June 10, 2016

‘ தமிழகத்தின் உணர்வுக்கு எதிராக மத்திய அரசு அநீதி!’ -கொந்தளிக்கும் திருமாவளவன்!

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலையை வலியுறுத்தும் வாகனப் பேரணியில் அனைவரும் ஒன்று திரள வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்திருக்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.


ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு, 25 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலைக்காக, நாளை வேலூரில் இருந்து வாகனப் பேரணி நடக்க இருக்கிறது.

இந்தப் பேரணிக்கு ஆதரவாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.திரைத் துறையில் இருந்து நடிகர்கள் சத்யராஜ், விஜய்சேதுபதி, ரோகிணி, கலையரசன், இயக்குநர்கள் ராம், ரஞ்சித், நவீன் உள்ளிட்டவர்கள் பேரணியில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் பேரணி பற்றிப் பேசும்போது, ” கடந்த 25 ஆண்டுகளாக சிறைச்சாலையில் வாடிவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்யக்கோரி, ‘ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம்’ சார்பில், ஜூன் 11, 2016 அன்று, வேலூர் சிறை அருகில் தொடங்கி சென்னைக் கோட்டை நோக்கி நடைபெறவுள்ள மாபெரும் வாகனப் பேரணியில் விடுதலைச் சிறுத்தைகளும் பங்கேற்கிறது.

ஏழு தமிழர்கள் விடுதலை என்பது விடுதலைச் சிறுத்தைகளின் நீண்டநாள் கோரிக்கையாகும். அதற்காக நடைபெற்ற அத்தனைப் போராட்டங்களையும் வி.சி.க. ஆதரித்து பங்கேற்று வந்துள்ளது. அந்த வகையில் இந்த அறப்போராட்டத்தையும் ஆதரிக்கிறது.

இப்போராட்டத்தில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களைச் சார்ந்த விடுதலைச் சிறுத்தைகள் பெருவாரியாகப் பங்கேற்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழுபேரையும் விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டப்  பின்னரும், அதை பொருட்படுத்தாமல், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மாறாக மத்திய அரசு நடந்து வருகிறது.

ஏழு தமிழர்களையும் விடுதலை செய்வதற்கான அறிவிப்பை தமிழக அரசு செய்த பிறகும், அவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருப்பது அநீதியாகும். மத்திய அரசின் இத்தகைய தமிழர் விரோதப் போக்கை கண்டித்தும், ஏழு தமிழர்களை விடுவிக்க வலியுறுத்தியும் நடைபெறுகிற வாகனப் பேரணியில் பங்கேற்போம்” எனக் கூறியுள்ளார்.

ஏழு பேரின் விடுதலைக்கான மனிதாபிமான குரல்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே இருக்கிறது. ‘வேலூரில் இருந்து சென்னைக் கோட்டையை நோக்கிய பேரணியில், பத்தாயிரம் வாகனங்கள் வரை இடம்பெறலாம்’ என்கின்றனர் தமிழ் உணர்வாளர்கள்.

No comments:

Post a Comment