யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிசாரின் அடாவடித்தனத்தால் யாழ்.ஆறுகால் மடப்பகுதியில் திங்கள் கிழமை மதியம் பரப்பரப்பு ஏற்பட்டது.
அச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
ஆறுகால் மடப்பகுதியில் உள்ள வீடொன்றினுள் ஞாயிற்றுக்கிழமை புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்தவர் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் இருந்த பெண்களையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.
அச் சம்பவம் தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கானவரால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து திங்கள் கிழமை மதியம் யாழ்.பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இரு பொலிசார் முறைப்பாட்டாளரின் வீட்டுக்கு சென்று தாக்குதல் மேற்கொண்ட குழுவுடன் சமாதானமாக போகுமாறும் அச்சுறுத்தும் தொனியில் கூறியுள்ளார்கள்.
அத்துடன் வீட்டில் இருந்தவர்களிடம் நீங்கள் சமாதானமாக போகாவிடின் எல்லோரையும் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியே முறைப்பாடு தொடர்பில் விசாரணையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவும் வீட்டில் இருந்த பெண்களை அச்சுறுத்தி உள்ளனர்.
முறைப்பாட்டாளர்களும் நீதிமன்றுக்கு நீங்கள் வழக்கை கொண்டு செல்லுங்கள் என்று இரு பொலிசாருக்கு கூறியுள்ளனர்.
பொலிசார் வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்துகின்றார்கள் என அயலவர்களுக்கு தெரிய வந்து அயலவர்கள் அங்கு கூடியதனால் பொலிசார் அங்கிருந்து வெளியேறி சென்றனர்.
இதனிடையே குறித்த முறைப்பாட்டாளரின் வீட்டுக்கு செல்வதற்கு வீட்டு விலாசத்தை ஆறுகால் மட சந்தியில் உள்ள வெல்டிங் கராஜில் வேலை செய்வரிடம் கேட்டுள்ளனர். குறித்த நபரும் வீட்டுக்கு செல்வதற்கான வீதியினை காட்டியுள்ளார்.
அவர் காட்டிய வீதி வழியாக சென்ற இரு பொலிசாரும் சிறிது தூரம் சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து ‘ நீ ஏன் எமக்கு பிழையான வீதியினை காட்டினாய் ? ‘ என கேட்டு அவரது முகத்தில் தாக்கி விட்டு சென்றுள்ளனர்.
ஆறுகால் மடப்பகுதியில் நடைபெற்ற இந்த இரண்டு சம்பவத்தாலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment