கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ முகாமில் சித்திரவதைக் கூடங்கள் இயங்கி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரகீத் எக்னெலிகொட காணாமற்போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரிடம் நடத்தப்பட்ட விசாரணைகள் மற்றும் கண்டி மேல்நீதிமன்றத்தில் நடத்தப்படும் வழக்கு ஒன்றின் மூலம், இந்த சித்திரவதைக் கூடங்கள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதையடுத்து, ஊடகவியலாளர் எக்னெலிகொட கடத்தல் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணைகள் மேலும் விரிவுபடுத்தப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அடுத்த சில நாட்களில், கிரிதலை இராணுவ முகாமில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிறப்புக் குழுவொன்று சென்று நேரடியாக விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சிறிலங்கா இராணுவ அதிகாரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட ராஜகிரியவில் கடத்தப்பட்டு கிரிதலை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதும் அங்கு அவர் சித்திரவதை செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்டு நான்கு நாட்களின் பின்னர், அப்போது கிரிதலை முகாமுக்கு பொறுப்பாக இருந்த- தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகளினால் அவர் அந்த முகாமில் இருந்து கொண்டு செல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இன் பின்னர், பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவு, கைது செய்யப்பட்டுள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகளிடம் தொடர்ந்தும் விசாரணைகளை நடத்தி வருகிறது.
No comments:
Post a Comment