June 2, 2016

ஜெசிக்காவின் அதிரடி!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் உலகமெங்கும் பிரபலமானவர் ஈழத்து சிறுமி ஜெசிக்கா.
இதில் இரண்டாம் பரிசு பெற்று தனக்கு கிடைத்த 1 கிலோ தங்கத்தை ஈழத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.

இவர் தற்போது பத்தாவது வகுப்பில் படித்துக்கொண்டு இருக்கின்றார். போட்டி முடிந்தவுடனேயே தனது கல்வியை தொடரும் வண்ணம் கனடாவிற்கு திரும்பியவர், தனது கல்வியில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றார். அத்துடன் இசையையும் தொடர்ந்து கற்று வருகின்றார்.

கல்வியிலும் இசையிலும் சிறந்து விளங்க வேண்டுமென்பதே இவருடைய ஆசையாகும். இந்தியாவில் இருந்து தனது இசை திறைமையை வளர்க்க வேண்டும் என்ற ஆசை இருப்பினும், முதலில் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனால் போட்டி முடிந்தவுடனேயே கனடாவிற்கு திரும்பியதாக கூறுகின்றார்.

கடந்த ஒரு வருடத்தில் பல நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டது மட்டுமன்றி அங்குள்ள தமிழ் மக்களின் அன்பும் ஆதரவும் கண்டு மிகவும் மிகவும் மகிழ்ச்சியடைவதாக கூறுகின்றார்.

தனது இசை தொடர்ந்தும் மக்களுக்கு உதவும் நல்ல நோக்கங்களுக்காக பயன்படவேண்டுமென்று கூறும் ஜெசிக்கா, மக்களின் அன்பும் ஆதரவும் என்றென்றும் தனக்கு தேவையென கூறுகின்றார். “கூண்டுக்குள்ளே விடுதலையை” என்ற காசி ஆனந்தன் வரிகளில் வந்த பாடலை தனது முதலாவது திரைப்பட பாடலாக பாடியதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ஜெசிக்கா கூறுகின்றார்.

அத்துடன், அநேகமான முன்னணிப்பாடகர்களுடன் பாடும் சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டும் மகிழ்ச்சியாக இருப்பதாக கூறுகின்றார்.

தனது இசை மூலம் வசதி இன்றி வாழும் மக்களுக்கு, குறிப்பாக சிறுவர்களுக்கு தன்னாலான உதவிகளை தொடர்ந்து செய்வதே தனது விருப்பம் என்றும் அதற்கு மக்கள் ஆதரவு என்றும் கிடைக்கும் எனவும் நம்புகின்றார்.

“சின்ன தாயவள்” பாடலுக்கு “மின்னல் மியூசிக்” உடன் சேர்ந்து பணியாற்றியமை குறித்து மகிழ்ச்சி எனத் தெரிவிக்கும் ஜெசிக்கா. மின்னல்மியூசிக் செந்தில் குமரன் மிகவும் சிரமம் எடுத்து, மிகுந்த பொருட் செலவில் இந்த மியூசிக் கவர் வெளிவர பணியாற்றினார் என்றும் கூறுகின்றார்.

அத்துடன், மிகவும் பிரபல இசையமைப்பாளரான பிரவின் மணியும் (Pravin Mani) மிகுந்த சிரத்தை எடுத்து இதில் பணியாற்றியதாகவும் ஜெசிக்கா குறிப்பிடுகின்றார்.

சாஹித்தியாவின் பியானோ இந்த பாடலுக்கு வலு சேர்ப்பதாகவும் அவருடன் சேர்ந்து பணியாற்றியமை மகிழ்ச்சியளிப்பதாகவும் ஜெசிக்கா கூறுகின்றார். கனடாவிலுள்ள திறமைகளை வெளிக்கொணரும் இந்த மின்னல் மியூசிக் இன் முயற்சியில் தானும் பங்கு கொண்டதையிட்டு மகிழ்ச்சி கொள்வதாக ஜெசிக்கா தெரிவித்தார்.

இந்த பாடல் அம்மா பிள்ளைக்கிடையே இருக்கும் பாசத்தை, ஏக்கத்தை பிரதிபலிப்பதாக இருப்பதாலும், தான் இசைஞானி இளையராஜாவினதும், ஜானகி அம்மாவினதும் ரசிகை என்பதாலும் இந்த பாடலை தெரிவு செய்ததாக கூறினார்.

மேலும், சமூக வலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக்கில் அவரது பக்கம் போல் பல போலி பக்கங்கள் செயல்பட்டு வருவதாகவும், அதை ரசிகர்கள் யாரும் பின் தொடர வேண்டாம் எனவும், பேஸ்புக்கால் சரிபார்க்கப்பட்ட அவரது உண்மையான பக்கத்தை பின் தொடருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


No comments:

Post a Comment