September 17, 2015

இது கௌரவப் பிரச்சனையல்ல! – புகழேந்தி தங்கராஜ்!

இலங்கை தொடர்பான ஐ.நா. விசாரணை அறிக்கை ‘அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கும்’ என்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணையர் செயித் ராத் அல் ஹுசெய்ன் தெரிவித்திருப்பது, இந்த வாரத் தொடக்கத்தைச் சூடாக்கி விட்டிருக்கிறது. இந்த இதழ் உங்கள் கைகளை எட்டுகிற நொடியில், அந்த அறிக்கையும் நாளிதழ்களில் வெளியாகியிருக்கக் கூடும்.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 30வது அமர்வு, திங்கள்கிழமை (செப்டம்பர் 14) தொடங்கியிருக்கிறது. தொடக்க நாளிலேயே இதைத் தெரிவித்துள்ள ஹுசெய்ன், புதன்கிழமை விசாரணை அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியிருக்கிறார்.
“இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட, நடந்த குற்றங்களுக்கு யார் பொறுப்பு என்பதை அறிவது அவசியம். அதற்கான பணிகளில் மனித உரிமைகள் பேரவை ஈடுபட்டுள்ளது. என்ன நடந்ததென்கிற விரிவான விசாரணையை நடத்தும்படி 2014 மார்ச்சில் நாங்கள் பணிக்கப்பட்டோம். ஆணையத்தின் கண்டுபிடிப்புகள் அதிர்ச்சியளிப்பதாக இருக்கின்றன…..” என்று குறிப்பிட்டிருக்கும் ஹுசெய்ன், ‘இதுதொடர்பான மேல் நடவடிக்கைகளில் கடந்தகாலங்களில் நடந்த தவறுகள் நடக்கக் கூடாது’ என்று இலங்கையை எச்சரிக்கவும் தவறவில்லை.
dcp5766767676 (2)இந்த விசாரணை அறிக்கை எப்படியிருக்கும் என்கிற யூகம் ஒருபுறம் இருக்க, இந்த விசாரணை எப்படி நடந்திருக்கும் என்பதையும் இந்த நேரத்தில் நாம் யோசித்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் போய் விசாரணை நடத்த இலங்கை அனுமதிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியாக சாட்சியம் அளிப்பதற்கான வாய்ப்பு அரிதினும் அரிதாக இருந்தது. ஓர் அரசு என்கிற முறையில், இலங்கை எக்கச்சக்கமான தவறான தகவல்களைத் தந்திருக்க முடியும், திணித்திருக்க முடியும். இப்படியொரு நிலையில்தான் இந்த விசாரணை நடந்தது. மொத்தத்தில் இது ஒரு சமச்சீரற்ற விசாரணை. அதனால், இந்த அறிக்கை எந்த அளவுக்கு முழுமையானதாக இருக்கும் என்கிற ஐயம் உலகெங்கிலும் இருக்கிற தமிழர்களுக்கு இருந்தது, இருக்கிறது.
என்றாலும்கூட, இலங்கை செய்திருக்கும் இமாலயத் தவறை ஓரளவேனும் இது வெளிக்கொண்டுவரும் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறோம் நாம். இந்த விசாரணை அறிக்கை ஓரளவு முழுமையானதாக இருந்தால்கூட, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அது ஆறுதலாக அமையும் என்று நம்புகிறோம்.
இந்த அறிக்கை அதிர்ச்சியைத் தருகிறதோ இல்லையோ, இது வெளிவரும் முன்பே, ‘இந்த அறிக்கையின் அடிப்படையில் உள்ளக விசாரணை நடைபெறுவதையே அமெரிக்கா விரும்புகிறது’ என்று சொல்லி நமக்கு அதிர்ச்சி அளித்தார் அமெரிக்க வெளியுறவுத் துறையின் நிஷா பிஸ்வால். நிஷாவின் கருத்து, அவரது தனிப்பட்ட கருத்தல்ல….. சர்வதேச நாட்டாண்மையாக இருக்கிற ஒரு வல்லரசு நாட்டின் கருத்து. இந்தத் தவறான கருத்தைத்தான் உணர்வுப்பூர்வமாக நாம் கண்டிக்கிறோம், அறிவுப்பூர்வமாக விக்னேஸ்வரன் கண்டிக்கிறார்.
