July 6, 2016

பிரான்ஸில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நினைவேந்தல்!

கரும்புலிகள் நினைவேந்தல் நினைவு நாள் பிரான்ஸ் தலைநகரான பாரிஸின் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது.


தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்ஸ், மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பொதுச்சுடரை பிரான்ஸ் தமிழர் கலைபண்பாட்டுக்கழகப் பொறுப்பாளர் நிதர்சன் ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து ஈகச்சுடரை 1999ஆம் ஆண்டு கொக்குத் தொடுவாயில் வீரச்சாவடைந்த கடற்கரும்புலி மேஜர் கலைமகளின் சகோதரியும் 1989ம் ஆண்டு வீரச்சாவடைந்த கப்டன் ரூபனின் சகோதரியும் 1994ம் ஆண்டு பருத்தித்துறையில் வீரச்சாவடைந்த கடற்புலி வீரவேங்கை சுதாயினியின் சகோதரியும் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

இதனையடுத்து சோதியா தமிழ் கலைக்கல்லூரி, செவ்ரோன் தமிழ்ச்சோலை, பரிஸ் 13 தமிழ்ச்சோலை மாணவிகளின் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நடனங்கள், மற்றும் தமிழ்ச்சோலை மாணவிகளின் கரும்புலி நினைவு சுமந்த பாடல்கள் என்பனவும் இடம்பெற்றன.

நிகழ்வில் சிறப்புரையை பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் சத்தியதாசன் அவர்கள் ஆற்றினர்.

அவர்தனது உரையில், தடைநீக்கிகளான கரும்புலிகளின் ஈகம்பற்றிய சிறப்புக்களை எடுத்து விளக்கியிருந்தார்.

இவ்வாறான நிகழ்வுகள் நினைவு கூருவதற்காக மட்டுமல்லாமல் அனைவரும் ஒன்று சேர்ந்து உறுதி எடுத்துக்கொள்ளும் களமாக இருப்பதற்காகவுமே.

அத்துடன், எமது போராட்டமானது தமிழீழத் தேசியத் தலைவர் கூறியதுபோல புலம்பெயர் தேசத்து இளைஞர்களின் கைகளில் ஒப்படைக்கப்படவேண்டும்.

அந்த இளைஞர்களை சட்டதிட்டங்களுக்கு அமைவாக அனைவரும் வழிகாட்டி கொண்டு செல்லவேண்டியது அனைவரின் கடமை எனவும் எடுத்துரைத்திருந்தார்.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், நிகழ்வு நிறைவுகண்டமை குறிப்பிடத்தக்கது.







No comments:

Post a Comment