தமிழ்மக்களின் அரசியல் உரிமை என்பது மறுக்கப்பட முடியாததொன்று அதற்காக தென்னிலங்கை சக்திகளுடன் முரண்பாடான அரசியல் செய்து காலம் கடத்துவதைவிடுத்து இணக்க அரசியல் செய்வதினூடாக தமிழ் மக்
களின் உரிமைக்கு அப்பாலான பல பிரச்சினைகளை தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வழிவகுக்கும் என அம்பாறை மாவட்ட தமிழ்புத்திஜீவிகள் அமையம் கருதுகின்றது.
தண்டவாளம் போல உரிமை அரசியல் பயணிக்கின்ற சமகாலத்தில் சமகால தேவைகளுக்கான இணக்க அரசியலும் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கருதுகின்றனர்.
இதற்கு அம்பாறை மாவட்ட பூகோளவியல் ரீதியான அமைவிடமும் ஒரு காரணியாகும்.
தமிழ்த்தேசியம் என்ற கருத்தியல் வடக்குகிழக்கு மாகாண தமிழ் மக்களை பல தசாப்தகாலமாக அரசியல் அநாதைகளாக்கியுள்ளதை மறுக்கமுடியாது. அதற்காக அதனை முற்றுமுழுதாக கைகழுவி விடவும் முடியாது. அதற்குள்ளும் சலுகை அரசியல் பற்றிச் சிந்திக்கின்ற தேவையுமுள்ளது. அதனை முற்றாக புறந்தள்ளிவிடவும் முடியாது.
கிழக்கில் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தனின் ஆட்சிக்கு பின்னர் மாகாணசபையின் கீழ் வழங்கப்பட்ட தொழில் நியமனங்கள் இடமாற்றங்கள் என்பவற்றை வைத்துப் பார்க்கின்றபோது தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
அதற்கு அரசியல் அதிகாரமில்லாத தன்மைதான் காரணம். இதனால் த.தே.கூட்டமைப்புமீது மக்களுக்கு ஒருவித சலிப்பு வராமலில்லை. எனினும் மாற்று சக்திகள் முறையாக இல்லையென்ற காரணத்தினால் தொடர்ந்து ஆதரவு நல்க வேண்டியிருந்தது.
மத்தியில் அமைச்சு இல்லாமல் மாகாணத்தில் அமைச்சு எடுத்தமைக்கான காரணம் நியாயமாக இல்லையென்பதை யாவரும் அறிவோம். அமைச்சு எடுத்து எதனைச் சாதித்தோம் என்பது வேறுவிடயம். வாக்களித்த மக்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன? என்பதையும் ஆராயவேண்டும்.
அம்பாறை மாவட்ட நிலைமை!
அம்பாறை மாவட்ட தமிழர் அரசியலை நோக்குகின்ற போது ஒரு சிலரைத்தவிர ஏனையோர் எம்.பியாக வந்த பிற்பாடு மக்களை மறந்து செயற்பட்டவர்களாகவே இருந்து வந்துள்ளார்கள். சந்திக்கச் சென்றாலும் ஏச்சும் பேச்சும். இதற்காகவா மக்கள் வாக்களித்தார்கள்?
அவர்கள் மக்களால் தெரிவானவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. மக்களை மறந்து செயற்பட்டவர்களுக்கு வரலாறு கற்றுக்கொடுத்த பாடங்கள் அதிகம்.
அவர் எம்.பி.யாகவிருக்கலாம் அமைச்சராகவிருக்கலாம்.
எம்.பி.யாகியதும் அவர்களது தொலைபேசி மௌனிக்கப்படுமானால் பயணம் சிக்கலாகும் என்பதற்கு அப்பால் வழமைபோல ஒருமுறைதான் என்பதை தற்போதே கட்டியம் கூறமுடியும். கூட இருப்பவர்களின் கதையை மட்டும் கேட்பதற்காகவா மக்கள் பெருமளவில் வாக்களித்தார்கள்?
எம்.பி.யாக வந்தவருக்கு நல்ல வழியை காட்டவேண்டியது கூட இருக்கும் புத்திஜீவிகளின் பொறுப்பாகவுள்ளது.அருகில் அப்படிப்பட்டவர்கள் இல்லாவிடில் தேடிப்பெற்றுக் கொள்ளவேண்டும்.
ஒருவர் எம்.பி.யாவது அவரது சொந்த வாக்கில் மட்டுமல்ல. ஏனைய 9 வேட்பாளர்களதும் வாக்குகளாலும் என்பதை மறந்துவிடக்கூடாது. தனியே கட்சிக்காக வாக்களித்தவர்களும் உள்ளனர்.
எனவே அனைவரையும் அரவணைத்து அரசியல் செய்யவேண்டியது கடமையாகும். வாக்களித்தமக்களுக்கு செய்யவேண்டியது பணி அல்ல கடமை. அதனை உணர்ந்து அரசியலை முன்னெடுத்தல் நலமாகுமென தமிழ்மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
No comments:
Post a Comment