செப்டம்பர் முதல் தேதி வடமாகாண சபையில் முதல்வர் விக்னேஸ்வரன் நிறைவேற்றிய தீர்மானம் இந்த விவகாரம் குறித்து விரிவாகப் பேசுகிறது….
“சர்வதேச குற்றவியல் விதிகளுக்கான ரோம் சாசனத்தில் வரையறுக்கப்பட்டுள்ள சர்வதேச சட்டத்தின் படி இனக்கொலைச் செயல்களுக்கு அவற்றைச் செய்த உண்மையான காரணகர்த்தாக்களே பொறுப்பு……
இலங்கையின் அரசு இயந்திரங்கள் தமிழர்களை நடத்தும் முறை – மனித இனத்திற்கு எதிரான குற்றம், கொடுமை, கற்பழிப்பு, வலுக்கட்டாய மறைவுகள் மற்றும் மக்களின் காணிகளைக் கைப்பற்றுதல் போன்ற சர்வதேசக் குற்றங்களின் கீழ் வருபவை. நிகழ்த்தப்பட்ட குற்றங்களின் தன்மையையும், கூடிய அளவில் அவற்றுக்குக் காரணமானவர்களையும், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையரின் அறிக்கை அடையாளம் காட்ட இருப்பதால், அந்த அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்….
இந்நிலையில், ஒரு நாட்டின் முகவர்களின் (அதிகாரிகளின்) செயல்களுக்கான பொறுப்பு அந்த நாட்டையும் சார்ந்தது என்பதால், காரணகர்த்தாக்களாக குற்றம் சாட்டப்படுபவர்களுக்கு எதிரான விசாரணை, இலங்கை அரசால் நிறுவப்பட்ட எந்த ஒரு இயந்திரத்தின் மூலமாகவும் நடக்கக்கூடாது……
இச்சூழலில், சர்வதேச குற்றங்களின் காரணகர்த்தாக்கள் மீது, உள்ளகப் பொறிமுறையின் மூலம் நடத்தப்படும் விசாரணை என்பது, குற்றம் செய்திருக்கக்கூடிய அரசு தனது முகவர்களை தானே விசாரிப்பதாகவே அமையும். அது nemo judex in sua causa (சொந்த வழக்கிற்கு யாரும் நீதிபதியாக முடியாது) என்ற கோட்பாட்டுக்கு எதிரானதாக அமைவதால், நீதியைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகத்தான் இருக்கும்…..
சட்ட ரீதியாகவும் கூட, இந்த சர்வதேச குற்றங்களுக்கென எந்த ஒரு உள்நாட்டுச் சட்டமும் இலங்கையில் கிடையாது. புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டால் nullum crimen sine lege (சட்டம் இல்லாமல் குற்றம் இல்லை) என்ற கோட்பாட்டில் உள்ள பின்னோக்கி அமலுக்கு வரும் குற்ற வழக்கிற்கு எதிரான தடையை மீறுவதாக அமையும்…..
பொதுக் கோட்பாடுகளுக்கு எதிரான குற்றங்கள் இலங்கையின் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்கிற வாதமானது, சர்வதேச குற்றங்கள் பெரும்பாலும் சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் பாரம்பரிய சர்வதேச சட்டத்தைச் சார்ந்து இருப்பதால், சர்ச்சைக்குரியது. அப்படிப்பட்ட நடைமுறையின் சட்டதிட்பம் சந்தேகத்திற்குரியது…….
அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, உள்நாட்டுச் சட்டத்தில் கூறியுள்ள உள்நாட்டுக் குற்றங்கள் குறித்து இலங்கைக்குள் விசாரிக்க வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது என்பதால், அது மேலும் சந்தேகத்திற்குரியதாகிறது…..
மனித, அரசியல் மற்றும் சமூக உரிமை மீறல்களால்தான் இலங்கை வீழ்ந்தது. குடிமக்களைக் காத்து சேவை புரிய வேண்டிய நாட்டின் முக்கியத் தூண்களின் தோல்வியால்தான் இது நிகழ்ந்தது. நாட்டின் அரசியல் கலாச்சாரம் மற்றும் அரசியல் மனோபாவம் ஆகியவற்றின் தொடர் வீழ்ச்சியும், நீதி – சட்டம் – ஒழுங்கு ஆகியவற்றுக்குப் பொறுப்பான நீதித்துறை, காவல் துறை மற்றும் இராணுவத்தின் தோல்வியும், இலங்கையில் சட்டமின்மை என்பதே ஒரு புதிய நடைமுறையாக ஆகிவிட வழிவகுத்தன. இந்தப் புதிய நடைமுறையின் முழு பாதிப்பையும் தமிழ்ச் சமூகம் தாங்க வேண்டியிருந்தது…….
சிறுபான்மையினருக்கு எதிரான நீதித்துறை உறுப்பினர்களின் பாரபட்சம், சர்வதேச வழக்குரைஞர்கள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளாலும், The Judicial Mind – Responding to the protection of minority rights (நீதித்துறையின் உள்ளம் – சிறுபான்மையினர் உரிமை காத்தலுக்கான பிரதிபலிப்பு) என்ற தங்களது பதிப்பில் ஜயந்தா டி அல்மீய்டா குணரத்னே, கிஷலி பின்டோ ஜயவர்தனே மற்றும் கெஹன் குண்டில்லகே போன்ற சிங்கள வழக்கறிஞர்களாலும் பதிவு செய்யப்பட்டுள்ளது……
அதேபோன்று, சர்வதேச கொடையாளி நாடுகள் மற்றும் இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட ‘தலைசிறந்த நபர்களின் சர்வதேச சுதந்திர குழு (IIGEP)’, விசாரணை ஆணையத்தையும் அதன் சார்பாக நடைபெறும் 17 கொடுமைகள் குறித்த விசாரணைகளையும் கண்காணிக்கும்படி பணிக்கப்பட்டது. அந்தப் பணியிலிருந்து அந்தக் குழு விலக நேர்ந்தது. அதற்கு அவர்கள் சுட்டிக்காட்டிய காரணங்கள் முக்கியமானவை. நாட்டின் (நீதித்துறை) தோல்விகளின் நீண்ட வரலாற்றையும், அரசு அமைப்புகளின் உள்ளார்ந்த குறைபாடுகளையும் அந்தக் குழு எடுத்துச் சொன்னது……
மேலே குறிப்பிட்ட காரணங்களால், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு எதிராக சர்வதேசக் குற்றங்கள் புரிந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க சர்வதேச (குற்றவியல்) தீர்ப்பாயம் ஒன்றை அமைக்க சர்வதேச சமூகத்தை இந்த சபை கேட்டுக்கொள்கிறது. அர்த்தமுள்ள நல்லிணக்கப் பாதையில் இந்த நாட்டைக் கொண்டு செல்லும் வகையில், நம்பகமான சர்வதேசப் பொறிமுறையை அமைக்க சர்வதேச சமூகத்துடன் இணைந்து துணிவுடன் பணியாற்றி நீதியைப் பெற்றுத் தரும்படி இலங்கை அரசின் புதிய தலைவர்களை வலியுறுத்துகிறோம்…..”
இவைதாம், வட மாகாண சபை தீர்மானத்தின் முக்கியப் பகுதிகள். இதைத்தான் சென்ற இதழில் குறிப்பிட்டிருந்தேன்.
“இலங்கையைச் சேர்ந்த எந்த நீதிபதியும், ராணுவத்தின் மீது குற்றம் கண்டுபிடிக்கப் போவதில்லை…..” என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில தினங்களில், விக்னேஸ்வரன் மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார். இது, சிங்களத் தரப்பைக் கோபப்படுத்துவதற்குக் காரணம் இருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலும் இது தொடர்பாக புயலடிப்பதுதான் கொடுமை.
நடந்தது இனப்படுகொலை தான் என்றும், சர்வதேச விசாரணை மூலம்தான் உண்மைகள் வெளியாகும் என்றும் விக்னேஸ்வரன் மீண்டும் மீண்டும் சொல்வது சிங்களத் தரப்புக்கு நிச்சயமாக மகிழ்ச்சியளிக்கப் போவதில்லை. ‘இலங்கையைச் சேர்ந்த எந்த நீதிபதியும் ராணுவத்தின் மீது குற்றம் கண்டுபிடிக்கப் போவதில்லை’ என்கிற அவரது கருத்தை, ஒரு தேச விரோதக் கருத்தாகக் கூட அவர்கள் பார்க்கக் கூடும்.
சென்ற மாதத் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்று எதிர்க்கட்சித் தலைமையையும் ஏற்றுக்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத்தான் புரிந்துகொள்ளவே முடியவில்லை. இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை மூலமே நீதி பெற முடியும் – என்பது தெரிந்தும், அதை வலியுறுத்தத் தவறிவருகிற கூட்டமைப்பு, ‘சட்டரீதியான மாற்று வழியில் சர்வதேச விசாரணை சாத்தியம்தான்’ – என்று விக்னேஸ்வரன் சொல்வதைப் பற்றி விவாதிக்காமல், ‘கனடாவுக்கு தேர்தல் நிதி திரட்ட விக்னேஸ்வரன் ஏன் வரவில்லை’ என்று விவாதித்துக் கொண்டிருக்கிறது.
இனப்படுகொலையை நிகழ்த்திய குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவதைக் காட்டிலும், விக்னேஸ்வரனைக் கூண்டில் ஏற்றுவதுதான் முக்கியம் என்று நினைக்கிறார்களா? புரியவில்லை.
கொழும்பு டெலிகிராப் வாசகர் ஒருவர் குறிப்பிட்டிருப்பதைப் போல, விக்னேஸ்வரனின் குரல், பாதிக்கப்பட்ட மக்களின் குரல். அவர்களது உள்ளக் குமுறலைத்தான் விக்னேஸ்வரன் எதிரொலிக்கிறார். நீதிக்கான குரலை ஏற்க மறுப்பது, கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உயிர்களுக்கு செய்கிற துரோகம் என்பதைக் கூட்டமைப்பு கவனத்தில் கொள்வது நல்லது.
வடக்கில் சட்டம் சார்ந்த மருத்துவ அலுவலராக இருந்த மருத்துவர் ஒருவர் தெரிவித்திருக்கிற கருத்து, ‘இலங்கையைச் சேர்ந்த எந்த நீதிபதியும் ராணுவத்தின் மீது குற்றம் கண்டுபிடிக்கப் போவதில்லை’ – என்கிற விக்னேஸ்வரனின் குற்றச்சாட்டை உறுதி செய்வதாக இருக்கிறது. போர் நடந்த பகுதிகளில் பணியாற்றியவர் அவர்.
‘இறுதிக்கட்டப் போரின்போதுதான் போர்க்குற்றங்கள் நிகழ்ந்தன என்பது தவறான தகவல். முப்பது ஆண்டுகளுக்கு முன், லலித் அதுலத்முதலி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்ட போதே, இந்தப் போர்க்குற்றங்கள் தொடங்கிவிட்டன. ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களையும் கடுமையான பாதிப்புக்கு ஆளானவர்களையும் பரிசோதித்த மருத்துவன் என்கிற முறையில், இலங்கை ராணுவத்தின் போர்க்குற்றங்களுக்கு நான் ஒரு நேரடி சாட்சியம்’ என்று பேசத் தொடங்குகிறார், ஞானசங்கரலிங்கம் என்கிற அந்த மருத்துவர்.
