June 30, 2016

ஒரு மாத காலத்தில் மீனவ பிரச்சினைக்கு தீர்வு!

இலங்கை மற்றும் இந்திய மீனவர் பிரதிநிதிகளுக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்ற ஒரு மாத காலப்பகுதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழக மீனவ பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள மீனவ பிரதிநிதிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
அண்மைய நாட்களாக இலங்கை கடற்படையினரால் புதுச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள் தாக்கப்படும் சம்பவம் அதிகரித்துள்ளது.
அத்துடன், அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள சுமார் 103 மீன்பிடி படகுகளும் மோசமான நிலையில் பராமரிப்பின்றி இலங்கை அரசாங்கம் வைத்துள்ளது.
இந்நிலையில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் விடுதலைக்கு அழுத்தம் கொடுக்கப்படும் என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை கையகப்படுத்தியுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது குறித்தும் அந்நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
இந்திய - இலங்கை மீனவ பிரதிநிதிகள் பங்கேற்கும் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை இடம்பெற்ற ஒரு மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, "இந்திய மீனவர்களின் நலன் கருதி, இலங்கைக்கு தாரைவர்க்கப்பட்டுள்ள கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும்' என்று தமது மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எனினும், குறித்த விடயம் தொடர்பான விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதனால், இதுகுறித்து சுஷ்மா ஸ்வராஜ் கருத்துத் தெரிவிக்கவில்லை எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment