கிளிநொச்சி மாவட்டத்தின் பிரசித்திபெற்ற குளங்களில் ஒன்றான பிரமந்தனாறு குளத்தின் அணைக்கட்டைப் புனரமைக்கும் பணிகள் துரிதகதியில் இடம்பெற்று வருகின்றன.
பிரமந்தனாற்று வடிநிலத்தின் குறுக்காக அணைக்கட்டை உருவாக்கியே பிரமந்தனாற்றுக் குளம் உருவாக்கப்பட்டது.
இக்குளத்திலிருந்து பெறும் நீர்ப்பாசனத்தின் மூலம் 600 ஏக்கர் பரப்பளவில் மிளகாய், நிலக்கடலை, வெங்காயம் போன்ற மறுவயற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகிறது.
காற்றின் வேகம் அதிகமாக உள்ள பகுதியாக இப்பிரதேசம் காணப்படுவதால் வேகமான அலையடிப்பால் அணைக்கட்டு அரிப்புக்குள்ளாகியிருந்த நிலையிலேயே தற்போது புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இந்த அணைக்கட்டைப் புனரமைப்பதற்கு விவசாய அமைச்சின் நிதியில் இருந்து 9 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் இப்புனரமைப்புப் பணிகளின் முன்னேற்றத்தை வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், கல்வி அமைச்சர் த.குருகுலராஜா ஆகியோர் நேற்று சென்று பார்வையிட்டுள்ளனர்.
இவர்களுடன் விவசாய அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிறஞ்சன், பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்கள் எந்திரி ந.சுதாகரன், எந்திரி வே.பிரேமகுமார் ஆகியோரும் சென்றிருந்தனர்.
No comments:
Post a Comment