‘ராணுவத்தின் பல்வேறு கொடுமைகள் விசாரிக்கப்படவே இல்லை. மிகச் சில சம்பவங்களில் மட்டுமே, கடும் நெருக்கடியின் காரணமாக விசாரணை நடத்தப்பட்டது. அவை, கண்துடைப்பு விசாரணைகளாகவே இருந்தன. அந்த வழக்குகள்கூட, பின்னர் கொழும்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டன……
பாதிக்கப்பட்டவர்களின் தரப்போ, சாட்சிகளோ நேரடியாக கொழும்புக்குப் போக முடியாத நிலையில், அவர்கள் இல்லாமலேயே வழக்குகள் விசாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டு விட்டன. சில வழக்குகளில் தொடர்புடையவர்கள், மிகுந்த பிரயத்தனப்பட்டு கொழும்பு சென்றனர். என்ன நடந்ததென்பதை நீதிமன்றத்தில் துணிவோடு விவரித்தனர். அதற்காக அவர்கள் மோசமான மிரட்டல்களைச் சந்திக்க வேண்டியிருந்தது……
அனேகமாக எல்லா வழக்குகளிலுமே, சாட்சியங்கள், பிரேத பரிசோதனை அறிக்கை – ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல், காவல்துறை தெரிவித்த கட்டுக்கதைகளின் அடிப்படையிலேயே நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கின…..
எந்த வழக்கிலும், குற்றஞ்சுமத்தப்பட்ட ராணுவத்தினர் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தண்டிக்கப்படவில்லை…. சிறை வைக்கப்படவில்லை. அவற்றில் பல, பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய பச்சைப் படுகொலைகள்….
இப்போது, இலங்கையே இலங்கையை விசாரித்துக் கொள்ளும் விதத்தில் உள்ளக விசாரணைக்கு அனுமதித்தால் அது நிச்சயமாக ஒரு கண்துடைப்பு மோசடி விசாரணையாகத் தான் இருக்கும்….’
டாக்டர் ஞானசங்கரலிங்கம் சொல்வதைத்தான், விக்னேஸ்வரனும் சொல்கிறார். உள்ளக விசாரணையால் பயனில்லை என்கிறார். இலங்கை நீதிபதிகளின் துணிவின்மை-நடுநிலையின்மையை அம்பலப்படுத்துகிறார். கூட்டமைப்புக்கு இது புரிகிறதா இல்லையா?
இலங்கையின் அதிகாரப்பூர்வ எதிர்க் கட்சித் தலைவர் என்கிற முறையில், சம்பந்தன் ஏதேனும் ஒரு வழியைத் தேர்ந்தெடுக்கலாம். ஒன்று – சர்வதேச தீர்ப்பாயத்தை அமைக்கக் கோரும் விக்னேஸ்வரனின் தீர்மானத்தை வழிமொழியலாம். அதன் மூலம், சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்கப் பார்க்கும் இலங்கையை வழிக்குக் கொண்டு வரலாம். அல்லது, இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதத்தில், மைத்திரி-ரணிலின் உதவியுடன் இன்னொரு விரிவான விசாரணையை ஐ.நா.மனித உரிமைகள் பேரவை வடகிழக்கு மக்களிடம் நேரில் நடத்த வேண்டும் – என்று கோரலாம்.
இது விக்னேஸ்வரனுக்கும் சம்பந்தனுக்கும் இடையிலான கௌரவப் பிரச்சினையல்ல! தமிழராகப் பிறந்த ஒவ்வொருவரின் உயிர்ப் பிரச்சினை. இலங்கையை இலங்கையே விசாரித்துக் கொள்ளட்டும் – என்று விட்டுவிடுவது இந்த நூற்றாண்டின் ஆகப் பெரிய இளிச்சவாய்த் தனமாக ஆகிவிடும். இதை, அனைத்துத் தரப்பினரும் உணர வேண்டும்.

No comments:

Post a Comment