May 28, 2016

ராஜபக்சவினரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக்கலை நிபுணரும் காட்டிக்கொடுக்கத் திட்டம்?

ராஜபக்சவினரின் நம்பிக்கைக்குரிய கட்டிடக்கலை நிபுணராக இருந்த முதித ஜயக்கொடியும் ராஜபக்சவினரைக்
காட்டிக் கொடுத்து தப்பித்துக் கொள்ளும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட மற்றும் புதுப்பிக்கப்பட்ட அனைத்து கட்டிடங்கள் மற்றும் நிர்மாணங்கள் முதித ஜயக்கொடி எனும் கட்டிடக்கலைஞர் வசம் ஒப்படைக்கப்பட்டிருந்தன.

அந்தளவுக்கு அவர் ராஜபக்ச குடும்பத்தின் ஆஸ்தான கட்டிடக்கலை நிபுணராக இருந்திருந்தார்.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் முறைகேடான காணிக் கொள்வனவுகள் மற்றும் கட்டிட நிர்மாணங்கள் தொடர்பில் முதித ஜயக்கொடியும் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரவுன்ஸ்ஹில் மாளிகை தொடர்பில் முதித ஜயக்கொடி அளித்த தகவல்களைக் கொண்டே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

கம்பஹா மாவட்டம், பூகொட அருகே தொம்பே பிரதேசத்திலும் 16 ஏக்கர் காணியொன்றை முறைகேடாக கொள்வனவு செய்த வழக்கு ஒன்று பசில் ராஜபக்சவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கிலும் முதித ஜயக்கொடியும் சந்தேக நபர்கள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்று பூகொட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான முதித ஜயக்கொடி தான் ரகசிய வாக்குமூலம் அளிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்திருந்தார்.

அதன் பிரகாரம் மாஜிஸ்திரேட் டீ.ஏ. ருவன் பதிரணவின் உத்தியோகபூர்வ அறையில் அவரது வாக்குமூலம் பதியப்பட்டது.

இதற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் வழக்கறிஞர்கள் கடுமையான ஆட்சேபனை தெரிவித்திருந்த போதிலும், சந்தேக நபர் என்ற ரீதியில் இரகசிய வாக்குமூலம் அளிக்கும் உரிமை முதித ஜயக்கொடிக்கு இருப்பதாக நீதிமன்றம் உறுதிபடத் தெரிவித்திருந்தது.

நீதிமன்றத் தகவல்களின் பிரகாரம் இன்றைய வாக்குமூலத்தின் போதும் முதித ஜயக்கொடி, பசில் ராஜபக்சவுக்கு எதிரான தகவல்களை வழங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதன் பிரகாரம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இந்த வழக்கிலும் மீண்டுமொரு தடவை பொலிசாரால் கைதுசெய்யப்படும் நிலையை எதிர்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment