June 3, 2016

மயிலிட்டியை விடுங்கோ… இல்லையெனில் போராட்டம் வெடிக்கும்: மாவை சேனாதிராஜா!

ஜனாதிபதியும், பிரதமரும் வாக்குறுதி வழங்கியதற்கமைய, மயிலிட்டி விடுவிக்கப்படவேண்டும். இல்லாவிடின் மக்கள் போராடுவதை தவிர வேறு வழியில்லை.”


இவ்வாறு இலங்கைத் தமிழரசு கட்சியின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

மயிலிட்டி மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களை விடுவிப்பதற்கு இராணுவத் தளபதி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடன் கடந்த திங்கட்கிழமை நடந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் மீள்குடியமர்வுக்கான வாக்குறுதியை வழங்கியிருந்தனர்.

மயிலிட்டி மக்களை அவர்களது சொந்த மண்ணில் குடியமர்த்துவோம் என்று தெரிவித்திருந்தனர்.

கடந்த ஜனவரி மாதம் இடம் பெற்ற தேசிய பொங்கல் விழாவில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பலாலி விமான நிலையத்தைச் சர்வதேச விமான நிலையமாக விஸ்தரிப்பதாக இருந்தால், மயிலிட்டியை வழங்கமுடியாது என்று குறிப்பிட்டார்.

இப்போது பலாலி விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாகவே விஸ்தரிக்கப்படவுள்ளது. எனவே, மயிலிட்டியை விடுவிக்கவேண்டும்.

இதற்கு இராணுவ தளபதி எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது. இது தொடர்பில் ஜனாதிபதி எமக்குப் பதில் சொல்லவேண்டும்.

மக்களது காணிகள் ஒரே தடவையில் விடுவிக்கப்படவேண்டும் என்று ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

இதனை ஜனாதிபதிக்கு எடுத்துக் கூறவுள்ளோம். இராணுவத் தளபதி தமது கருத்தைத் தெரிவித்தால், மக்கள் சார்பில் மக்கள் பிரதிநிதிகள் நாங்கள் எங்கள் கருத்தை எடுத்துரைப்போம்.

எமது நியாயங்களை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டேயாகவேண்டும். பாதுகாப்புக் காரணங்கள் என்று கூறுகின்றனர். ஆயுதக் கிடங்கு இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

பயங்கரமான ஆயதங்கள், அணு ஆயுதங்களா பதுக்கி வைத்திருக்கின்றீர்கள். என்ன வைத்திருந்தாலும் அதனை அங்கிருந்து அகற்றி, எமது நிலங்களை எங்களிடம் கையளிக்க வேண்டும்.

ஜனாதிபதியுடனும் பிரதமருடன் இந்த விடயம் தொடர்பில் பேசுவோம். எமக்குத் திருப்திகரமான பதில் வழங்கப்படவில்லையாயின், மக்களைத் திரட்டிப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

மேலும், இராணுவத் தளபதி, ஜனாதிபதியுடனான கூட்டத்தில் இவ்வாறு கருத்துரைத்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் தெரியப்படுத்தியுள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment