மாணவர்களின் முன்னேற்றத்தில் தமிழீழ நடைமுறை அரசின் பங்கு: துணுக்காய் வலய முன்னாள் உதவிக் கல்விப் பணிப்பாளருடன் ஒரு நேர்காணல்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆட்சியின் கீழ் வன்னிப் பெருநிலம் இருந்த காலப்பகுதியில் அங்கு தமிழீழ நடைமுறை அரசின் நிர்வாகக் கட்டமைப்புக்களோடு இணைந்து பணியாற்றிய சிறீலங்கா அரசாங்க அதிகாரிகளில் ஒருவர் திருமதி வசந்தகுமாரி சந்திரபாலன்.
தற்பொழுது பிரித்தானியாவில் வசித்து வரும் அவரை நாம் செவ்வி கண்டிருந்தோம். அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுக்கப்பட்ட கல்வி மேம்பாடு மற்றும் விளையாட்டுத்துறை சார்ந்த பணிகளையும், செஞ்சோலை சிறுவர் காப்பகத்தின் செயற்பாடுகள் பற்றியும் பல தகவல்களை எம்மோடு பகிர்ந்து கொண்டார். ஈழமுரசு பத்திரிகையின் சார்பில் அவரை செவ்வி கண்டவர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா.
கேள்வி: நீங்கள் வன்னியிலே ஆசிரியராகவும், துணுக்காய் கல்வி வலய உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணிபுரிந்தவர். வன்னியிலே வாழ்ந்தவர் என்ற வகையில் அங்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கல்விக் கழகம், தமிழீழ விளையாட்டுத்துறை ஆகியவற்றோடு இணைந்து சில பணிகளை முன்னெடுத்ததாக அறிகின்றோம். அவை பற்றிக் குறிப்பிடுங்கள்.
பதில்: ஆம். நான் தமிழீழ கல்விக் கழகத்திலே திரு.பேபி அண்ணா – அதாவது இளங்குமரன் அண்ணா – அவர்களுடன் பல வேலைகளில் ஈடுபட்டேன். அவர் உண்மையிலேயே பாடசாலைகளில் கல்வி கற்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஏனைய தமிழ் மக்களுக்காகவும் அரிய சேவைகளைச் செய்திருந்தார். அவர் தமிழிலே மிகவும் பற்றானவர். இனிய தமிழிலே பேசுவார். அதாவது தமிழையே எல்லோரிடமும் புகுத்த வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்டு, பல புத்தகங்களையும் எழுதி மாணவர்களுக்காக வெளியிட்டவர். அந்த வகையிலே மாணவர்களுடைய கல்வி அறிவினை மேம்படுத்துவதற்காக தமிழீழக் கல்விக் கழகத்தின் ஊடாக அன்னை பூபதி ஞாபகார்த்தமாக மாணவர்களிடையே பொது அறிவை வளர்க்க வேண்டும் என்று பொது அறிவுப் போட்டிகளை வருடா வருடம் நடாத்தி வந்தவர். அதை விட மாணவர்களுக்குப் பல பயிற்சி வகுப்புக்களையும் நடாத்தினார். அதே போல் க.பொ.த சாதாரண தர பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்காக ஒவ்வொரு வருடமும் வருட இறுதியில் தமிழீழக் கல்விப் பொதுத் தேர்வுப் பரீட்சையை நடாத்தி, அவர்களுக்கான பெறுபேற்றினையும் வழங்கி, இறுதியாக சான்றிதழ்களையும் வழங்கி, பரிசுப் பொருட்களையும் – அதாவது மாணவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவும், அவர்களை உயர வைப்பதற்காகவும் தங்கப் பதக்கங்களை – வழங்கி வந்தார். அந்தப் பரீட்சைகளை எல்லாம் ஒழுங்குபடுத்தி நடாத்துவதற்காகவும், அந்தப் பரீட்சைக்கான விடைத் தாள்களைத் திருத்திப் பெறுபேறுகளை அனுப்பி வைப்பதற்காகவும் பல வழிகளிலே நான் அவருக்கு உதவி செய்திருக்கிறேன்.
அதைவிட மாணவர்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வந்தது. வன்னியிலே ஆசிரியர் பற்றாக்குறை மிகவும் சிக்கலாக இருந்தது. அந்த வகையிலே படித்த மாணவர்களை – அந்த இடத்தைச் சேர்ந்த மாணர்களை – பொருத்தமானவர்களை – தெரிவு செய்து, அவர்களுக்கான நேர்முகப் பரீட்சையினைக் கல்வித் திணைக்களத்தின் ஊடாகத் தெரிவு செய்து, தொண்டர் ஆசிரியர்களாக நியமித்து, அவர்களுக்கு சிறிய கொடுப்பனவுகளையும் கொடுத்து, பின்தங்கிய பாடசாலைகளிலும், ஏனைய பாடசாலைகளிலும் அவர்களைப் பணியில் இருத்தி, மாணவர்களுக்கு அரும்பணியாற்றியதில் கல்விக் கழகம் முக்கிய பங்கு வகிக்கின்றது. அந்த ஆசிரியர்களைப் பாடசாலைகளுக்கு நியமிக்கும் போது அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்களையும், அவர்களைக் கற்பிக்கத் தகுதியானவர்களாக மாற்றியைமக்கும் பணிகளையும் கல்விக் கழகம் செய்து வந்தது. அவர்களுக்கான பயிற்சி வகுப்புக்களை நடாத்தும் போது, அந்தப் பயிற்சிகளுக்கு இணைப்பாளராக இருந்து எமது கல்வித் திணைக்களத்தின் சார்பிலே நானும், எனது சக உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் என்ற வகையிலே எல்லோரும் இணைந்து பல உதவிகளை வழங்கியிருந்தோம். எமது கடமையின் பொருட்டு நாங்கள் அவர்களுக்குக் கீழே, அவர்கள் எங்களுக்குப் பணித்த வேலைகளையும் நாங்கள் திருப்திகரமாக அவர்களுக்கு வழங்கியிருந்தோம்.
அதை விட மாவீரர்களின் நினைவாக மாணவர்களின் செயற்பாடுகளையும், அவர்களது திறன்களையும் வளர்க்கும் முகமாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வந்தார்கள். அந்த வகையிலே தமிழீழ விளையாட்டுத்துறை மிகவும் முக்கிய பங்காற்றி வந்தது. தமிழீழ விளையாட்டுத்துறையில் ஓர் அங்கத்தவராக நானும் கடமையாற்றியிருந்தேன். வருடா வருடம் வன்னிப் பெருநிலப்பரப்பில் பெருவிளையாட்டுகள், மெய் வல்லுனர் விளையாட்டுக்கள் என்பனவற்றை அவர்கள் நடத்தி வந்தார்கள். உண்மையிலேயே அரச கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், நாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பொழுது அவர்களின் ஒத்துழைப்போடு எமது மாணவர்களுக்கான அனைத்து செயற்பாடுகளையும் நாங்கள் திருப்திகரமாக ஆற்றி வந்திருந்தோம்.
கேள்வி: வன்னியிலே யுத்த காலத்திலே இறுக்கமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டிருந்து.
பதில்: ஆம்.
கேள்வி: அதாவது வெளியிடங்களில் இருந்து கல்வி உபகரணங்கள் கூட கொண்டு வருவது கடினமாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றேன். அவ்வாறான சூழலிலே விடுதலைப் புலிகள் முன்னெடுத்த இந்தக் கல்வி மேம்பாட்டு – விளையாட்டுத்துறை சார்ந்த பணிகள் எவ்வாறான மாற்றத்தை – மக்களின் வாழ்வில் அல்லது மாணவர்களின் வாழ்வில் – கொண்டு வந்தன என்று நீங்கள் கூறலாம்?
