்பட்ட மாணவர்களை சந்தித்து தென்பகுதி மக்களே ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் என்பது போல எரிதணல் எடுத்துக் கொடுக்க, அங்கு இனக்கலவரம் வெடிக்கும்.

இவையாவற்றுக்கும் மேலாக, சிங்கள மாணவர்களிடையே இனந்தெரியாதவர்கள் நுழைந்து (வெசாக்கூடு கொடுப்பது போல) துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொள்ளலாம்.

அவை நடக்கக் கூடிய சாத்தியங்கள் ஆகும்.இருந்தும் எல்லாப் பழியும் பாவமும் பாதிப்பும் தமிழ் மாணவர்களின் தலையில் விழும் என்பதால், யாழ். பல்கலைக்கழக இயங்கு நிலைக்கு முன் மாணவர்களிடையே முரண்பாடு ஏற்படாத ஒரு சூழ் நிலையை தோற்றுவிப்பது மிகமிக அவசியமானது.

No comments:

Post a Comment