மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் உள்ள காயான்கேணி கிராமத்தில் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசார்பற்ற நிறுவனம் ஒன்றினால் நன்கொடையாக கட்டி வழங்கப்பட்ட வீடுகள் சேதமடைந்து உடைந்து விழும் அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒருவார காலத்திற்குள் 10ற்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் சேதமடைந்து தரையில் வீழும் அபாய நிலமை ஏற்பட்டுள்ளதாகவும் இதில் 2 வீடுகளின் கூரைகள் முற்றாக இடிந்து தரையில் வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
100ற்க்கும் மேற்பட்ட வீடுகளின் கதவுகள் ஜன்னல்கள் கூரைகள் மற்றும் சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
கடந்த 06 ஜீலை 2007இல் 263 வீடுகள் எஸ்.ஓ.எஸ். (சிறுவர் கிராமம்) எனும் அரச சார்பற்ற நிறுவனத்தினால் சுனாமி கடற்கோள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வழங்கப்பட்டதாகும்.
மேற்படி வீடுகள் வழங்கப்பட்டு 08 வருடங்கள் கடந்த நிலையில் குறித்த வீடுகளில் நிம்மதியாக தமது பிள்ளைகளுடன் படுத்துறங்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் எவ்வேளைகளிலும் குறிப்பிட்ட வீடுகளின் கூரைகள் உடைந்து தரையில் விழுமோ என்ற ஏக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தற்போது வட கீழ் பருவப்பெயர்சி காற்றின் தாக்கம் அதிகமாக இப்பிரதேசத்தில் நிலவுவதினால் குறித்த வீடுகள் பல சேதமடையும் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து காணப்படும் அபாய நிலைமை காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இதேவேளை த.அருள்சக்தி வயது (34) என்பவரது வீட்டின் கூரை அண்மையில் இடிந்து வீழ்ந்து சேதடைந்துள்ளது. அதிர்ஸ்ட வசமாக குறித்த தினமன்று உறவினர் வீட்டில் படுத்துறங்கியதினால் தமது 3 பிள்ளைகளுடன் உயிர் தப்பியுள்ளனர்.
இவருக்கு இதுவரை அரசோ மற்றும் எனைய அரசசார்பற்ற நிறுவனங்களோ எதுவிதமான உதவிகளையும் வழங்கவில்லையென கவலை தெரிவிக்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்களது நிலைமையினை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.
No comments:
Post a Comment