பதில்: உண்மையிலேயே அவர்கள் வேவ்வேறு நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டும், விளையாட்டுப் பொருட்களோ, அல்லது அதற்கான உபகரணங்களையும் தங்களுடைய செலவிலேயே எடுத்து, பாடசாலைகளுக்கு வழங்கி, இருந்த வளங்களைப் பாடசாலைகளின் மாணவர்களின் தொகைக்கு ஏற்ப அவர்களுக்குப் பங்கிட்டு வழங்கி, அதற்கான பயிற்சிகளையும் மாணவர்களுக்கும் வழங்கி வந்தார்கள். இறுதியாக மாகாண மட்டப் போட்டிகளில் கூட மாணவர்கள் பங்கு பற்ற வேண்டும் என்பதற்காக அவர்களுக்கான விசேட பயிற்சிகளையும் வழங்கி, அவர்களுக்கான சத்துணவுகளையும் வழங்கி, அவர்களைப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கும், ஏனைய பிரதேசத்துப் பிள்ளைகளைப் போல் சிறந்த மாணவர்களாகத் திகழ்வதற்காக அவர்கள் அரும்பணி ஆற்றினார்கள்.
கேள்வி: விடுதலைப் புலிகள் தமது கல்வி – விளையாட்டுத்துறை போன்றவற்றை வைத்திருந்த அதே நேரத்திலே, தனியான பாடத்திட்டங்களை – மாணவர்கள் கற்பதற்கான பாடத்திட்டங்களையும் –வைத்திருந்தார்களா?
பதில்: அரசாங்கப் பாடத்திட்டத்தோடு சேர்த்து – எமது தமிழீழ வரலாறுகள் உண்மையிலேயே மாற்றியமைக்கப்பட்டிருந்தது. அதற்காக தமிழீழக் கல்வி வரலாறு – தனியான பிரத்தியேகமான நூலையும் தயாரித்து, அதை அரசாங்கப் பாடத்திட்டத்தோடு சேர்த்து, ஒரு பாடமாக அதைக் கற்பித்து வந்தோம். அதை விட மாணவர்களினுடைய நலன் கருதி அவர்களுக்குத் தேவையான விடயங்களை அவர்கள் பயற்சி வகுப்புக்களிலே நடத்தி வந்தார்கள்.
கேள்வி: இதில் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் அல்லது ஏனைய தொழில்நுட்பத் துறைகளிலே எவ்வாறான பங்களிப்பு விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவுகளில் இருந்து கிடைத்தது?
பதில்: மாணவர் அமைப்பிற்குப் பொறுப்பாக இருந்தவர்களில் கல்விமான்கள் நிறையப் பேர் இருந்தார்கள். அதில் உயர்தரப் பாடசாலைகளில் உயர்தர மாணவர்களுக்காகக் கணினி வகுப்புப் பயிற்சிகளை நடத்தியிருந்தார்கள். போதிய கணினிகள் இல்லாத காலகட்டத்தில் அவர்களே கணினிகளைக் கொண்டு வந்து பொருத்தி, மாணவர்களுக்கான கணினி அறிவினையும், தொழில்நுட்ப அறிவினையும் வழங்கியிருந்தார்கள்.
கேள்வி: நீங்கள் செஞ்சோலை சிறுவர் காப்பகத்தோடும் இணைந்தும் சில காலம் பணிபுரிந்ததாக அறிகின்றோம். அவை பற்றிக் குறிப்பிடுங்கள்.
பதில்: செஞ்சோலைக்கு நான் எமது கல்வித் திணைக்களத்தின் ஊடாகச் சென்றிருக்கின்றேன். அவ்வாறு அங்கு சென்ற போது அங்கு கடமையாற்றியிருந்த அதிபர் சர்வாங்கினி அக்கா, பொறுப்பாக இருந்த ஜனனி அக்கா ஆகியோரோடு நான் இறுக்கமாகப் பழகினேன். அப்படி நெருங்கிப் பழகிய சந்தர்ப்பத்திலே அவர்களுக்கு என் மீது நம்பிக்கை வந்து, என்னையும் ஒரு குடும்ப அங்கத்தவராக அவர்கள் இணைத்துக் கொண்டார்கள். அந்த வகையிலேயே அங்கிருந்த சிறிய பிள்ளைகள் எல்லோருக்கும் தனித்தனி வீடாக அமைத்து, அவர்களுடைய தனிமையை உணராத வகையிலே ஆறு – ஏழு பிள்ளைகளாக ஒவ்வொரு வீட்டிலும் அமைத்து, அந்த வீட்டுக்கு ஒரு பராமரிப்பாளரை வைத்திருப்பார்கள். அவர்களைப் பெரியம்மா, சித்தி என்று உறவு கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். அப்படி இருக்கையில் அவர்களுக்கு உறவினர்கள் இல்லை என்ற ஏக்கம் இல்லாதிருப்பதற்காக எங்களையும் – என் போன்ற என்னுடன் வேலை செய்த சில சக ஆசிரியர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்களையும் – அங்கே வந்து தங்கிப் போகும்படி அவர்கள் கேட்பதுண்டு. அப்படியான சந்தர்ப்பத்தில் நானும், எனது நண்பர்களும் அவர்களுடன் கூட இருந்து, அவர்களுடன் இரவுப் பொழுதைக் கழித்த காலமும் உண்டு. பின்னர் அவர்களுக்கான விளையாட்டுப் பயிற்சி – குறிப்பாக அவர்கள் வலைப்பந்தாட்டத்தில் சிறந்த மாணவர்கள். ஒவ்வொரு முறையும் அவர்கள் போட்டிக்கு வருவார்கள். அப்போது தங்களுக்கான பயிற்சியை வந்து தரும்படி கேட்டிருந்தார்கள் என்னிடம். நான் உடல் கல்வித்துறையைச் சேர்ந்தவர் என்ற வகையில், அவர்களுக்கான விளையாட்டுக்கு – வலைப்பந்தாட்டப் பயற்சி மற்றும் ஏனைய பயிற்சிகளையும் – அவர்களுக்கு வழங்கியிருக்கின்றேன். அவர்கள் மிகவும் அன்பாகவும், அரவணைப்போடும், மிகவும் உரிமையோடும் என்னோடு பழகியிருந்தார்கள். இறுதியிலே கூட – இடம்பெயர்ந்து அவர்கள் வந்ததன் பின்னர் கூட, அவர்களை வவுனியா இறம்பைக்குளத்தில் ஒரு தனியான முகாம் – முகாம் என்று சொல்வதை விட, ஒரு திருச்சபையினர் பொறுப்பெடுத்து கூடாரங்களை – அமைத்து அங்கே வைத்திருந்தார்கள். நானும் இடம்பெயர்ந்து சென்ற போது வவுனியாவில் இரண்டு வருடம் ஆசிரியராகக் கடமையாற்றினேன். அந்த நேரத்திலும் எனக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் கிடைத்தது. அவர்களை அங்கு போய் பார்த்து, சந்தித்துக் கதைத்து, அவர்களுக்கான மேலதிக பயிற்சி வகுப்புக்களை நடாத்துவதற்கு எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. அதை ஒரு பெரும் பேறாக நான் எண்ணுகின்றேன். அந்த இடத்திலே அவர்கள் என்னைக் கண்டவுடன் அளவில்லா மகிழ்ச்சியடைந்தார்கள். பழைய ரீச்சர் தங்களிடம் வந்துவிட்டார் என்று. தங்களைச் சந்தித்தவுடன் அவர்கள் மிகவும் சந்தோசப்பட்டார்கள். அவர்கள் தங்களுடைய மனதிலே உள்ள பாரங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள். உண்மையிலேயே மிகவும் மன வருத்தத்திற்குரிய விடயம் தான் (இறுதி யுத்தத்தின் முடிவு). அவர்களுடன் பழகக் கொடுத்த வைத்ததற்கு நான் இன்றைக்கும் இறைவனுக்கு நன்றி சொல்கின்றேன்.
கேள்வி: செஞ்சோலைப் பொறுப்பாளர் ஜனனி போன்றவர்களோடு பணிபுரிந்தவர் என்ற வகையிலேயே, அங்குள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதில் எவ்வாறான பணிகளை விடுதலைப் புலிகள் முன்னெடுத்தார்கள் என்று கூற முடியுமா?
பதில்: உண்மையிலேயே அங்கே இருந்த பிள்ளைகளைப் படிப்பிப்பதற்காக ஒவ்வொரு பாடத்துறைக்கும் பொருத்தமான ஆசிரியர்களை நியமித்திருந்தார்கள். அவர்கள் படிப்பிப்பது சரியா என்பதைக் கண்டுபிடிப்பதற்காகவும், அவர்களின் சேவை திறமையாக நடைபெறுகின்றதா என்பதை அறிவதற்காகவும் எமது துணுக்காய் வலயத்திற்குக் கீழே அவர்களின் பாடசாலை ஆரம்பத்தில் இயங்கிக் கொண்டிருந்தது. பின்னர் போக்குவரத்துச் சிக்கல் காரணமாக முல்லைத்தீவு வலயத்துடன் அவர்கள் இணைந்து கொண்டார்கள். ஆனால் துணுக்காய் வலயத்தில் அந்த நேரம் கடமையாற்றியிருந்த திருமதி வேதநாயகம் அவர்கள் மிகவும் பூரணமாக அவர்களுக்கு ஒத்துழைப்பை நல்கியிருந்தார். அவர்களுக்குத் தேவையான சகல உதவிகளையும் எமது வலயத்தின் ஊடாக நாங்கள் செய்திருந்தோம். அங்கு இருக்கின்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது வலயத்தைச் சேர்ந்த பாடம் – பாடம் சார்ந்த விசேட உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் – பாடத்தைச் சார்ந்த உதவிக் கல்விப் பணிப்பாளர்களும், ஆசிரிய ஆலோசகர்களும் – அங்கு சென்று வதிவிடமாக இரண்டு, மூன்று நாள் தங்கியிருந்து அவர்களுக்கான பயிற்சியினை நாம் வழங்கியிருக்கின்றோம். உண்மையிலேயே அந்தப் பாடத்துறைக்குப் பொருத்தமான, விசேடமான ஆசிரியர்களை அவர்கள் நியமித்திருந்தார்கள். அதை விட நுண்கலைப் பிரிவுகளையும் மிகவும் திறம்பட அவர்கள் இயக்கி வந்தார்கள்.
கேள்வி: இவை தவிர நீங்கள் வேறு ஏதாவது உங்களுடைய கருத்துக்கள் – அதாவது தமிழீழத்தினுடைய நடைமுறை அரசு எவ்வாறு இயங்கியது என்பது பற்றிய எதாவது கருத்துக்களை – கூற விரும்புகின்றீர்களா?
பதில்: தமிழீழத்திலே ஒவ்வொரு துறைசார்ந்த அமைப்புக்களும் இருந்தன. உண்மையிலேயே மக்களுக்காக விடுதலைப் புலிகளும், விடுதலைப் புலிகளுக்காக மக்களும் வாழ்ந்து வந்தார்கள். அந்த நேரத்திலே அனைவரும் ஒன்றே குலம் என்று எல்லோரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள்.
கேள்வி: நல்லது திருமதி வசந்தகுமாரி சந்திரபாலன் அவர்களே. உங்கள் நேரத்தை ஒதுக்கி இந்தச் செவ்வியைத் தந்தமைக்காக.
பதில்: நன்றி. உங்களுக்கும் வணக்கம்.
சந்திப்பு: கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜா
நன்றி: ஈழமுரசு

No comments:
Post a Comment